Latest News

May 10, 2016

இனக் காவலன் பிரபாகரன்! தமிழனின் ஓட்டு தமிழனுக்கே!- அதிர வைக்கும் சீமான்
by admin - 0

இலவச திருமணத்துக்கு ஏங்கிக் கிடக்கிறான் தமிழன். தி.மு.க - அ.தி.மு.க-வுக்கு ஓட்டு போட்டால் கை விரலே சுருங்கிப் போய்விடும்’ என்றெல்லாம் தேர்தல் களத்தை அதிரவைத்துக் கொண்டிருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

‘வனக் காவலன் வீரப்பன், இனக் காவலன் பிரபாகரன்’ என்ற வசீகரிக்கும் வசனங்கள் நாம் தமிழரின் மேடைகளில் எதிரொலிக்கின்றன.

‘தமிழனின் ஓட்டு தமிழனுக்கே’ என சீமான் முன்வைக்கும் முழக்கத்தைப் பார்த்து, அதிர்ந்து கிடக்கின்றன திராவிடக் கட்சிகள்.

இதுவரையில் மாற்றத்தை முன்வைத்து தனித்துக் களமிறங்கும் கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு கொடுத்து வந்திருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் சீமானின் தமிழர் ஆட்சி முழக்கம் எடுபடுமா என்பதெல்லாம் கவனிக்கப்பட வேண்டியவை.

தேர்தல் பிரசாரங்களில் அவர் முன்னெடுக்கும் சில விஷயங்களை ஆராய்ந்தோம். சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு முன்பு, பரவலாக இருக்கும் தமிழர் ஓட்டுகளை ஒன்று திரட்டும் முயற்சியில் இறங்கினார்.

அதன் ஒரு பகுதியாக, தலித் தலைவர்களான திருமாவளவனும், கிருஷ்ணசாமியும் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுவதில்லை. இவர்கள் போட்டியிடாத தொகுதிகளில் தலித் மக்களின் வாக்குகளைக் கவர்வதற்காக 20 தலித் வேட்பாளர்களை பொதுத் தொகுதிகளில் நிறுத்தியுள்ளார்.

‘தமிழனுக்கு நீ ஓட்டு போடவில்லை என்றால், என்னுடைய ஓட்டு உன் மொழி பேசுபவனுக்குக் கிடையாது’ என எச்சரிக்கிறார் சீமான்.

வட மாவட்டங்களில் பா.ம.க வாக்குகளைக் கவர்வதற்காக 36 வன்னியர்களைக் களமிறக்கி இருக்கிறார். தேர்தல் பிரசாரத்தில், ‘வீரப்பனுக்கு மணிமண்டபம்’ என்ற சீமானின் கோரிக்கைக்கு வரவேற்பு உள்ளது.

வீரப்பனைப் பற்றி ஜெயலலிதா சில வார்த்தைகளைக் கூறியபோது, ராமதாஸ் எதிர்ப்புக் காட்டவில்லை என்பதை தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு இருக்கிறார் சீமான்.

அவர்களிடம், பா.ம.க குரு பாணியில், ‘மானத்தமிழன் கார் டயரைத் தொட்டு கும்பிடுறான். எங்கே போனது இனத்தின் வீரம்?’ என்றெல்லாம் உசுப்பேற்றுகிறார்.

நகர்ப்புற பா.ம.க ஓட்டுக்களை அன்புமணி அறுவடை செய்யக் காத்திருக்கும் போது, கிராமப்புற வன்னியர்கள் மத்தியில், ‘தமிழன்’ என்ற முழக்கத்தைக் கொண்டு சேர்க்கிறார்.

இதன்மூலம், வட புலத்தில் வன்னியர் வாக்குகளை நாம் தமிழர் அறுவடை செய்யும் என உறுதியாக நம்புகிறார்.அதிலும், நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்த்தோடு ராமதாஸ் கூட்டுச் சேர்ந்து விட்டதால், தே.மு.தி.க-வை விமர்சிக்கும் தகுதியை பா.ம.க இழந்துவிட்டது என்ற அடிப்படையில் பிரசாரம் செய்கிறார்.

இதில், விஜயகாந்த்தை ரஜினி விமர்சித்ததையும் கடுமையாக எதிர்க்கிறார் சீமான்.

‘நான் மராட்டி’ என வெளிப்படையாகச் சொல்பவர் ரஜினி. அவரை எதிர்க்க விஜயகாந்த்துக்கு என்ன தகுதி இருக்கிறது?’ எனப் பேசுவதன் மூலம் ரஜினி ரசிகர்களின் வாக்குகளையும் தன்பக்கம் திருப்ப முயற்சிக்கிறார் சீமான்.

தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியை, ‘இன அழிப்பின் பங்காளிகள்’ என்கிறார். ‘என் இனம் போரில் அழிந்தபோது தூங்கினார் கருணாநிதி. என் இனம் நீரில் அழிந்தபோது தூங்கினார் ஜெயலலிதா’ என அவர் தாக்கிப் பேசும்போது விசில் பறக்கிறது.

‘ஈழத்தின் கொடூரக் கொலைகளுக்கு சாட்சி தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி. இவர்களை வேரோடு வீழ்த்த வேண்டும்’ எனக் கொந்தளிக்கிறார்.

அதேபோல், ‘தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு உண்மையான மாற்று நாம் தமிழர் கட்சி மட்டும்தான்” என்கிறார்.

“திருமா, வைகோவின் ஈழவிடுதலைக் கொள்கையை கம்யூனிஸ்ட்கள் ஏற்பார்களா?” என மக்கள் நலக் கூட்டணியையும் விமர்சிக்கிறார்.

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள். நல்ல பேச்சாற்றல் மிக்கவர்கள். தேர்தலில் செலவழிக்க பணமில்லாவிட்டாலும், வீடுகள் தோறும் நடந்து சென்றே வாக்கு சேகரிக்கிறார்கள்.

கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளையும் பிரசாரப் படங்களையும் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி ஓட்டு சேகரிக்கிறார்கள்.

‘நாமே மாற்று... நாம் தமிழரே மாற்று’ என்ற நாம் தமிழர் கட்சியின் தேர்தல் முழக்கம், மெழுகுவர்த்தி வெளிச்சமாக பளீரிடுமா என்பது எல்லாம் தேர்தல் முடிவுகளில் அடங்கியிருக்கிறது.

நன்றி : Vikatan
« PREV
NEXT »

No comments