Latest News

June 13, 2011

கடலில் வீசப்பட்ட பின்லேடன் உடலைத் தேடும் முயற்சியில் குதிக்கும் அமெரிக்கர்
by admin - 0

அமெரிக்க மக்களுக்கும், உலக மக்களுக்கும் ஒசாமா பின்லேடன் உண்மையிலேயே இறந்து விட்டான் என்பதை நிரூபிப்பதற்காக கடலில் வீசப்பட்ட பின்லேடன் உடலைத் தேடப் போவதாக அமெரிக்க தொழிலதிபரும், நீச்சல் வீரருமான பில் வாரன் என்பவர் தெரிவித்துள்ளார்.

இவர் கலிபோர்னியாவைச் சேர்ந்தவர். வயது 59 ஆகிறது. மீட்புப் பணிகளில் ஈடுபடும் நீச்சல் குழுவில் இடம் பெற்றிருப்பவர்.

பின்லேடன் உடலைத் தான் தேடும் முயற்சிகளில் இறங்க ஆர்வமாக இருப்பதாக அவர் நியூயார்க் போஸ்ட்டுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பில் வாரன் கூறுகையில், நான் ஒரு உண்மையான அமெரிக்கன். தேசபக்தி நிறைந்தவன். அமெரிக்க மக்களுக்கும், உலக மக்களுக்கும் பின்லேடன் உண்மையிலேயே இறந்து விட்டான் என்பதை நிரூபிக்க அவனது உடலைக் கண்டுபிடிக்க ஆர்வமாக உள்ளேன்.

எனக்கு ரஷியாவைச் சேர்ந்த ஒரு தோழி உள்ளார். பின்லேடன் கொல்லப்பட்டு விட்டதாக அமெரிக்கா கூறுவதை தாங்கள் நம்பவில்லை என்று ரஷ்ய உளவுப் பிரிவினர் மத்தியில் பேச்சு இருப்பதாக அவர் என்னிடம் கூறினார்.

நான் அமெரிக்க அரசு சொல்வதையோ அல்லது ஒபாமா சொல்வதையே அப்படியே ஏற்க விரும்பவில்லை. மாறாக, ஒரு உண்மையான அமெரிக்கனாக, இந்த உலகுக்கு பின்லேடன் இறந்து விட்டான் என்பதை நிரூபிக்க விரும்புகிறேன். இதற்காக கடலில் வீசப்பட்ட பின்லேடனின் உடலைக் கண்டுபிடிக்க விரும்புகிறேன் என்றார்.

இந்த உடலைத் தேடும் பணிக்கு 4 லட்சம் டாலர் செலவாகும் என்றும் பில் வாரன் கூறுகிறார். பின்லேடன் உடல் தன்னிடம் சிக்கினால் அதை கப்பலில் வைத்து டிஎன்ஏ சோதனை செய்து பின்லேடன் இறந்ததை நிரூபிக்கப் போவதாகவும் அவர் கூறுகிறார்.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக பின்லேடனைத் தேடி வந்த அமெரிக்கா, மே 2ம் தேதி பாகிஸ்தானின் அபோத்தாபாத்தில் உள்ள ஒரு வீட்டில் வைத்து சுட்டுக் கொன்றது. பின்னர் உடலை கடலில் வீசி விட்டதாக தெரிவித்தது அமெரிக்கா. இந்த செய்தியை உலகுக்கு அறிவித்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட படங்களை வெளியிட மறுத்து விட்டார். அவை மிகவும் கோரமாக இருப்பதால் உலக அளவில் பல பிரச்சினைகள் ஏற்படும் என்று இதற்கு அமெரிக்கா காரணம் கூறியது என்பது நினைவிருக்கலாம்.
« PREV
NEXT »

No comments