ஊர்காவற்துறை படுகொலை வழக்கில் சிவாஜிலிங்கம் சாட்சியம்
விட்டு விடுங்கள் எனக் கெஞ்சியும் தாக்கினர்! மன்றில் சிவாஜிலிங்கம் சாட்சியம்

என்னைக் கொல்லுங்கள் எனது ஆதரவாளர்களை விட்டு விடுங்கள் எனக் கெஞ்சினேன். அதையும் மீறி தாக்குதலை மேற்கொண்டார்கள் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நீதிமன்றில் சாட்சியம் அளித்தார்.
ஊர்காவற்றுறை பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கின் சாட்சியங்களுக்கான பதிவு விசாரணை 6ம் நாளாக யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் நேற்றைய தினம் யாழ் மேல் நீதிமன்றில் நடைபெற்றது.
அந்த வழக்கில் கண்கண்ட சாட்சியங்களில் ( 8வது சாட்சி) ஒருவரான அவர் மன்றில் ஆஜராகி சாட்சியம் அளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில்,
தேர்தல் பிரசாரத்துக்காக ஊர்காவற்றுறை நாரந்தனை நோக்கி 10 மணியளவில் சென்றிருந்தோம்.
10 பேர் எனது வாகனத்தில் பயணித்தார்கள்.நான் சென்ற வாகனம் இடையில் சென்று கொண்டு இருந்தது.
சிறிது தூரம் சென்ற பின்னர் பாதுகாப்பு கருதி அசம்பாவிதங்கள் எவையும் இடம்பெறாமல் தடுப்பதற்காக நாம் அனைத்து வாகனங்களையும் தாண்டி முன்னோக்கி சென்றிருந்தோம்.
11 மணியளவில் தகாத வார்த்தைகளால் கத்தியபடி ஒரு கன்டர் ரக வாகனம் ஒன்று எமக்கு எதிரே வந்து நின்றது அதில் இருந்த பலர் இறங்கி ஓடி வந்தார்கள்.
அதில் நெப்போலியன் என்பவர் இவர்களை அடியுங்கள், கொல்லுங்கள் என சத்தமிட்டபடி இறங்கி வந்தார்.
துப்பாக்கி சத்தங்கள் கேட்டது. எமது வாகனத்தின் முன் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது.
எல்லோரும் குத்தித்து தப்பி ஓடுங்கள் என நான் கூறினேன். அப்போது எமது வாகனத்தில் இருந்த கமல்ஸ்ரோன் அவர்கள் ஓடி வரும்பொழுது தடுப்பதற்காக இறங்க முற்பட்ட போது ஜீவன் என்பவர் இரும்பு கம்பியால் ஆன ஆயுதத்தால் தலையில் பலமாக அடித்தார்.
அவர் அப்படியே முகம் குப்புற விழுந்தார். அவரை தாக்கிய ஆயுதம் வாள் போல செய்யப்பட்டு நுனியில் கொண்டை வடிவில் இருந்ததுடன் அது உள்ளூர் தயாரிப்பாகவும் இருந்தது.
எமது வாகனத்தில் இருந்த ஏரம்பு பேரம்பலம் என்பவர் இறங்கி ஓட முற்பட்ட போது அவரது கையில் வெட்டு விழுந்தது. ஐயோ அண்ணே வெட்டிவிட்டார்கள் என கதறினார்.
நான் பாதுகாப்புக்காக பற்றை பகுதியை நோக்கி ஓடினேன். அப்போது சிவாஜி சிவப்பு சேட்டுடன் ஓடுறான் அவனை கொல்லுங்கள் என நெப்போலியன் கத்தியது எனது காதில் கேட்டது.
துப்பாக்கியால் என்னை நோக்கி சுட்டும் இரும்பு சட்டங்களாலும் எறிந்தார்கள் .
எனது காலில் துப்பாக்கி சூடுபட்டதும் நான் கீழே விழுந்து ஊர்ந்து ஊர்ந்து சென்றேன்.
அப்போது நெப்போலியன் வந்து தாக்கினார். தடிகளால் தாக்கியதால் எனது பற்கள் நொருங்கியது. இரும்பு சட்டத்தால் தாக்கிய தால் எனது கால் எலும்பு முறிந்தது.
அந்த தாக்குதலில் காயம் இன்றி எமது உறுப்பினர்கள் யாரும் தப்பவில்லை. தயவு செய்து எம்மை தாக்க வேண்டாம் என கேட்டேன். உங்களை கொல்லுவோம் என கத்தினார்கள்.
சமாதானம் பேசுவதற்கு ஒரு நிமிடம் கூட கிடைக்கவில்லை.
என்னை கொல்லுங்கள் எனது ஆதரவாளர்களை விடுங்கள் என கெஞ்சினேன்.
கடற்படை வீரர்கள் இருவர் சைக்கிளில் வந்த போது அப்பகுதியை விட்டு ஓடிவிட்டார்கள். என்னை எனது பாதுகாவலர்கள் தூக்கி ஆட்டோ ஒன்றில் ஏற்றி வந்தார்கள்.
வரும் வழியில் மீண்டும் அந்த கும்பலை கண்டோம். எம்மை மறித்தார்கள்.
அதில் வேலணை பிரதேசசபை தலைவர் 4ம் எதிரி இரும்புக் கம்பியுடன் நின்றிருந்தார். வீதியில் இருமருங்கிலும் துப்பாக்கிகளுடன் இருந்தார்கள்.
மதனராசாவை கடற்படை முகாமுக்கு அருகில் கண்டேன். வோக்கி ரோக்கியில் பேசியபடி இருந்தார். கடற்படையினரிடம் உதவி கோரினேன் அவர்கள் உதவ மறுத்து விட்டார்கள்.
பல இக்கட்டான சூழ்நிலைகளை கடந்து வந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் என்னை அனுமதித்தார்கள். அப்போது நான் நினைவை இழந்திருந்தேன் என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து எதிர்த்தரப்பு சட்டத் தரணி முடியப்பு றெமீடியாசினால் மாவை சேனாதிராஜாவிடம் 3 மணித்தியாலங்கள் வரையில் சரமாரியாக குறுக்கு விசாரணை இடம்பெற்றது.
No comments
Post a Comment