Latest News

August 08, 2016

துன்பப்பட்ட மக்கள்தான் தொடர்ந்தும் துன்பத்தில்!
by admin - 0

துன்பப்பட்ட மக்கள்தான் தொடர்ந்தும் துன்பத்தில்!

தட்டுவன்கொட்டிக் கிராம மக்கள் தரித்து நின்று போக்குவரத்துச் செய்வதற்கு நிழல்குடை அமைக்கப்படாதமையால் அப்பகுதிப் பயணிகள் நடு வெய்யிலில் பேருந்துக்காகக் காத்து நின்று துன்பப்படுகின்றார்கள்.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஆனையிறவு தட்டுவன்கொட்டிக் கிராமம் ஏ-9 வீதியிலிருந்து 6 கிலோ மீற்றர் தூரத்திற்கப்பால் காணப்படுகின்றது. தட்டுவன்கொட்டிக் கிராம மக்கள் உழவு இயந்திரங்களைப் பயன்படுத்தியே ஏ-9 வீதி வரைக்குமான போக்கு வரத்தை மேற்கொள்கின்றார்கள். கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினாலும் இக்கிராமத்திற்கான போக்கு வரத்து முழுமையாகத் தடைப்பட்டு இக்கிராம மக்கள் பெரிதும் பாதிப்புக்களை எதிர்நோக்கியிருந்தார்கள்.

இக்கிராமத்து மக்கள் பேருந்துக்காகக் காத்து நிற்கும் ஏ-9 வீதியில் நிழல் மரங்களோ, கட்டிடங்களோ பேருந்து நிழல் குடைகளோ எதுவும் அமைக்கப்படாதமையால் மக்கள் நடு வெய்யிலில் பேருந்துக்காகக் காத்து நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வடக்கு மாகாணப் போக்கு வரத்து அமைச்சினால் ஏனைய பல பகுதிகளில் பயணிகள் நிழல் குடைகள் அடைக்கப்பட்டுள்ள போதிலும் நிழல் மரங்களோ கட்டிடங்களோ எதுவுமற்ற ஆனையிறவு தட்டுவன்கொட்டிப் பகுதியின் ஏ-9 வீதியில் நிழல் குடைகள் எதுவும் அமைக்கப்படவில்லை.

இப்பகுதியில் கைக்குழந்தைகளுடன் தாய்மார், சிறுவர்கள், நோயாளர்கள், முதியவர்கள் என அனைவரும் நடுவெய்யிலிலேயே பேருந்துக்காகக் காத்து நிற்கின்றார்கள்.

இப்பகுதியில் நீண்டகாலத்திற்கு முன்னர் வர்த்தக நிறுவனம் ஒன்றினால் அமைக்கப்பட்ட சிறிய பயணிகள் நிழற்குடை சேதமடைந்து அதன் கூரைகள் ஏதுமற்ற நிலையில் வெறும் துருப்பிடித்து வளைந்து முறிந்த கம்பிகள் மாத்திரமே காணப்படுகின்து.

இவ்விடயத்தில் வடக்கு மாகாணசபையின் பொறுப்புவாய்ந்தவர்கள் கவனம் செலுத்தி ஏனைய இடங்களில் வடக்கு மாகாணசபையால் அமைக்கப்படுவது போன்ற பயணிகள் நிழல் குடை அமைப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என ஆனையிறவு தட்டுவன்கொட்டி மக்கள் கோரி நிற்கின்றார்கள்
« PREV
NEXT »

No comments