Latest News

November 21, 2016

புலம்பெயர் தமிழர்களே ஒரு கனம் சிந்தியுங்கள்
by admin - 0

புலம்பெயர் தமிழர்களே ஒரு கனம் சிந்தியுங்கள்!


 
எம் தாயக விடுதலையில்...



தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் எனும் தாரக மந்திரமானது கொள்கைப்பிடிப்பு நிறைந்த தூய்மையான விடுதலை அர்ப்பணிப்புள்ள விடுதலை போராட்டச் சக்திகளால் காத்திரமான விடுதலை அர்பணிப்புக்களையும் விடுதலை தியாகங்களையும் மேற்கொண்டு எழுத்தில் அல்லாது இரத்தத்தால் எழுதப்பட்ட விடுதலை அணையாத தீபமாக எரிய விடப்பட்ட வலிசுமந்த கொள்கையாக எம் மாண்புமிகு தலைவரால் மக்களுக்காக கூறப்பட்ட ஒரு தன்னிகரற்ற எழுச்சி வாசகமே.



இந்த எழுச்சி வாசகத்தை மனதில் சுமக்கும் அனைத்து தமிழ் மக்களும் எம் மண்ணிற்காகவும், மக்களுக்காகவும் போராடி விதையாகிய உன்னத காவல் தெய்வங்களையும் மக்களையும் நினைவு கூறும் முகமாகவே மாவீரர் நாள் தோற்றம் பெற்றது. 

இந்த உன்னத மாவீரர் நாளின் மகத்துவத்தை அறியாது, எமது கொள்கை பிடிப்பின் வீரியம் புரியாத பலரின் இணைவினால் உறுதியான கட்டமைப்பில் இருந்த நீதியான கொள்கைப்பிடிப்புள்ள மனிதர்களிடம் இருந்து பலவந்தமாக எமது கனவுகள் பறிக்கப்பட்டு சில வர்த்தக சிந்தனை மிக்க வர்த்தக சக்திகளால் மிக மோசமான நிகழ்வுகளுக்காக பயன்படுத்தப்படுகின்றது என்பதின் ஆற்றாமையின் உச்சமாகவே எமது கருத்து இங்கே பதியப்படுகின்றது.


 

நாம் பதியும் இந்த பதிவின் நோக்கமானது விடுதலை உணர்வு மிக்க உன்னத வீரர்களின் மனதினை காயம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பதியப்படவில்லை. அத்துடன் எமது உன்னத தலைவனின் அர்பணிப்பான வாசகத்தை கொச்சைப்படுத்தும் நோக்கமோ என ஒரு துளிதன்னிலும் எம்மிடம் இல்லை.



நாம், காலம் காலமாக அடிக்கப்பட்டு அடிமைகளாக்கப்பட்டு வல்லாதிக்க சக்திகளின் அகோரப்பிடிக்குள் சிக்கி எதிரிகளின் நய வஞ்சக நகர்வுகளில் அடைபட்டுக் கிடந்தோம். 



அந்தப் காலப்பகுதியில் உன்னத சக்திகளின் ஒன்றிணைந்த கோட்பாடுகள் தோற்றம்பெற அந்த தோற்றத்தில் கவரப்பட்டு இணைந்த நாம், இன்று தலைவனை தேடும் மழலை குழந்தைகளாக வழி தெரியாப் பறவைகளாய் வாழ்கின்றோம் என்பதே நிதர்சனம்.



போரின் வடுக்கள் எம்மை சல்லடையாக்கிய பொழுதுகளில் உறுதியாக இருந்த நாம், இன்று புலம்பெயர் தேசத்தில் பிரிவுபட்டு நிற்கும் எம்மவர்களின் நடவடிக்கையில் கதிகலங்கி இருக்கின்றோம். 

இந்த பிரிவுபடும் கட்டமைப்புகளுக்கு ஆதரவு அளிக்கும் சக்திகளை இனங்காண வேண்டும்.

மாவீரர் நிகழ்வுகளை கொள்கையில் பிரிந்தவர்கள் வெவ்வேறு திசையில் நகர்த்தி எமது உன்னத நினைவுகூறல் நிகழ்வுகளுக்கு பங்கம் விளைவிக்கும் நோக்கிலேயே செயற்படுவதை எம்மால் உணர முடிகின்றது.

வேற்றுக் கொள்கை கொண்டவர்களே... 



உங்கள் வீரத்தையும், உங்கள் கொள்கை பிடிமானங்களையும் எதிர்வரும் காலத்தில் உங்களால் செயற்படுத்தப்போகும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் காட்டுங்கள். 

அதனை விடுத்து எமது தியாக தெய்வங்களை நினைவுகூறும் உன்னத நாட்களை களங்கம் செய்யாதீர்கள்.



எம் மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வை பிரிப்பதற்காக,

இலாப நோக்கில் செயற்படும் ஊடகங்களையும், விலைபோன தலைமையினை கொண்ட கட்டமைப்பை உருவாக்கும் தீய சக்திகளையும் அழிக்க வேண்டும்.

இப்படியான சக்திகளின் தோற்றமானது எமது எதிர்கால சந்ததிக்கு விடுதலை பற்றிய உன்னத கொள்கையை எடுத்துச் செல்லாது பாதை மாறிய சமுதாயமாகவே மாற்றிவிடும் என்பது அப்பட்டமான உண்மையாகும்.

மாவீரர்களை நினைவு கூறும் தினத்தை நடத்துவதற்காக வர்த்தக கொள்கையினை கொண்ட கொழுத்த மந்தைக் கூட்டங்கள் அயராது பாடுபடுகின்றது.

விடுதலை உணர்வுள்ள உன்னத சீலர்களின் எண்ணிக்கை குறைந்து போனதும் ஆளுமைமிக்க தலைமையின் கட்டமைப்பை சிதைக்கப் பணப்பேய்கள் விலைபோனதுமே எம் கொள்கையின் புனிதம் அழிவதற்கு காரணமாகின்றது.



”இறைவன்” என்ற ஒருவரையும் “மதம் “என்ற ஒரு கொள்கை பிடிப்பினையும் உருவாக்கிய மனித சமுதாயத்தை போல மனிதரை நல்வழிப்படுத்தும் நோக்கிலேயும் ஒழுக்க கட்டுப்பாட்டைச் சிறக்க செய்யும் நோக்கிலுமே புலம்பெயர் தேசத்தில் எம் தேசியத் தலைவரால் ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. 



அந்த கட்டமைப்புக்குள் இன்று ”மதம்” என்ற கொலைவெறி நிறைந்த கொள்கைகொண்ட மிருகங்கள் உட்புகுந்து இருப்பதுடன் பாரிய விமர்சனங்கள் எமக்குள் இருந்தாலும் மாவீரரை நினைவுகூறும் அர்பணிப்பான நிகழ்வுகளில் எம் வன்மத்தை எடுத்து உரைப்பது ஏற்புடையதாகாது.

எம் விடுதலை உணர்வுகளை வென்றெடுக்க அர்ப்பணிப்புடன் உருவாக்கப்பட்ட உன்னத கொள்கையான புலம்பெயர் கட்டமைப்பினை தனிப்பட்ட தனிநலன்சார் எதிரிகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்துவதன் ஊடாக சிங்கள அரசிற்கு சாதகமாக நகர்வுகளை மேற்கொள்கின்றார்கள் என்றே கூறிட முடியும். 

இந்த நடவடிக்கைகளை நாம் அடக்கவேண்டுமாயின் நாம் ஒன்றிணைந்த குடையின் கீழ் செயற்படுவது அவசியமாகின்றது.



எமது உயிர்ப்புமிக்க கொள்கையானது தீய சக்திகளின் ஆதிக்கத்தில் சிக்கி களங்கம் நிறைந்த கரங்களில் தவழ்ந்து போவதால் ஏற்படப்போகும் அபாயங்களை உணர்ந்து செயற்படவேண்டிய கட்டாயத்திலும், காலகட்டத்திலும் நாம் நிற்கின்றோம்.

அது மட்டுமன்றி நலிந்த நிலையில் வாழும் களப்போராளிகளின் பெயரை கூறிக்கொண்டு நாசவேலைகளில் ஈடுபடும் துரோக உள்ளங்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதும், தம்மை பிரபலப்படுத்தும் நோக்கில் விலையாகி போகும் மனிதர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாத நிலையில் நாம் இருப்பதும் எமது விடுதலை உணர்வை மழுங்கடிக்க... 

எதிரியால் உருவாக்கப்பட்ட பலப்பரீடசையில் நாம் தோற்றவர்களாகவே மாறவே வாய்ப்பளிக்கும்,

ஆகவே மதிற்பிற்குரிய தமிழீழ மக்களே... 

எம் இனத்தை நேசிக்கும் உன்னத வீரர்களே... எமது ஈழ விடுதலை நோக்கில் கொள்கையினைப் பலப்படுத்தி விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவத்தை வளர்த்து புலம்பெயர் தேசத்தில் ஒரு குடையின் கீழ் இணைந்து மாவீரர் நாளை நினைவு கூறுவோம்.



தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்



என்றும் அன்புடன்
எஸ். செல்வதீபன்
« PREV
NEXT »

No comments