Latest News

February 12, 2018

நான் முருகன் பேசுகிறேன் கேட்கலையோ உங்களுக்கு?! முன்னால் தான் நிற்கிறேன் தெரியலையோ உம் கண்களுக்கு?
by Editor - 0

நான் முருகன் பேசுகிறேன் கேட்கலையோ உங்களுக்கு?! முன்னால் தான் நிற்கிறேன் தெரியலையோ உம் கண்களுக்கு?!

 அன்புடன் அம்மா அறிய!

மாதம் பத்து எனைச் சுமந்து இரவு பகல் கண்விழித்து
 சீராட்டி பாராட்டி நீராட்டி எனைப் பாலூட்டி வளர்த்ததை 
அன்று நான் அறியேன் அம்மா! பின்னாடி நான் வளர்ந்து
 உன் அன்பு தனைக் கண்டு அத்தனையும் உடன் உணர்ந்து
 நித்தம் வியந்து நின்றேன் அம்மா! கோயில் குளம் நான்
 சென்று தெய்வம் தாள் தொழுது வரம் வேண்டி  ஒருபோதும்
 நின்றேன் இல்லை அம்மா! வரம் வேண்டும் வகை குறை
 ஒன்றும் எனக்கு நீ வைத்தாய் இல்லையே அம்மா!

அப்பப்போ வறுமை எமைத் தொட்ட போது உள்ளதை
 எமக்களித்து வெற்று வயிற்றுடன் நீ படுக்கை போன 
போது ஒன்றும் புரியாத வயது பேசாமல் இருந்து
 விட்டேன்! முற்றத்து வேப்ப மரத்து மண்ணில் நானிறங்கி
 விளையாடையிலே மண்ணில் உனை விடுவேனா என
 ஓடிவந்து எனைத் தடுத்ததை எப்படி நான் மறப்பேன்?! 
இப்படி ஓர் தாய் கிடைத்தால் இம்மண்ணில் எத்தனை
பிறப்பும் நான் பிறப்பேன்!!

மீண்டுமோர் பிறப்பெமக்கிருந்தால் அதிலும் உன் மகனாய்
 நான் பிறக்க வேண்டும்! ஆனாலும் ஒன்று அம்மா!
அப்பிறப்பின் போதும் எம் மக்கள் துன்பம் துயர் அங்கு 
தீரவில்லையேல் மீண்டும் நான் நாட்டுக்காயத்தான் 
உயிர் துறப்பேன்! அதிலேதும் தவறென்றால் உன்மகனை 
அதற்காக இப்பொழுதே மன்னித்து விடுங்கள் அம்மா!!

அன்புடன் அப்பா அறிய! 
குறை ஒன்றெனக்கில்லை என்றெனை வளர்த்திட 
நினைத்திட்ட உமக்கு நள்ளிரவு வேளையிலே 
யாருமில்லா நரிஉலவு காட்டினிலே சுடுகாட்டு 
மூலையிலே ஒற்றைக் கொள்ளி தனை வைத்திருந்தால் 
மட்டும் என் கடன் முடிந்திருக்குமோ?! மீண்டுமோர் 
பிறப்பெடுத்து என் மகனாய் உமைப் பெற்று உம் 
தேவை எல்லாம் தீர்த்து வைத்தால் அன்றோ என்கடன் 
முடிந்து விடும்?!


உடன் பிறந்தோர்க்கு....!

சித்தி வீட்டுப் புளுதியிலே படலைக்கு மிக அருகினிலே 
பொய்யாக பந்தலிட்டு குழி தோண்டி அடுப்பு வைத்து 
சிரட்டையிலே கறி காச்சி சோற்றையும் உடன் ஆக்கி 
விளையாட்டாய்ப் பரிமாறி நால்வரும் மகிழ்ந்திருந்தோமே
இப்போது அது நினைவிருக்கா?! பட்டம் ஒன்று கட்டி 
வயல்வெளி நாம் சென்று ஏற்றி அன்று நிற்கையிலே 
தானாக அது அறுத்து வெகு தூரம் தான் சென்று குளம் 
ஒன்றில் வீழ்ந்துவிட ஓடி அதை எடுக்கையிலே 
அத்தனையும் கிழிந்துவிட நாள் முழுதும் உண்ணாது 
துக்கம் அனுஸ்டித்தோம் நினைவிருக்கா?!

போளை சில நாம் வாங்கி வீட்டருகு ஒழுங்கை சென்று 
அடித்து அன்று நிற்கையிலே ஒன்று அதில் வீணாக 
உடைந்ததென்று அழுதிருந்தோம் நினைவிருக்கா?! 
ஈச்சங்குலை பறித்து உப்பு நீர் கொஞ்சம் தெளித்து 
வைக்கோரில் மறைத்து வைத்து விடியுமுன்னே எடுக்க 
அதை ஓடையில பாம்மொன்று படுத்திருக்கப் பயந்துவிட்டோம் 
நினைவிருக்கா?! ஒரு கண் அணில் அரித்திவிட 
இரண்டெமக்கென்று நொங்கு பொறிக்கிக் குடிப்போமே 
நினைவிருக்கா?!

பள்ளி செல்லும் வழி எங்கும் எம்பாட்டில் பாட்டு படித்துச் 
செல்வோமே அதுவேனும் நினைவிருக்கா?! 
இடையிடையே கொவ்வம் பழம் கோவைப்பழம் 
இலந்தைப் பழம் அண்ணாஉணா பழம் பறித்துச் செல்கையிலே 
காஞ்சுறோண்டி பட்டதென்று ஒருநாள் கலங்கி நின்றோமே 
அதுவேனும் நினைவிருக்கா?! இத்தனையுடன் உங்களையும் 
நான் இன்னும் மறக்கவில்லை! என்நினைவு தனைக் 
கொஞ்சமும் இழக்கவில்லை!!

உறவுகள் நட்புக்களுக்கு....!
ஏனோ நானறியேன் பெரிதாய் ஒன்றும் பேச நான் விரும்பேன்! 
ஆனாலும் நான் உணர்வேன் உமக்கெல்லாம் என் மீது ஓர் 
அன்பு இருந்ததென்று! அத்தனைக்கும் 'நன்றி' என்று 
மூன்றெழுத்தில் ஓர் வார்த்தை சொன்னால் போதாதென்று 
நான் அறிவேன்! ஆனாலும் நன்றி சொல்ல அதை விட வேறோர் 
நல்வார்த்தை நான் அறியேன்! அதனால்தான் சொல்கிறேன் 
அத்தனைக்கும் நன்றி என்று!!



யாவரும் எனை மன்னித்து விடுங்கள்! 

உமையெல்லாம் தவிக்க விட்டு நான் சென்றது என்னமோ 
உண்மைதான்! செய்தி கேட்டு நீர் அழுததும் என்னமோ 
உண்மைதான்! வாழும் போதும் துயர் கொடுத்திருப்பேன்! 
உம் பேச்சை மறுத்திருப்பேன்! எனை மன்னித்து விடுங்கள்!!


நான் ஏன் தீக்குளித்தேன்...?!

தாயகத்து கதறல் ஒலிகள் தினமும் என் காதில் வீழ்ந்தது! 
அழிக்கப்படும் எம் தேசம் கண் முன்னே தெரிந்தது! 
மெல்லனவே எம்மினத்தின் பிணவாடை எனக்குள் 
அடித்தது! கனவிலும் இவையே காட்சிகளாய் வந்து 
நின்றது! இவை எண்ணியே என் மனது தானே அழுது 
நின்றது! அத்தனையும் என்றோ என்னுள் தீ மூட்டி விட்டது! 
செங்குருதித் துணிக்கைகள் யாவும் தீக்கட்டிகளாய் 
என்னுடல் சுற்றி  வந்தது! எனைக்கேட்காதே கண்களும் 
கலங்கி நின்றது!

என்னுயிரை என்றும் நான் பெரிதாய் எண்ணியதில்லை! 
அது உமக்கு தெரியாததும் இல்லை! என் அற்ப உயிர் விட்டால் 
ஆங்கே ஆயிரம் குழந்தைகள் காக்கப்படுவார்கள் என்று 
எண்ணினேன்! வழிந்தோடும் செங்குருதி ஆறு தடுக்கப்படும் 
என்று எண்ணினேன்! வண்ண வண்ண புறாக்கள் அங்கு துள்ளி 
விளையாடும் என்று எண்ணினேன்! உயிர் கொடுத்த தமிழ் 
தாயவள் பொட்டு வைத்து தலைவாரிப் பூச்சூடவெனப் 
பூத்திருக்கும் வண்ண மலர்ச்சோலைக்கு வானிலிருந்து 
ஆனந்தக் கண்ணீர் மழை சொரிந்து நிற்பேன் 
என்று எண்ணினேன்! 

நீதி கூறு உலகே எனக் கேட்க ஐநா ஏகினேன்! எரியும் 
என்னுடல் முழுதாய் எரியட்டும்! தடுக்க யாரும் 
இல்லாதிருக்கட்டும்! வேளை பார்த்துக் காத்திருந்தேன்! 
மாலையாகிக் கொண்டிருந்தது! உயிரோடெரிக்கேன் 
உனையென எண்ணையும் மறுத்தது! காரணம் 
எடுத்துரைத்தேன் மெதுவாய் ஏற்றுக் கொண்டது! 
கொஞ்சமாய் மழைக்கத் தொடங்கிற்று! இனியும் 
தாமதம் கூடாதென்று தீயிட்டேன்! 

 எரியும் என்னுடல் எரிந்து வீழுமுன்னே மலர்ந்தது 
ஈழம் எனும் குரல் ஒன்று கேட்காதா எனக் காத்திருந்தேன்! 
எம் கொடி ஆடும் தேசம் தெரியும் என்று பாத்திருந்தேன்! 
என்ன செய்ய? வெள்ளையனும் கல் நெஞ்சன் போலும் 
கொஞ்சமும் மனம் உருகவில்லை! எம்மினத்தை மனிதம் 
என எண்ணிப் பார்க்கவுமில்லை! என்பும் எரிந்துருகத் 
தொடங்கிற்று!  இனியும் உயிர் தரிக்க ஏதும்  இடம் இன்றி 
மெல்ல உயிர் விட்டுப் பிரிந்தேன்! 

எதுவான போதும் என்ன? என்னுடலில் நானிட்ட தீயைக் 
காட்டிலும் உணர்வுள்ள நெஞ்சங்கள் அனைத்திலும் ஓர் 
பொறி தொற்றி நிற்பதைப் பார்க்கிறேன்! அவை 
அத்தனையும் ஒரு நாள் ஒன்று சேரும்! அத்திருநாள் 
விரைவில் வந்து சேரும்! அப்போது சூழ்ந்திருக்கும் 
இவ்இருள் மெல்லன விலகிவிடும் அன்று! கொட்டமடிக்கும் 
கள்ளப் பகை உள்ள இடம் விட்டு தானே ஓடிவிடும் அன்று! 
தேடிவந்து மயில்க் கூட்டம் தோகை விரித்தாடும் அங்கே! 
சுற்றி வந்து மீனினம் தமிழ் தேசிய கீதம் இசைக்கும் அங்கே! 
இக் கண்ணீரும் செந்நீரும் அக்கணம் வரும் வரைக்கும் 
மட்டுமே! மலர்ந்து நிற்கும் ஈழமதில் ஒரு நாள் மட்டும் 
வாழும் சிறு புழுவாயெனிலும் நான் பிறக்க வேண்டும்! 
அம்மண்ணில் புரண்டு புரண்டு அள்ளிதின்று நான் 
மகிழ வேண்டும்!!

உமைத்தேடி நான் வருவேன்..!

ஏழேழு கடல் தாண்டி எழுனூறு மலை தாண்டி 
வெட்டை வெளி சில தாண்டி முள்ளுக் காடும் தாண்டி 
வானவெளி தனையும் தாண்டி நான் போன இடம் 
வெகு தூரம்! உற்றார் பலர் கண்டேன் நண்பர் சிலர் 
கண்டேன்! பார்த்துப் பலகாலமாயிற்றே! அடையாளம் 
சரியாகத் தெரியவில்லை! இருந்தும் எனைக்காண 
ஆவலுடன் ஓடிவந்தார் ஆங்கே! கட்டித்தளுவி அனைவர் 
சுகமும் கேட்டு நின்றார் ஆங்கே! 

விடுமுறைகள் பெரிதாய் ஆங்கே கிடைப்பதில்லை! 
கிடைப்பினும் வந்து செல்லும் வலு உடலில் ஏனோ 
இருப்பதில்லை! வீட்டுச் சாப்பாடு பல நாள் இல்லையே 
காரணம் அதுதானோ சரியாய்த் தெரியாதெனக்கு! ஆனாலும் 
முடிந்த போதெல்லாம் உமைத்தேடி நான் வருவேன்! 
அனைவருடனும் கதைத்து விட்டுதான் நான் போவேன்! 

போன மாதம் மதியமே நான் வந்துட்டன்! சரியான 
வெய்யில்! தாகம் அதிகமாயிற்று! கூடவே கொஞ்சம் 
பசியும் தான்! அடுப்படிக்குள் சென்று பார்த்தேன்! 
பாத்திரங்கள் கழுவப்பட்டு அழகாகவே அடுக்கப்பட்டும் 
இருந்தன! அங்கும் இங்கும் தேடிப் பார்த்தேன்! சாப்பாடு 
ஒன்றும் இருக்கவில்லை! சமையல் அன்று தாமதம் 
போலும்! அல்லது இப்போதெல்லாம் நீங்கள் 
சமைப்பதில்லைப் போலும்! கையில் ஏந்திக் கொஞ்சம் 
நீர் குடித்து விட்டு உம்மோடு பேச முன்னாடி வந்தேன்! 
எல்லோரும் ஒன்று சேந்து என்னோட நிழற்படம் பார்த்து 
ஏதோ சொல்லி அழுத வண்ணம் தான் இருந்தீர்! எனை 
யாரும் பார்க்கவில்லை! அழாதீர்கள் என நான் சொன்னதை 
கேட்கவுமில்லை! ஏன் நான் உங்கள் கண்களில் 
படவில்லையா?! சொல்வது உண்மையில் 
கேட்கவுமில்லையா?! 

உம் தோழில் தொட்டு ஆறுதல் கூற நினைத்தேன்! 
கையில் தீக்காயம் நன்றாய்ப்பட்டு விட்டது! கொஞ்சமும் 
இயங்க மறுத்தது! என் செய்வேன் நான் அதற்க்கு?! 
மாலையானதும் விட்டுப் போய்விட்டேன்! 

இன்று வரக் கொஞ்சம் தாமதமாகி விட்டது! 
வேளைக்கே இருட்டி விட்டது! கதவு பூட்டப்பட்டுக் 
கிடக்கிறது! ஜன்னல் எல்லாம் சாத்தப்பட்டும் 
கிடக்கிறது! சத்தம் ஒன்றும் கேட்டவுமில்லை! 
வெளிச்சம் ஒன்றும் தெரியவுமில்லை! நித்திரையில் 
நீர் போலும் உம் தூக்கம் கலைக்க நான் விரும்பவில்லை! 
விடியும் வரை காத்திருக்க எண்ணினேன்! 

என்ன குளிர் இது?! தோலறுத்து தசை விலக்கி என்பூடு 
புகுந்து என்னுடலைக் கொஞ்சம் விறைக்க வைக்கிறது! 
பின்னாடி பார்க்கிறேன்! விளையாட்டாய் நான் வைத்த 
வெள்ளரி பூத்திருக்கிறது! கத்தரியும் காய்த்திருக்கிறது! 
நீர் விடப்படவில்லைப் போலும் கொஞசம் வாடி நிற்கிறது!

கொடுக்கப் பட்ட நேரம் முடிவடைந்து விட்டது போலும்! 
எனையாரோ பின்னின்றிழுப்பது போல் உணர்கிறேன்! 
நிறை அற்றுப் போவதாய் உணர்கிறேன்! பாதங்கள் தரை 
தொட மறுக்கின்றன! என்னுடல் மேலே பறக்க விளைவதாய் 
உணர்கிறேன்! பின்கதவைப் பற்றிப் பிடிக்கிறேன்! 
என்னால் முடியவில்லை! 









இதற்க்கு மேல் இங்கிருக்க எனக்கு அனுமதி இல்லை! 
அதனால் தான் இத்தனையும் எழுதி வைத்து விட்டுப் 
போகிறேன்! மழை வந்து என் எழுத்தைக் கரைக்காமல் 
இருக்கட்டும்! காற்றில் கடதாசி பறக்காமல் கிடக்கட்டும்! 
வாற மாசம் மூன்றாம் கிழமை மீண்டும் வர அனுமதி 
எனக்குண்டு! முற்பகலே வந்துடுவேன்! மூலையிலை 
நின்றிடுவேன்! முணுமுணுத்தே பேசிடுவேன்! ஒருமுறை 
எனைத்திரும்பிப் பார்த்திடுங்கள்! 
என் பேச்சைக் காது கொடுத்துக் கேட்டிடுங்கள்!

வேறென்ன?! எம்மக்கள் துயர் அங்கு தீரும் வரை 
மெல்லெனத் தென்றல் அங்கு வீசும் வரை என் 
ஆத்மாதான் சாந்தி அடைந்திடுமோ?! என் மனக்கவலை 
தான் தீர்ந்திடுமோ?! நேரமாகி விட்டது! இப்போது 
சென்று மீண்டும் வருகிறேன்! ஊர்ப்பக்கம் நான் 
செல்லேன்! நாயெல்லாம் ஊளையிட்டு நிற்குதங்கே! 
யாரும் வீடும் நான் செல்லேன்! பேயென்றென்னிப் 
பயந்திடரோ?! குரல் கொடுத்தெனை விரட்டிடரோ?! 

இப்படிக்கு,
என்றும் உங்கள் அன்பின்,
பாசமிகு முருகன்.

பிற்குறிப்பு:- மரணத்தின் பின் என் கனவில் தான் முருகன் முதன்முதலில் வந்தான்! வார்த்தை சில பேசிவிட்டும் சென்றான்! ஆக நான் நினைக்கிறேன் 
அவன் என்னுடனோ  அல்லது என்னூடாகவோ ஏதோ பேச நினைத்தான் என்று! ஆதலால் அவன் தான் இதை எனை எழுத வைத்தான் என்பதை நான் உணர்கிறேன்!

நன்றியுடன்,
உடன் பிறவா சகோதரன்,
செல்வா மணி.
(இது முருகதாசனின் அந்தியேட்டி கல்வெட்டில் வெளிவந்த பதிவின் மீள் பதிவு)

« PREV
NEXT »

No comments