Latest News

December 01, 2016

தமிழ் மக்களுக்கான பற்றுக்கோடென்ன? எதனைப் பற்றுவது? யாரைப் பற்றுவது?-மு.திருநாவுக்கரசு
by admin - 0

வெற்றியின் வடிவில் தோல்வியும், தோல்வியின் வடிவில் வெற்றியும் ஏற்படுவதுண்டு” இதனை நீண்ட நெடும் வரலாற்றிலும் தனிப்பட்டோரின் வாழ்விலும் ஆங்காங்கே காணமுடியும். 
இயற்கை மனிதனுக்கு கொடுத்துள்ள நிரந்தர எதிரி “நோய்” மனிதன் மனிதனுக்குக் கொடுத்துள்ள நிரந்த எதிரி “யுத்தம்”. காப்பியங்களும், புராணங்களும், இதிகாசங்களும், வரலாறுகளும் மற்றும் கட்டுக்கதைகளும் அதிகம் யுத்தங்களைப் பற்றிப் பேசுகின்றன. யுத்தம் மனித வாழ்வில்  நிர்ணயகரமான ஒரு பகுதியாகவும் துயர்தோய்ந்த ஒரு பக்கமாகவும் காணப்படுகிறது.

வரலாற்றில் அதிக காலம் நீண்டு நெடுத்து நிகழும் யுத்தம் சிலுவைக்கும் பிறைக்கும் இடையேயான சிலுவைப் போலீலீகும். கிபி 1095ஆம் ஆண்டிலிருந்து கிபி 1291ஆம் ஆண்டு வரையான 196 வருடங்கள் “சிலுவை யுத்தம்” காலத்தால் நீண்டு நடந்ததாக வரலாறு கூறுகிறது. உண்மையில் அது இன்றுவரை அதாவது இக்கட்டுரை எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் இக்கணம்வரை, அல்லது இக்கட்டுரையை வாசகர்கள் வாசித்துக் கொண்டிருக்கும் இக்கணத்திலுங்கூட “சிலுவை யுத்தம்” தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

அதாவது நேரடி அர்த்தத்தில் அதை சுமாராக இரண்டு நூற்றாண்டுகள் என்று கூறினாலும் நடைமுறை அர்த்தத்தில் அது வெவ்வேறு வடிவங்களில் பத்து நூற்றாண்டுகளைத் தொட்டு இன்றுவரை நீடிக்கின்றது. மத்திய கிழக்கில் இன்று பல்வேறு வடிவங்களிலும், பல்வேறு பெயர்களிலும் நடந்துகொண்டிருக்கும் யுத்தம் அந்தச் சிலுவை யுத்தத்தின் தொடர்ச்சியே.

கோமரின் “இலியட்” என்ற காப்பியத்தில் வரும் “ட்ரோயன் யுத்தம்” என்பது மேற்படி மத்திய கிழக்கிற்கும் மேற்குலகத்திற்கும் இடையேயான யுத்தத்தைப் பற்றிய மூலக்கூறை வெளிப்படுத்தி நிற்கும் காப்பியமாய் காணப்படுகிறது. ஆனால் இது வெறுமனே ஒரு காப்பியமல்ல என்பதும் நடைமுறையில் நிகழ்ந்த ஒரு வரலாறு என்பதையும் 19ஆம் நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட வரலாற்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன. 

இந்த யுத்தம் கிறிஸ்துவுக்கு முன் 1194க்கும் 1184க்கும் இடைப்பட்ட பத்தாண்டுகளாக நிகழ்ந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கோமரின் காப்பியத்திலும் “ஹெலன்” என்ற கிரேக்க அழகியை மீட்பதற்காக நிகழ்ந்த யுத்தமாக அது எழுதப்பட்டுள்ளது. இந்த “ட்ரோயன்” என்ற நகரம் துருக்கியிலுள்ள இன்றைய “ஹிசார்லிக்” என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதன்பின்பு கிமு 490ஆம் ஆண்டில் பாரசீகத்திலிருந்து கிரேக்கத்தை நோக்கி படையெடுப்புக்கள் நிகழத் தொடங்கின. முதலில் கிமு 490ல் பாரசீகப் பேரரசன் டாரியஸ் கிரேக்கத்தின் மீது படையெடுத்தான். இதைத் தொடர்ந்து பத்தாண்டுகளின் பின் பாரசீகப் பேரரசனான அவரது மகன் சர்ச்சீஸ் கிமு 480ல் மேற்கிற்கு எதிராக வரலாறு காணாத பெரும் படையெடுப்பை கிரேக்கத்தின் மீது மேற்கொண்டார்.

 அதில் ஆரம்பத்தில் அவர் பெரு வெற்றிகளை ஈட்டினார். ஆனால் இறுதியில் கிமு 479ஆம் ஆண்டு பெரும் தோல்வியுடன் அவர் பாரசீகத்திற்குத் திரும்பினார். அத்தோடு பாரசீகப் பேரரசு தன் செல்வாக்கை இழந்தது. சிந்து நதியிலிருந்து சின்னாசியா உட்பட கிரேக்கத்தின் விளிம்புவரை படர்ந்திருந்த ஒரு பெரும் பேரரசு சரிந்து வீழ்ந்தது. இதன்பின்பு மேற்படி சிலுவை யுத்தங்களின் இரண்டு நூற்றாண்டு காலங்களை வரலாறு கண்டது. அது இன்றுவரை தொடர்கிறது.

மத்திய கிழக்கு நாடுகளின் இஸ்லாமிய மதப் பிரிவுகளுக்கிடையே, அரசுகளுக்கிடையே நிகழும் யுத்தங்கள் என்றாலென்ன, இதில் மேற்குல நாடுகளும் ரஷ்யாவும் பங்குபற்றும் யுத்தங்கள் என்றாலென்ன அவை எவ்வடிவிலானாலும் மேற்படி சிலுவை யுத்தங்களின் தொடர்ச்சியேயாகும்.

மேற்குலகிற்கும் மத்திய கிழக்கிற்கும் இடையேயான யுத்தமானது ஆழமான வரலாற்று அடிப்படையைக் கொண்டது. மிக ஆழமான பகை உணர்வுகளையும், யுத்த மனப்பாங்கையும் கொண்டது. பொதுவாக மத்திய கிழக்கு எண்ணெய் வளங்களை அடிப்படையாகக் கொண்டு நவீன வரலாற்றில் தனக்கான முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. 

இந்த எண்ணெய் வளங்கள் இப்போது நுகரப்படும் இதேயளவில் தொடர்ந்து நுகரப்படுமிடத்து இவ் எண்ணெய் வளங்களின் ஆகக்கூடிய ஆயுட்காலம் இன்னும் முக்கால் நூற்றாண்டு மட்டுமே. இந்த முக்கால் நூற்றாண்டை கருத்தில் கொண்டு இந்த எண்ணெய் வள நாடுகளை கையாளும் வகையில் ஒரு மாபெரும் நீண்டகால திட்டத்தின் அடிப்படையில் இந்த யுத்தங்களும், அவை சார்ந்த நடவடிக்கைகளும் நகர்கின்றன. இதில் எதுவும் உதிரியானவையல்ல.

இங்கு மேற்படி இந்த யுத்தத்திற்கான காரண காரியங்களை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமல்ல. அதற்கப்பால் ஒரு நீண்ட நெடுங்கால யுத்தம் வரலாற்றில் நிகழ்ந்து வருவதை எடுத்துக் காட்டுவது மட்மே இக்கட்டுரையின் நோக்கமாகும். இந்த யுத்தங்களின் உட்பொருளும் தலைவிதியும் தனித்து ஆராயப்பட வேண்டிய விடயமாகும்.

மனிதகுல வரலாற்றில் 7 கோடியே 64 இலட்சம் பேருக்குமேல் கொல்லப்பட்ட மிகப்பெரும் யுத்தமாய் இரண்டாம் உலக மகாயுத்தமாய் உள்ளது. இந்த யுத்தத்தில் சோவியத் யூனியன் மக்கள் 2 கோடியே 60 இலட்சம் பேர் இராணுவம் உட்பட கொல்லப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக 1993ஆம் ஆண்டு ரஷ்ய அரசால் அறிவிக்கப்பட்டது. 

இதில் இராணுவத்தினர் 87 இலட்சம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் வரலாற்று ஆய்வாளர்களின் கணக்கின்படி 4 கோடி பேர் சோவியத் தரப்பில் கொல்லப்பட்டனர் என அஞ்சப்படுகிறது. அதன்படி இராணுவத்தினரின் தொகை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது.

இலட்சக்கணக்கான ஆண்டுகால மனிதகுல வரலாற்றில் இதுவரை காணப்பட்ட மிகப் பெரிய படையெடுப்பு 1941ஆம் ஆண்டு யூன் 22ஆம் தேதி ஹிட்லர் ஆரம்பித்த பார்பர்ரோஸா (Operation Barbarossa)  இராணுவ நடவடிக்கையாகும்.

40 இலட்சம் படையினரைக் கொண்டு ரஷ்யா நோக்கி இப்படையெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. இதில் 6 இலட்சம் மோட்டார் வாகனங்களும், 7 இலட்சம் குதிரைகளும், மற்றும் கனர ஆயுதங்களும் நகர்ந்தன. கூடவே போர்விமானங்களும்.

1939ஆம் ஆண்டு ஸ்டாலினிடமிருந்து பெறப்பட்ட பல டசின் கணக்கான சோவியத் மிக் யுத்த விமானங்களைக் கொண்டு ஹிட்லர் ரஷ்யாவைத் தாக்கினார். வெற்றி மேல் வெற்றி ஹிட்லருக்கு குவிந்தது. நகரங்களுக்கு மேல் நகரங்கள் வீழ்ந்தன. ரஷ்யாவின் மேற்குப்புறத்தில் உக்ரைன் உட்பட்ட பகுதியில் 50 இலட்சம் ரஷ்யர்களை சிறைபிடித்த ஹிட்லரின் நாசிப்படை அவர்களை பட்டினிச் சாவின் மூலம் கொல்லும் கொடூரமான திட்டத்தின் மூலம் கொன்றொழித்தது. இந்த 50 இலட்சத்தில் ஒரு சிறு தொகையினர் மட்டுமே உயிர் தப்பினர்.

1925ஆம் ஆண்டு ஹிட்லரால் வெளியிடப்பட்ட “மெயின் கேம்ப்” (Mein Kampf) என்ற நூலில் ரஷ்யாவிற்கு எதிரான யுத்தமும் அதில் பட்டினிச்சாவு பற்றிய திட்டமும் வெளியிடப்பட்டிருந்தன. இதனை ஏற்றுக் கொண்டுதான் ஜேர்மானிய மக்கள் ஹிட்லரை ஆட்சிக்கு அமர்த்தினர். 

இதில் யூதயினப் படுகொலைக்கான திட்டமும் விவரிக்கப்பட்டிருந்தது. இவையனைத்தையும் தெரிந்து கொண்டும், ரஷ்யாவிற்கு எதிரான ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் வெளிப்படையாக ஹிட்லரால் தெரிவிக்கப்பட்டிருந்ததை தெரிந்து கொண்டும் ஹிட்லருக்கு ஸ்டாலின் மிக் ரக யுத்த விமானங்கள் 42ஐ விற்பனை செய்திருக்கிறார். 

ஹிட்லர் வெற்றி மேல் வெற்றிகளை குவித்த போதிலும் அவரது படை மாஸ்கோவை அடைந்தது அடர்ந்த குளிர்காலமான வின்டர் காலத்திலாகும். ஜெனரல் வின்டர் ஹிட்லரின் படைகளை வெற்றிகரமாக தோற்கடித்தார். ஆனாலும் ரஷ்ய மக்கள் குறைந்தது 2 கோடியே 60 இலட்சத்திற்கும் கூடியது 4 கோடிக்கும் இடையில் கொன்றுவிக்கப்பட்டனர். ஹிட்லரின் வெற்றிகள் சோவியத் மக்களின் அரும்பெரும் தியாகத்தினாலும் ரஷ்யாவிற்கு இருந்த வின்டரின் கருணையினாலும் தோற்கடிக்கப்பட்டன. 

யூத மக்களுக்கு எதிராக இறுதித் தீர்வு (final solution)  என்று கூறிக்கொண்டு  யூதயின மக்களை  ஹிட்லர் வகைதொகையின்றி கொன்றுகுவித்தார். போலந்தில் அமைக்கப்பட்ட ஓஸ்ட்விச் படுகொலை முகாம்-1 (Auschwitz Concentration Camp-1) என்ற ஒரு முகாமில் மட்டும் 11 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். இதில் யூதர்களின் தொகை 10 இலட்சம் பேராகும்.

ஹிட்லர் “இறுதித் தீர்வு” என்று எதனை யூத மக்களுக்கு தீர்வாக்கினாரோ அதுவே அவருக்கான இறுதித் தீர்வாக அமைந்தது. இறுதியில் அவரது பெரும்படை தோல்வியுற்று சரணடைந்ததுடன் ஹிட்லரின் பெரு வெற்றிகளுக்கு மயமானம் உருவானது. பெரும் படைகொண்ட ஹிட்லரின் வெற்றிகளும் மயானத்திற்கு போயின  ஹிட்லரும் எரிந்து சாம்பலானார்.

கிமு 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க வரலாற்று ஞானி ஹெரடோடஸ் (Herodotus) எழுதிய பின்வரும் வரலாற்று மதிப்பீடு இங்கு கவனத்திற்குரியது. “வெற்றிகள்: அந்த வெற்றிகளின் விளைவுகளாய் மமதையையும், அநீதியையும் தலையெடுக்கிறது. அந்த மமதைகளினதும், அநீதிகளினதும் விளைவுகளாய் வீழ்ச்சி ஏற்படுகிறது” இது யுத்த வெறியர்கள் அனைவருக்கும் சொல்லி வைக்க வேண்டிய பாடமாகும்.

வரலாறு காணாத மாபெரும் இராணுவத்தைக் கொண்டிருந்த ஹிட்லர், வராலாறு காணாத இராணுவ படையெடுப்பால் வெற்றிமேல் வெற்றிகளைக் குவித்த ஹிட்லருக்கு அவரின் வெற்றியின் வடிவிலேயே அவருக்குத் தோல்விகள் காத்திருந்தன. யூதயினத்திற்கு அவர்களது அழிவின் வடிவில் வெற்றி காத்திருந்தது. ஹிட்லரின் யூதயின அழிப்பே யூதர்களுக்கு ஒரு யூத தேசத்தை பரிசளித்தது.

“வரலாற்றை பலரும் விளக்குவதுண்டு. ஆனாலும் அந்த வரலாற்றிலிருந்து படிப்பினைகளைப் பெறுவதில்லை” என்ற கூற்றும் இத்தகைய யுத்த வெறியர்களுக்கும், மனிதயினப் படுகொலையாளர்களுக்கும், படுகொலைக் கொள்கை கொண்டோர்களுக்கும் எப்போதும் பொருந்துகிறது.

“கொல்பவன் வெல்வான்” என்ற முசோலினியின் கூற்றையும், “வெற்றியே நீதி” என்ற நியாட்சேயின் கூற்றையும் பின்பற்றிய ஹிட்லரின் வரலாற்றிலிருந்து மனிதயினப் படுகொலையாளர்கள் ஒருபோதும் பாடம் படிப்பதாக இல்லை.

தமிழ் மக்களுக்கு என்ன வேண்டுமென்பதை சிங்கள மக்களால் ஒருபோதும் புரிந்து கொள்ளமுடியாது. ஏனெனில் தமிழ் மக்களை அந்நியர்களாகவும், படையெடுப்பாளர்களாகவும் பார்க்கும்வரை அவர்களால் ஒருபோதும் தமிழ் மக்களை புரிந்து கொள்ள முடியாது; தமிழ் மக்களுக்கான நீதியையும், நியாயத்தையும் அவர்களால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவும் முடியாது. 

எஜமான் மீது நாய் எவ்வளவுதான் விசுவாசமாக இருந்தாலும் அது எஜமானின் பார்வையில் அது ஒரு நாலுகால் பிராணியேதான். தமிழ் மக்களின் விட்டுக் கொடுப்புக்கள், ஒத்துழைப்புக்கள் போன்ற எதனையும் அப்படியொரு எஜமான் மனங்கொண்டுதான் சிங்களத் தரப்பினர் பார்க்கின்றனர். 

இவ்வாறு தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையேயுள்ள கோடும், இடைவெளியும் தெளிவாகவே உள்ளன. ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள முதலாவது பிரச்சனை என்னவெனில் தம்மை யார் என்று அவர்கள் கண்டுபிடிக்க வேண்டியதுதான். தமது சிந்தனைமுறையென்ன (School of Thought) என்பதை அவர்கள் தெளிவாக கண்டறிய வேண்டும். 

1961ஆம் ஆண்டு சத்தியாகிரகப் போராட்டத்தில் தமிழ்த் தரப்பு முகம் குப்புற வீழ்ந்த போது அந்த வீழ்ச்சிக்கான காரணத்தை அன்று மட்டுமல்ல இன்றுவரை தமிழ்ச் சமூகம் கண்டறிய தயாராகவில்லை. அந்த வீழ்ச்சிக்குப் பின்பு அடுத்தது என்ன என்ற மாற்றுவழியை அன்று யாரும் கண்டதுமில்லை, சொன்னதுமில்லை. 

இப்படி தோல்விக்கான காரணங்களையும், அடுத்தது என்ன என்பதற்கான புத்திபூர்வ விசாரணையும், அதற்கான திட்டங்களையும் தமிழ்த் தரப்பு கொள்ளாதிருப்பதுதான் தமிழ்த் தரப்பின் சிந்தனை மரபாயுள்ளது. இதனை மாற்றியமைக்காதவரை தோல்விக்கான காரணங்களை கண்டறிந்து எம்மை நாம் சரிசெய்ய தயாராகதவரை வெற்றிக்கு தயாராக முடியாது என்பது மட்டுமல்ல தோல்விகளை சுமக்கும் முதுகுகளாகவே ஈழத் தமிழரின் வரலாறு நகரநேரும்.

1961ஆம் ஆண்டு சத்தியாக்கிரகம் தோற்கடிக்கப்பட்ட பின்பு அல்லது தோல்வியடைந்த பின்பு அடுத்தது என்ன என்ற கேள்வியும், அந்த தோல்விக்கு யார் பொறுப்பேற்பர் என்ற கேள்வியும் எம்மத்தியில் எழாததுடன் அடுத்தது என்ன என்ற சிந்தனையும் எழத் தவறியது. 

இதற்குப் பதிலாக நான்கு ஆண்டுகளின் பின்பு ஐக்கிய தேசிய கட்சியுடன் விட்டுக் கொடுப்பு, சமரசம், ஒத்துழைப்பு என்ற அடிப்படையில் தேசிய அரசாங்கத்தில் தமிழ்த் தரப்பு பங்கேடுத்து டட்லி - ஜேஆர் தலைமையிலான அரசாங்கம் 5 ஆண்டுக்கால ஆட்சியை செவ்வனே பூர்த்தி செய்ய தமிழ்த் தரப்பு இறுதிவரை ஒத்துழைத்த போதிலும் தமிழ்;த் தரப்பை அவர்கள் எஜமானிய நிலையிலிருந்து பார்க்கத் தவறவில்லை.

இதிலிருந்து அடுத்த பாடம் என்ன என்ற கேள்விக்கு இன்றைய காலத்தில் அனைவரும் பதிலளிக்க வேண்டியுள்ளது. அன்று பதில் தேடாத நிலையில் தமிழ்த் தாயின் புதல்வர்களும், புதல்விகளும், குழந்தைகளும், பெரியோர்களும் மரணக்குழிகளுக்கு இரையாக நேர்ந்தது. 

1979ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி பகல் இலங்கை நாடாளுமன்றத்தில்   “PTA” எனப்படும் பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதோடு தமிழ் மக்களுக்கு எதிரான இராணுவ ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது. அன்றிரவு யாழ்ப்பாணத்திலுள்ள மண்டைத்தீவில் 2 தமிழ் இளைஞர்களின் படுகொலை செய்யப்பட்ட பிரேதங்கள் வீசப்பட்டதன் மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட அந்த இராணுவ ஆட்சி இன்றும் தொடர்கிறது.

மேற்படி 1979ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதியிலிருந்து 2009 மே-18ஆம் தேதிவரை இலங்கை இராணுவத் தரப்பிலான இழப்பு 27,400 பேரும், விடுதலைப்புலிகள் தரப்பில் 42,000 – 43,000 பேரும், காணாமல் ஆக்கப்பட்டோரின் தொகை 20,000க்கும் மேல் என்றும் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. 

 இதில் பொதுமக்களின் இழப்புப் பற்றிய புள்ளிவிவரம் இவற்றைவிட பல மடங்கு பெரியது. 2500 ஆண்டுகால இலங்கையில் எழுதப்பட்ட வரலாற்றில் முள்ளிவாய்க்கால் ஒரு தனி அத்தியாயம். இதுவே இலங்கையின் எதிர்கால வரலாற்றுக்கான தலைவிதியை நிர்ணயிப்பதற்கான அடிப்படையாய் அமையும்.

காயங்கள் பெரிது. அதைவிட கோபங்கள் இன்னும் பெரியவை. இவற்றை எப்படி ஆற்றுவது. யார் ஆற்றுவது என்பதிலிருந்தே வரலாற்றின் அடுத்த முகத்தோன்றம் தெரியவதும்.
யார் எதிலிருந்து படிப்பினைகளைப் பெறுவது? ஏதனைப் படிப்பினையாகப் பெறுவது? 

1958 இனப்படுகொலை கலவரத்திலிருந்து பெறாத படிப்பினையை அதற்குப் பரிகாரம் காணப்பட வேண்டுமென்ற சிந்தனை இலங்கை அரசியலில் எழாத நிலையில் அதன் பின் 1983 கறுப்பு யூலையோடு அப்படியொரு சிந்தனை அரசியல் மட்டங்களில் எழத் தவறியதோடு அவ்வாறான படிப்பினை அவற்றிலிருந்து எழ இடமில்லையென்று தெரிகிறது. இது ஆட்சியாளர்கள் பக்கத்திற்குரியது. 

இதேபோல தமிழ்த் தரப்பு எத்தகைய படிப்பினைகளை எதிலிருந்து பெற்றிருக்கிறது என்ற கேள்விக்கு பதில் காணவேண்டும். 1958 இனப்படுகொலையிலும், 1961 சத்தியாக்கிரகத்திலும் இருந்து தமிழ் அரசியல் தரப்பு பெறத்தவறிய படிப்பினையை இனி எதில் இருந்து பெறப்போகிறது?

இப்போது அடுத்தது என்ன என்பதோ அதற்காக திட்டங்கள் என்பதோ யார் கையிலும் இருப்பதாக தெரியவில்லை. திட்டங்கள் இல்லாத, அதற்கான முன்னெடுப்புகள் இல்லாத எந்தொரு அரசியலும் வெற்றிபெற முடியாது. 

“உன்னை நீ கைவிட்டுவிட்டால், உன்னை கடவுளாலும் காப்பாற்ற முடியாது” என்றொரு பிரென்சுப் பழமொழியுண்டு. அத்துடன் கூடவே “வெற்றியின் வடிவில் தோல்வியும், தோல்வியின் வடிவில் வெற்றியும் ஏற்படுவதுண்டு” என்ற மற்றுமொரு கூற்றும் கவனத்திற்குரியவை.
« PREV
NEXT »

No comments