Latest News

July 21, 2011

நாம் எப்படி தோற்றோம் என புரியவில்லை' : ஸ்டாலின்
by admin - 0

 "" நாம் தேர்தலில் வெற்றிவாய்ப்பை இழந்தோம். வெற்றி பெற்றவர்களுக்கு எப்படி வென்றோம் என்பது புரியவில்லை. நாம் எப்படி தோற்றோம் என்பதும் புரியவில்லை. தி.மு.க.,வினர் மீதான நிலமோசடி புகார்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும்,'' என தி.முக., துணைப்பொதுச் செயலர் ஸ்டாலின் கூறியுள்ளார். செங்கல்பட்டு அடுத்த மறைமலைநகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: நாம் தேர்தலில் வெற்றிவாய்ப்பை இழந்தோம். வெற்றி பெற்றவர்களுக்கு எப்படி வென்றோம் என்பது புரியவில்லை. நாம் எப்படி தோற்றோம் என்பதும் புரியவில்லை. தி.மு.க.,வைப் போல் மிகப்பெரும் வெற்றியோ, மோசமான தோல்வியோ கண்ட கட்சி வேறு இல்லை. தோல்வியடைந்ததும் கட்சியினர் எழுச்சி பெற்றுள்ளனர். கடந்த தேர்தலிலும், தற்போதைய தேர்தலிலும் நாம் பெற்ற ஓட்டுகள் வித்தியாசம் 5 லட்சம்தான். இதை குறைக்க முடியும். சமச்சீர் கல்வி என்பது கருணாநிதியின் திட்டமல்ல. கல்வியாளர்கள், அறிஞர்கள், பொருளாதார நிபுணர்கள் ஆழ்ந்து விவாதித்து கொண்டுவரப்பட்டது. அனைத்து வகுப்பிற்கும் இதே கல்வியாண்டில் இக்கல்வியை கொண்டுவர முயன்றபோது, ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. இதை நடைமுறைப்படுத்த ஐகோர்ட் உத்தரவிட்டும், மேல்முறையீடு செய்வதாக அறிவித்துள்ளனர். இரு மாதங்களாக படிப்பே இல்லை. இனிமேலும் இல்லை. எனவேதான் ஆடு, மாடு தருவதாக கூறியுள்ளார். நாம் ஆட்சியிலிருந்தால் நம்மை ராஜினாமா செய்ய சொல்லியிருப்பார்கள். ஜெயலலிதா ராஜினாமா செய்யவேண்டுமென நாமும் கேட்கலாம். கருணாநிதி அதை விரும்பவில்லை. ஆட்சிக்கு வந்ததும் பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு அதிகாரிகளை அனுப்பி, கடந்த 5 ஆண்டில் நிலம் வாங்கிய தி.மு.க.,வினரின் பட்டியலை மட்டும் தயாரித்துள்ளனர். அவர்கள் மீது புகார் கொடுக்கவும் அறிவித்துள்ளனர். எங்கள் மீது களங்கம் இல்லை என்பதை உணர்த்த, இதுபோன்ற புகார்களுக்கு நீதிமன்ற வழக்கு தொடர்வோம். இதற்கு முந்தைய ஆண்டுகளில் நடந்தவைகளுக்கு ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பாரா? பெருந்தலைவர்களே அழிக்க நினைத்து, அழிந்தனர்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.


மழையால் கலைந்த கூட்டம் : கூட்டம், நகராட்சி மைதானத்தில் நடந்து. இக்கூட்டத்தில், 20 ஆயிரம் தொண்டர்களை குடும்பத்துடன் பங்கேற்ற ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், 10 ஆயிரம் நாற்காலிகள் மட்டுமே போடப்பட்டிருந்தன. மாலை 6 மணிக்கு கூட்டம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 6 மணிக்கு, கூட்டம் துவங்காததையடுத்து, அருகிலுள்ள டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுத்தனர். கூட்டத்திற்கு வராமல் ஆங்காங்கே சுற்றி அலைந்தனர். 8.30 மணிக்கு ஓரளவு கூட்டம் கூடியது. அதன்பின், 8.50 மணிக்கு ஸ்டாலின் வந்தார். அவர் வந்ததும் திடீரென மழை பெய்தது. தொண்டர்கள், தாங்கள் அமர்ந்திருந்த பிளாஸ்டிக் சேர்களையே குடைகளாக பயன்படுத்தினர். மழை தீவிரமானதால் கூட்டம் கலையத்துவங்கியது. Get cash from your website. Sign up as affiliate
« PREV
NEXT »

No comments