Latest News

January 20, 2018

ஆண்டாள் சர்ச்சை | கவிஞர் வைரமுத்து உருக்கமான விளக்கம்
by admin - 0

ஆண்டாள் சர்ச்சை | கவிஞர் வைரமுத்து உருக்கமான விளக்கம்சென்னை: செய்யாத தப்புக்காக இல்லாத சொல்லுக்காக பொல்லாத பழியேற்றுள்ளேன் என வைரமுத்து உருக்கமாக பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.



கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து கூறிய கருத்து பெரும் சர்ச்சையாக்கப்பட்டது. வைரமுத்துக்கு எதிராக இந்து அமைப்புகள் போராட்டங்களை நடத்தினர்.

அவருக்கு எதிராக பல்வேறு காவல்நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன. இதனை எதிர்த்து வைரமுத்து தொடர்ந்து வழக்கில் அவருக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்ற அனைத்து வழக்கு விசாரணைக்கும் இடைக்கால தடைவிதித்தது.


  • வைரமுத்து விளக்கம்

    இந்நிலையில் தன் மீதான ஆண்டாள் பற்றிய சர்ச்சைக் குறித்து கவிஞர் வைரமுத்து விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் உருக்கமாக பேசிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

  • மனம் உடைக்கப்பட்டிருக்கிறது

    அதில் கடந்த 10 நாட்களாக தன்னுள் ஒலித்துக்கொண்டிருந்த தமிழ்க்குயில் மூச்சையுற்று கிடப்பதாக தெரிவித்துள்ளார். தனது மனம் உடைக்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

  • புகழ்பாட நினைத்தது தவறா?

    ஆண்டாள் பற்றி நான் ஆராய்ச்சி செய்தது தவறா?ஆண்டாள் பிறந்த ஊரில் அவர் புகழ்பாட நினைத்தது தவறா? ஆண்டாள் குறித்து கட்டுரை எழுத நினைத்தது தவறா? என்றும் வைரமுத்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

  • முதல் பெண் விடுதலை குரல்

    திருவள்ளுவர், கம்பர், அப்பர், திருமூலர் உள்ளிட்டோர் குறித்தும் கட்டுரை எழுதியிருக்கிறேன் என்றும் வைரமுத்து தெரிவித்துள்ளார். தமிழ்வெளியில் எழுந்த முதல் பெண் விடுதலை குரல் ஆண்டாளுடையது என்றும் அவர் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

  • பேராசிரியர்களின் கட்டுரை

    ஆண்டாள் குறித்து 3 மாதங்களாக ஆராய்ச்சி செய்தேன் என்றும் வைரமுத்து கூறினார். ஆண்டாள் தேவதாசி என பேராசிரியர் நாராயணன், கேசவன் ஆகிய 2 பேரின் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது என்பதைதான் மேற்கோள் காட்டினேன் என்றும் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

  • உயர்ந்தகுல பெண்களுக்கே..

    எனது கருத்தாக கூறவில்லை, உயர்ந்தகுல பெண்களுக்கே தேவதாசிகளாக இருக்க உரிமை வழங்கப்படும் என்று உயர்வாகதான் பேசினேன். எனது விருப்பப்படி பெருமாளைதான் திருமணம் செய்துகொள்வேன் என்று உறுதியாக இருந்தவர் ஆண்டாள் என்று பெருமைப்படுத்திதான் கூறினேன் என்றும் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

  • களங்கம் ஏற்படுத்துவேனா?

    ஆண்டாள் குறித்து எத்தனையோ மேற்கோள்களை காட்டினேன் என்றும் வைரமுத்து தனது வீடியோவில் தெரிவித்துள்ளார். ஆண்டாளுக்கு களங்கம் ஏற்படுத்த நினைத்திருந்தால் அவர் பிறந்த ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு சென்றிருப்பேனா என்றும் வைரமுத்து கேள்வி எழுப்பினார்.

  • இழிவுபடுத்திவிட்டனர்

    ஆண்டாளையும் , என் தாயையும் ஒன்றாக பார்ப்பவன் நான் என்றும் வைரமுத்து கூறியுள்ளார். ஆண்டாள் தன்னுடைய தாய் என்றும், ஆண்டாள் தமிழச்சி என்றும் வைரமுத்து புகழாரம் சூட்டினார். ஆண்டாள் குறித்து உயர்வாக சொன்னதை தாழ்வாக சித்தரித்து இழிவுபடுத்திவிட்டனர் என்றும் வைரமுத்து வேதனையுடன் தெரிவித்தார்.

  • பொல்லாத பழியேற்றுள்ளேன்..

    தனக்கு தமிழ்ப்பால் ஊட்டிய தாய் ஆண்டாளை தான் சிறுமைப்படுத்துவேனா என்ற அவர் தன்னை தமிழ் சமூகம் சந்தேகப்படலாமா என்றும் உருக்கமாக கேட்டுள்ளார் வைரமுத்து. செய்யாத தப்புக்காக, இல்லாத சொல்லுக்காக பொல்லாத பழியேற்றுள்ளேன் என்றும் வைரமுத்து தெரிவித்தார்.

  • ஆண்டாள் விவகாரத்தில் கலவரம்

    யாரோ மதம் கலந்த அரசியலுக்காகவோ; அரசியல் கலந்த மதத்திற்காகவோ தனது கருத்தை திரித்து விட்டனர் என்றும் வைரமுத்து கூறினார். ஆண்டாள் விவகாரத்தில் மத இன கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

  • வருத்தம் தெரிவித்த பின்னரும்

    புதிய தலைமுறையினரும், இளைய தலைமுறையினரும் பயன் பெறவே கட்டுரை எழுதினேன் என்றும் அவர் தெரிவித்தார். என் தமிழுக்காக மனிதாபிமானத்துடன் தான் வருத்தம் தெரிவித்ததாகவும் ஆனாலும் அதன் பிறகும் தன்பேசியது குறித்து திரித்து கூறுகிறார்கள் என்றும் வைரமுத்து கூறினார்.

« PREV
NEXT »

No comments