Latest News

November 22, 2016

இலங்கை விவகாரத்தில் மோடியின் கொள்கையே ட்ரம்பின் கொள்கையும்-மு. திருநாவுக்கரசு
by admin - 0

 
1971ஆம் ஆண்டு கையெழுத்தான இந்திய-சோவியத் நட்புறவு ஒப்பந்தம் இருதரப்பிற்கும் நன்மை அளித்ததாயினும் அது இந்தியாவிற்கு நின்று நிலைக்கவல்ல திடமான நன்மையை இன்றுவரை அளித்துள்ளது. பாகிஸ்தானிலிருந்து பங்களாதேசத்தை பிரிப்பதற்கு இந்தியாவிற்கு பேருதவியாக அந்த ஒப்பந்தமும் அதனாலான நட்புறவும் அமைந்தது.

நேருவின் வெளியுறவுக் கொள்கை பெரும் தோல்வியில் முடிந்த பின்னணியில் இந்தியாவை உலக அரங்கில் தூக்கி நிறுத்த உதவியது பங்களாதேஷ் பிரிவினையும் அதில் சோவியத் யூனியனுடனான உறவுமாகும். நேரு காலமானது 1964ஆம் ஆண்டில் அல்ல மாறாக அவர் 1962ஆம் ஆண்டே இறந்துவிட்டார் என்ற ஓர் அரசியல் மதிப்பீடு உண்டு. அதாவது 1962ஆம் ஆண்டு சீன-இந்திய யுத்தத்திலான தோல்வியின் போது நேருவும் மரணித்துவிட்டார் என்பதும் அவரது வெளியுறவுக் கொள்கை மரணித்துவிட்டதுமே இதன் செய்தியாகும். 
 
ஆனால் 1971ஆம் ஆண்டு சோவியத்துடனான உறவின் மூலம் இந்திராகாந்தி அரசாங்கத்தால் பங்களாதேஷை பாகிஸ்தானிலிருந்து வெற்றிகரமாக பிரிக்க முடிந்ததன் மூலம் இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவின் வெற்றிக்கான ஒரு பாதை திறந்து கொண்டது.

அப்போது அமெரிக்காவை எதிர்த்து இந்தியா வெற்றி பெற வேண்டியிருந்த காலமது. ஆனால் இப்போது அமெரிக்காவை அரவணைத்து இந்தியா தனது நோக்கங்களில் வெற்றியீட்வதற்கேற்ற சூழல் இந்தியாவிற்கு உலக அரசியலில் ஏற்பட்டு வருகிறது. ட்ரம்பின் வருகை மோடிக்கு இதனை இலகுவாக்க உதவும்.

பாதிக் கறுப்பினத்தவரான ஒபாமா கறுப்பினத்தவர் என்ற அடையாளத்துடன் பெரும் எதிர்பார்க்கைகளின் மத்தியில் அமெரிக்க ஜனாதிபதியானார். அவர் பதவிக்கு வந்த முதலாவது பதவிக்காலத்தில் அமெரிக்காவின் விருப்பத்திற்குப் பொருத்தமான வெற்றிகளை அவர் ஈட்டத் தவறவில்லை. 

பில்லேடனை வேட்டையாடுவேன் என்ற புஷ்ஸின் பிரகடனத்தை அவரே நனைவாக்கியவர். மத்திய கிழக்கை அமெரிக்காவிற்கான களமாக மாற்றியவர். இப்படியெல்லாம் அமெரிக்க அரசுக்கான அவரது வெற்றிப்பாதை அவர் பதவியில் இருந்து விலகும் போது இல்லை.

ஒபாமாவுக்கு பிரியாவிடையளிப்பது மேற்காசியாவில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ஒன்றான சிரியாவின் டார்ட்டஸ் (Tartus)  துறைமுகமும், தென்னாசியாவில் பாகிஸ்தானின் பலூச்சி மாகாணத்தில் உள்ள அரபிக் கடலைச் சார்ந்த குவதார் (Qwadar)  துறைமுகமும் ஆகும். 

மேலும் தென்கிழக்கு ஆசியாவில் அமெரிக்காவின் பாரம்பரிய நட்பு நாடானா பிலிப்பைன்ஸின் ஜனாதிபதி ரோட்ரிக்கோ டூட்டேட் (Dorodrigo Duterte)  கடந்த மாதம் தன்னை சீன சார்பு ஆதரவாளராக வெளிப்படையாக அறிவித்த பின்னணியில் பிலிப்பைன்சும் ஒபாமாவிற்கு பிரியாவிடையளிக்கும் பட்டியலில் இணைந்திருக்கிறது. இப்படி ஆசியாவின் மூன்று பிராந்தியங்களும் ஒபாமாவிற்கு பிரியாவிடையளிக்கும் நிலையிற்தான் ஒபாமாவின் பதவிக்காலம் முடிகிறது. 

மறுவளமாக சொல்வதென்றால் ட்டிரம்பின் வருகைக்கு இந்த மூன்று பிராந்தியங்களின் தோல்விகளும் வரவேற்றுப்பாடி நிற்கின்றன என்று கூறலாம். இந்நிலையில் அமெரிக்காவின் உலக ஆதிக்க பெருவிருப்பை ட்டிரம் எப்படி பூர்த்தியாக்கப் போகிறார் என்பதிற்தான் அவரது வெளியுறவு கொள்கை சார்ந்த வெற்றி தோல்வி தங்கியுள்ளது. 

பார்வைக்கு ட்டிரம் பல புதிய அதிரடி அரசியல் மாற்றங்களை மேற்கொள்ளவார் என்று தோன்றினாலும் உண்மை அப்படியில்லை. அமெரிக்க அரசியலில் ஆள்மாற்றம் என்பது கொள்கை வேறுபாடுகளாக (Policy differences)  அமைவதில்லை. மாறாக அவை ஆளுமை வேறுபாடுகளாக (Personality differences)  மட்டுமே அமைய முடியும். அமெரிக்க அரசியல் ஒருபோதும் ஒரு நபரில் தங்கியிருக்கும் அரசியல் கிடையாது. 
 
அது வலுவான அமைப்புக்களில் தங்கியிருக்கும் அரசியல். அதாவது அமெரிக்க அரசு என்றால் அது பென்டகன் (Pentagon),  சிஐஏ (CIA) , எஃப்பிஐ (FBI)  என்னும் அடிப்படை கட்டமைப்புக்களால் வடிவமைக்கப்படும் அரசியலைக் கொண்ட நாடு. எனவே அதில் நபர்கள் பெரும் மாற்றங்களைச் செய்ய முடியாது. மாறாக பதவிக்கு வருவோர் மேற்படி அமைப்புக்களினாலும் மற்றும் கட்டமைப்புக்களாலும் வழிநடத்தப்படுபவர்களாவர். 

இதனை சற்று விரிவாக சொல்வதென்றால் மேற்படி அமெரிக்காவின் இருதயமாக விளங்கும் மேற்படி மூன்று அமைப்புக்களுடன் கூடவே செனட் சபை, பிரதிநிதிகள் சபை என்ற அமெரிக்காவின் ஆட்சிமன்றமும், மேற்படி இவை அனைத்திற்கும் ஊட்டமளிக்கும் அமெரிக்காவின் பலமான அறிவியல் தளமும் ஊடகங்களும் உள்ளன. 

யார் பதவிக்கு வந்தாலும் அமெரிக்காவின் அறிவியல் தளம் அவர்களை தன்திசையில் வழிநடத்திச் செல்லவல்ல சக்திவாய்ந்ததாக உள்ளது. அது உலகப் பேரரச ஆதிக்கம் என்னும் அபிலாசையை அடிப்படையாகக் கொண்ட அறிவியற் தளமாகும். உலகின் மிகச் சக்திவாய்ந்த அறிவியல் மையங்கள் பல அமெரிக்காவிற்தான் காணப்படுகின்றன. 

ஒருகாலம் உலகின் அறிவியல் மையமா பாரீஸ் விளங்கியது. பின்பு லண்டன் விளங்கியது. ஆனால் இப்போது அறிவியல் மையங்கள் குவிந்திருக்கும் ஒரு நாடாக அமெரிக்கா விளங்குகிறது. அமெரிக்காவில் ஓர் அறிவியல் மையம் மட்டுமில்லை. அது உலக முக்கியத்துவம் வாய்ந்த பல மையங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

 அறிவியல் மையம் (Intellectual Center)  என்ற அர்த்தத்தில் உதாரணமாக நியூயார்க், போஸ்டன், ஃப்லடெல்ஃப்யா, வாஷிங்டன், பிக்ஸ்பெர்க், சிக்காகோ, லாஸ் ஏன்சல் என பல மையங்கள் அமெரிக்காவில் மட்டும் உள்ளன. இப்படி ஒரு நாடே பல சக்திவாய்ந்த அறிவியல் மையங்களைக் கொண்ட நாடாக அது காணப்படும் நிலையில் எந்தொரு தனிநபராலும் தான் நினைத்தவாறு அமெரிக்காவை இழுத்துச் செல்ல முடியாது. 

ஒபாமா  பாதிக்கறுப்பினத்தவர், பாதி இஸ்லாமிய வழித்தோன்றலர். அதாவது ஒபாமாவின் தந்தையார் இஸ்லாமிய வழிவந்தவராவார். ஆயினும் இஸ்லாமிய நாடுகளுடனான யுத்தத்தை ஏனைய தலைவர்களைவிடவும் அதிகம் முனைப்புடன் செய்தவராக உள்ளாரே தவிர இஸ்லாமிய வழிவந்தவர் என்பதற்காக அதனை அவரால் தவிர்த்திருக்க முடியவில்லை. அப்படியே அமெரிக்க கறுப்பின மக்கள் குறித்தும் அவரால் கறுப்பின மக்கள் மீதான வன்செயல்களை தடுக்க முடியவில்லை.

இப்போது அமெரிக்கா உட்பட்டிருக்கும் அதன் உலகப் பேரரச ஆதிக்க நெருக்கடிகளின் பின்னணியில் புதிய ஜனாதிபதி மேற்படி பென்டகன், சிஐஏ, எஃப்பிஐ, அமெரிக்க அறிவியல் மையங்கள் மற்றும் ஊடகங்கள் என்பனவற்றின் விருப்பத்தை நிறைவேற்றுபவராகவே இருக்கமுடியும். ஆமெரிக்க கொள்கை வகுப்பு தொடர்பான கருத்தாக்கங்களில் அமெரிக்க அறிவியல் மையங்களின் பங்கை சற்றும் குறைத்து மதிப்பிட முடியாது. அதைத் தவிர்த்து அமெரிக்க அரசியலை மட்டுமல்ல உலக அரசியலையும் பார்க்க முடியாது.

ஒபாமாவினுடைய இறுதி வெளிநாட்டு விஜயமாக இம்மாதம் 15ஆம் தேதி மேற்கொண்ட கிரோக்கத்திற்கான அவரது விஜயம் அமைந்தது அதன்போது அவர் கிரேக்கத்தி;ல் பேசுகையில் “ட்டிரம் தேர்தல் காலத்தில் பேசியதற்கு மாறாக இதுவரை அமெரிக்கா கடைபிடித்துவந்த கொள்கைகளையே தொடர்ந்து நடைமுறைப் படுத்துவார்” என்று ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களை நோக்கி தெளிவுபடக் கூறினார். 

அத்துடன் பருவநிலை மாற்றம் பற்றி ட்டிரம் தேர்தல் காலத்தில் எதிராக பேசியிருந்தாலும் இப்போது அவர் பதவிக்கு வந்த நிலையில் அப்படி செய்ய மாட்டார் என்று தற்போதைய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி 16ஆம் தேதி வெளியுலகத்திற்கு தெளிவுபட அறிவித்துள்ளமையும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது. எனவே அமெரிக்காவில் ட்டிரம் தலைமையில் ஏற்பட்டிருக்கும் ஆட்சிமாற்றம் அடிப்படையான கொள்கை மாற்றங்களை ஏற்படுத்தாது என்பது உண்மை. 

ஆனால் பிரச்சனைகளை கையாளும் விதத்தில் ஆளுமை வேறுபாடுகளுக்கும், அணுகுமுறை வேறுபாடுகளுக்கும் இடமுண்டு. அது வழமையானது. கடந்த 44 அமெரிக்க ஜனாதிபதிகளினது ஆட்சிக் காலத்திலும் இவ்வாறு ஆளுமை வேறுபாடுகளுக்கு ஏற்ப அணுகுமுறை வேறுபாடுகள் இருந்துள்ளனவே தவிர அவை ஒருபோதும் கொள்கை மாற்றங்களாக அமையப் போவதில்லை. 

இதில் புட்டினையும் ரஷ்ய அமெரிக்க விவகாரத்தையும் உதாரணத்திற்கு எடுத்து ஆராய்வது அவசியம். இன்று உலகிலுள்ள ஆளுமைமிக்க தலைவர்களில் ஒருவராக புட்டின் காணப்படுகிறார். அவர் தனது காலத்தில் ரஷ்யாவின் ஆதிக்கத்தையும், அந்தஸ்தையும் உலகரங்கில் உயர்த்த வேண்டுமென்று விரும்புகிறார். ரஷ்ய மக்களின் மனோநிலையும் அதற்குப் பொருத்தமாகவே உள்ளது. அமெரிக்க தேர்தலின் மூலம் புதிய ஆட்சியாளர் பதவிக்கு வருமுன்பான இடைமாறுகாலகட்ட தளர்வுக் காலகட்டத்தில் மத்திய கிழக்கில் ரஷ்யாவின் கேந்திர நலனை ஈட்டிவிடவேண்டும் என்று திட்டமிட்டார். 

அமெரிக்கா தேர்தலில் மூழ்கியிருந்த காலம். பதவி விலகப்போகும் ஜனாதிபதி உறுதியான நடவடிக்கைகளை எடுக்கமுடியாத அந்தக்காலத்தில் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி ரஷ்ய அதிபரான புட்டின் சிரியாவின் டார்டஸ் துறைமுகத்தில் ரஷ்யா நிரந்தர கடற்படை முகாமை அமைப்பதற்கான சட்ட மூலத்தை ரஷ்ய ஆட்சிமன்றத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி நிறைவேற்றினார்.

 அதன்படி உடனடியாக டார்டஸ் துறைமுகத்தில் நீர்மூழ்கி கப்பல் வசதியுள்ள நிரந்தர கடற்படைத் தளத்தை அமைத்துக் கொண்டார். இது ரஷ்யாவின் உலகப் பேரரசு ஆதிக்க அபிலாசையை உலக அரங்கிற்கு அறிவிக்கும் ஒரு செய்தியாகவும் ஒரு நடைமுறையாகவும் அமைந்தது.

இதுவரை காலமும் மத்திய கிழக்கில் அமெரிக்கா பெற்றுவந்த வெற்றிகளின் உச்சந்தலையில் ஆணியறைந்தாற் போன்ற சம்பவமாக புட்டினின் இந்த தலைலயெடுப்பு அமைந்தது. இதனை பென்டகனும், சிஐஏயும் ஒருபோதும் சகிக்க மாட்டாது. அமெரிக்காவில் யார் ஆட்சிக்கு வந்தாலென்ன மேற்படி இரு அமைப்புக்களும் இது விடயத்தில் கடும் நிலைப்பாட்டையே எடுக்கும். 

இங்கு சுவாரஸ்சியமான விடயம் என்னவெனில் புட்டினின் கணக்குப்போடல்தான். அதாவது கிளாரி கிளின்டன் அவரது கணவனின் ஆட்சிக் காலத்திலிருந்து ஆட்சிக்கலையில் கணவருடன் கூடவே இருந்து 8 ஆண்டுகளும் அனுபவம் பெற்றவர். அதன் பின்பு ஒபாமா காலத்தில் 4 ஆண்டுகள் வெளியுறவு செயலாளராக இருந்த அனுபவம் கொண்டவர். இயல்பில் கிளாரி ஆளுமை மிக்க ஒரு தலைவராக உள்ளார் என்பதும் ஒரு பொதுவான கணிப்பீடு. 

இந்நிலையில் ஆட்சிக் கலை அனுபவம் அற்ற பெரும் கோடீஸ்வரர் ஒருவர் வர்த்தக அனுபவத்துடன் பதவிக்கு வருவது தனது ஆளுமை செல்வாக்கிற்கு இலகுவாக அமையுமென புட்டின் கணக்கிட்டுள்ளார். இப்பின்னனியில்த்தான் ட்டிரம்பின் வெற்றியை புட்டின் விரும்பினாரே தவிர வேறில்லை. 

ஆனால் புட்டினோடு நல்லுறவு பாராட்டப் போவதாக ட்டிரம் அறிவித்திருந்தாலும் நடைமுறையில் அது சிறிதும் சாத்தியமற்றது. ட்;லீர்டஸ் துறைமுகத்திற்கு ஊடாக  தன் கடலாதிக்கத்தை ரஷ்யா விரிவாக்க முனையும் போது அதனை அமெரிக்க பேரரச நலன்களும், மேற்படி பென்டகன், சிஐஏ போன்றவையும் கைதட்டி வரவேற்கப் போவதில்லை. மாறாக முறுகல் நிலைகள் அதிகரிக்குமே தவிர குறையப்போவதில்லை. 

இதனை அரங்கத்தில் கண்கூடாய் காண்பதற்கு சில மாதங்களே போதுமானது. ஆனால் ஒருபோதும் இந்த இரு அரசுகளும் நேரடி இராணுவ மோதல்களில் ஈடுபடமாட்டாது. புட்டின் அதனை முன்னுணர்ந்து வாய்ப்பான ஒரு கட்டத்தில் மத்திய கிழக்கில் அதுவும் மத்தித் தரைக்கடலுடனான கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மையத்தில் தன் கடற்படையை நிலைகொள்ளச் செய்துவிட்டார். இதனை இராணுவ ரீதியான ஒருபோதும் அகற்ற முடியாது. 

மேற்படி இவ்வாறான வல்லரச ஆதிக்கப் பிரச்சனையில் முந்துபவரின் கையோங்கிவிடும். பின்பு அதனை இராணுவ ரீதியில் அகற்ற முடியாதவாறு இருதரப்பினரது இராணுவப் பின்புலம் அமைந்துள்ளது.

சமபலம் கொண்ட அரசுகளுக்கிடையே முந்துபவனின் கை ஸ்தாபிதம் அடைந்துவிடும் என்பது இயல்பு. இது எந்த சமபலம் கொண்ட நாடுகளுக்கும் பொருந்தும். அது இப்போது மத்திய கிழக்கில் ரஷ்யாவிற்கு பொருந்தியுள்ளது. இந்த வெற்றியை அமெரிக்கா ஒருபோதும் சகிக்காது. வேண்டுமென்றால் தலைவர்கள் தமக்கிடையே தேனீர்விருந்துகளை மட்டும் மேற்கொள்ள இடமிருக்கலாமே தவிர அரசியல் விருந்துபசாரம் நிகழமுடியாது.

ஆனால் இவை அனைத்துடனம் கூடவே தென்கிழக்கு ஆசியாவில் பிலிப்பைன்ஸ் தொடர்பாக சீனா தொடர்பான விவகாரம் அமெரிக்காவிற்கு உள்ளது. பிலிப்பைன்ஸில் 5 இடங்களில் அமெரிக்காவின் தளங்கள் உள்ளன. இன்றைய பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிக்கோ டூட்டேட் மேற்படி ரஷ்ய ஜனாதிபதி புட்டினைப் போலவே தருணம் பார்த்திருந்து அமெரிக்காவின் தேர்தல் களேபர பின்னணியில் தான் ஒரு சீன சார்பாளன் என்று சீனாவில் வைத்து சீன அதிபர் ஸீ ஜிங்பிங் (Xi Jinpine) முன்னால் பிரகடனப்படுத்தினார். 

ஆனால் இது புட்னின் பலத்திற்கு நிகரானதல்ல. மேற்படி அமெரிக்கத் தளங்கள் பிலிப்பைன்ஸில் இருக்கும் பின்னணியில் பிலிப்பைன்ஸ் அதிபரால் அதிக தூரம் பயணிக்க முடியாது. இதனை பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு புதிய அமெரிக்க ஜனாதிபதிக்கு பெரிதும் உண்டு. எனவே இப்பகுதியில் ட்டிரம் தன் கவனத்தை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். 

இப்பின்னணியில் அவருக்கு இன்னொரு பிரச்சனையும் தென்னாசியாவில் பதவிக்கு வரும்போது தாம்பாளத்தில் வைத்து நீட்டப்பட்டுள்ளது. அதுதான் இவ்வாண்டு யூன் 15ஆம் தேதி பாகிஸ்தானிடமிருந்து குவதார் துறைமுகத்தை சீனா 43வருட குத்தகைக்கு எடுக்கும் ஒப்பந்தத்தை எழுதியுள்ளது. அதுவும் மேற்படி தேர்தல் காலப் பின்னணியிலேயே நிகழ்ந்தது.

 மூன்று தினங்களுக்கு முன்பு இத்துறைமுகம் மேற்படி இருநாட்டு உயர் தலைவர்களால் கூட்டாக திறந்து வைக்கப்பட்டுள்ளமை கவனத்திற்குரியது. இதனை இந்தியாவும் ஒருபோதும் சகிக்கமாட்டாது. இந்நிலையில் இந்தியாவை ட்டிரம் அதிகம் அரவணைக்க விரும்புவார் என்பதில் சந்தேகமில்லை. அதாவது மேற்காசியாவில் ரஷ்யாவுடனும், தென்கிழக்காசியா மற்றும் கிழக்காசியாவில் சீனாவுடனும் களங்கட்டி நிற்கும் அமெரிக்காவால் தென்னாசியாவில் இந்தியாவின் நட்பை பெரிதும் நாடுவது தவிர்க்க முடியாது. 

இங்கு இனனு;மோர் விடயத்தையும் கூடவே அவதானிப்பது அவசியம். இஸ்லாமியர்களுக்கு எதிரான யுத்தத்தில் ட்டிரம்பின் வருகை அதனை இலகுபடுத்த தமக்கு உதவும் என இஸ்ரேலும், யூதர்களும் நம்புகின்றனர். கடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்க யூதர்களினதும், மற்றும் இஸ்ரேலினதும் ஆதரவு ட்டிரம்பை நோக்கியிருந்தது. 

 அதேபோல இந்திய அமெரிக்கர்களின் ஆதரவும் பிஜேபியின் ஆதரவும் ட்டிரம்பை நோக்கியிருந்தன. இத்கைய சூழலில் ட்டிரம்பின் வருகையால் ட்டிரம், மோடி, யூத நல்லுறவு அதிகம் மேம்படும். இம்மூன்று தரப்பினருக்கும் இடையே இஸ்லாம் பொது எதிரியாக உள்ளது. அதற்காக இதற்கு முந்திய ஒபாமா நிர்வாகம் இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பதல்ல அர்த்தம். 

ஆனால் ட்டிரம்பின் நிர்வாகத்தின் கீழ் அந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் அதிகம் மனவிருப்பத்துடன் இடம்பெறும். இதனால் அரசியலில் ஒரு மானசீகமான கூட்டு மேற்படி மூன்று தரப்பினருக்கும் இடையே ஏற்பட வாய்ப்புண்டு.

தென்னாசியாவின் நிலைகுறித்து குவதார் துறைமுகமும், அதனுடன் இணைந்து இலங்கையிலும் சீனா தலையெடுப்பதையும் சீனா பாகிஸ்தானிய உறவு பெரிதும் வலுவடைந்து அதனால் இராணுவ சமநிலை கையோங்குவதையும் இந்தியா ஒருபோதும் சகித்துக் கொள்ளாது. இன்நிலையில் அமெரிக்காவும் இதனை சகிக்க மாட்டாது. 

ஆதலால் ட்டிரம் தலைமையிலான அமெரிக்கா பொதுவாக இந்தியாவை குறிப்பாக மோடி அரசாங்கத்தை தனது நெருக்கமான நட்பு சக்தியாகவே பார்க்கும். இப்பின்னணியில் இலங்கை விவகாரத்தில் மோடியின் கொள்கை எதுவோ அதுவே ட்டிம்பின் கொள்கையாகவும் அமையும்.

இவ்வாறு உலக அரசியல், பிராந்திய அரசியல், இந்திய-இலங்கை அரசியல் தொடர்பான அரசியல் உடற்கூற்றியல் (Political Anatomy) காணப்படுவதை நாம் பச்சையாக அவதானிக்க முடிகிறது. இந்த அவதானிப்பின் பின்னணியில் ஒரு மருத்துவனைப் போல அடுத்து என்ன பரிகாரம்  செய்யப்பட வேண்டும் என்பதை ஈழத் தமிழ்த்தரப்பின் தலைவர்களும் அறிஞர்களும் தீர்மானிக்க வேண்டும்
« PREV
NEXT »

No comments