Latest News

May 05, 2011

நெற்பயிரை தாக்கும் இலை சுருட்டுப் புழுக்கள்
by admin - 0



தாக்குதல் அறிகுறிகள்: இலைகள் நீளவாக்கில் சுருட்டப்பட்டு மெல்லிய இழைகளால் பின்னப்பட்டிருக்கும். சுருட்டப்பட்ட இலைகளில் பச்சையம் சுரண்டப்பட்டு வெண்மையாக காணப்படும். இலைகள் காய்ந்த சருகு போல் காணப்படும். பயிர் வளர்ச்சிப் பருவத்தில் தாக்குல் அதிகம் இருக்கும்.
தாக்குதல் ஏற்படுத்தும் விதம்: இலை சுருட்டுப்புழுக்கள் இலைகளை நீளவாக்கில் சுருட்டி உள்ளிருக்கும் பச்சையத்தை சுரண்டி சாப்பிடுவதால் இலைகள் வெண்ணிறமாக மாறி பிறகு காய்ந்துவிடும்.
பூச்சி பற்றிய விபரம்: தாய் அந்துப்பூச்சி மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும் முன் இறக்கையில் குறுக்காக இரண்டு கோடுகளும் பின் இறக்கையில் ஒரு கோடும் காணப்படும். இறக்கைகளின் ஓரம் கருமை நிறத்தில் பட்டையாக காணப்படும். தாய் அந்துப்பூச்சிகள் சுமார் 300 முட்டைகள் வரை குவியலாக இடும். ஒவ்வொரு குவியலிலும் 10 முதல் 12 முட்டைகள் வரை நீளவாக்கில் இலை நரம்பின் ஓரத்தில் இருக்கும் முட்டைகள் மஞ்சள் கலந்த வெண்மை நிறத்தில் நீள்கோள வடிவத்தில் இருக்கும். 4 முதல் 6 நாட்களில் முட்டைகள் பொரிந்து இளம் புழுக்கள் வெளிவரும். இளம் புழுக்கள் பசுமை கலந்த மஞ்சள் நிறத்திலும், வளர்ந்தபின் பசுமை நிறத்திலும் காணப்படும். புழுப்பருவம் 25 முதல் 30 நாட்கள் வரை இருக்கும். பின் கூட்டுப்புழு பருவத்தை சுருட்டப்பட்ட இலைக்குள்ளேயே கழிக்கும். கூட்டுப்புழு பழுப்பு நிறத்தில் காணப்படும். 4 முதல் 8 நாட்களில் தாய் அந்துப்பூச்சி வெளிவரும்.
தாக்குதலுக்கான காரணிகள்: காற்றின் ஈரப்பதம் அதிகளவிலும், வெப்பநிலை குறைந்த அளவிலும் உள்ள காலங்களில் இலை சுருட்டுப் புழுவின் தாக்குதல் அதிகளவில் இருக்கும். அதிகப்படியான தழைச்சத்து இடுதல் மற்றும் நெருக்கமான பயிர் இடைவெளி போன்ற காரணிகளும் இவற்றின் பெருக்கத்திற்கு ஏதுவாகின்றன.
ஒருங்கிணைந்த பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகள்:பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு மேல் தழைச்சத்து உரம் இடுவதை தவிர்க்க வேண்டும்.
* வரப்புகளை செதுக்கி களையில்லாமல் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் இலை சுருட்டுப்புழுவின் மாற்று உறைவிடங்களை அழிக்கலாம். * இரவு நேரங்களில் விளக்குப் பொறிகளை வைத்து தாய் அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.* முட்செடிகளின் கிளைகளை பயிரின் மீது படும்படி உராயச் செய்வதன் மூலம் மடங்கியுள்ள இலைகள் கிழிக்கப்பட்டு உள்ளிருக்கும் புழுக்கள் இயற்கை எதிரிகளான கோனியோசஸ் குளவி, ஸ்டைபலினிட் வண்டு மற்றும் சிலந்திகளின் தாக்குதலுக்கு ஏதுவாக இருக்கும். * டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் என்னும் முட்டை ஒட்டுண்ணி அட்டைகளை ஒரு ஏக்கருக்கு 2 மி.லி. என்ற வீதத்தில் நடவு செய்த 25, 40 மற்றும் 55ம் நாளில் ஒட்டுகட்டி வெளியிட வேண்டும். * வளர்ச்சிப் பருவத்தில் பொருளாதார சேதநிலை 10 சதத்தையும், பூக்கும் தருணத்தில் 5 சதத்தையும் தாண்டும்பொழுது வேப்பங் கொட்டைச்சாறு 5 சத கரைசலை தெளிக்க வேண்டும் (5 கிலோ வேப்பம் பருப்பை நன்றாக இடித்து தூளாக்கி ஒரு சாக்கு துணியில் முடிச்சாகக் கட்டி 100 லிட்டர் தண்ணீரில் சுமார் 8 மணி நேரம் வரை வைக்க வேண்டும். பின்னர் சாக்குப்பையினை பிழிந்து வேப்பங் கொட்டைச் சாறுடன் தூளாக்கிய காதி சோப்பு 300 கிராமை கரைத்து தெளிக்க வேண்டும்).
« PREV
NEXT »

No comments