Latest News

April 17, 2016

நம்பிக்கையோடு இருங்கள் விரைவில் உங்களைக் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பரவிப்பாஞ்சான் மக்களிடம் சம்பந்தர் தெரிவிப்பு
by admin - 0

நேற்றைய  தினம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களைக் கூட்டமைப்பின் அலுவலகமான அறிவகத்தில் வைத்துச்  சந்தித்த பரவிப்பாஞ்சான் பகுதி மக்கள் தமது காணிகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை எனத் தெரிவித்திருந்தனர். மக்களது கருத்துக்களைக் கேட்டறிந்த சம்பந்தன் அவர்கள் மக்களுடன் பரவிப்பாஞ்சான் இராணுவக் கட்டுப்பாட்டில்  உயர்பாதுகாப்பு வலயமாகவுள்ள மக்களது காணிகளுக்குச் சென்றிருந்தார்.

சம்பந்தர் அவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோருடன் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள பரவிப்பாஞ்சான் பகுதிக்கு திடீரெனச் சென்றபோது அங்கு பாதுகாப்புக் கடமையிலிருந்த இராணுவத்தினர் எதிர்கட்சித் தலைவரை அப்பகுதிக்குச் செல்ல அனுமதித்தனர். தொடர்ந்து மக்களும் தமது காணிகளுக்குச் சென்று தமது வீடுகளை மிகவும் ஆவலோடு பார்வையிட்டதனைக் காண முடிந்தது 
பரவிப்பாஞ்சான் பகுதியில் வைத்து பரவிப்பாஞ்சான் மக்கள் எதிர்கட்சித் தலைவரிடம் தமக்கான சொந்தக் காணிகள், வீடுகள் இருக்கும்போது தாம் அகதிகளாக அவலப்படுவதாகவும் தமது சொந்தக் காணிகளில் தாம் குடியேறி வாழ்வதற்கான நடவடிக்கையைச் செய்யுமாறும் கோரியிருந்தார்கள் அதற்குப் பதிலளித்த எதிர்கட்சித் தலைவர் சம்பந்தர் அவர்கள்  உங்களது அவல நிலைகள் எனக்குப் புரிந்துகொள்ளமுடிகின்றது. 

நீண்ட காலமாகப் பொறுத்திருந்திருக்கிறீர்கள். மீள்குடியேற்றங்கள் தொடர்பில் தற்போழுது முன்னேற்றங்கள் நிகழ ஆரம்பித்திருக்கின்றது. ஆனாலும் அது போதுமானதாகவில்லை. மீள்குடியேற்றத்தை விரைவுபடுத்தி உங்களைச் சொந்தக் காணிகளில் விரைவில் குடியேற்ற நடவடிக்கை எடுப்போம் என்றார். 

நீண்ட காலங்களின் பின்னர் தாம் வாழ்ந்த வீடுகளைப் பார்வையிடுகின்றோம் என்ற மகிழ்ச்சியை மக்களது முகங்களில் காணமுடிந்ததுடன் திரும்பிப்போகும்போது மீண்டும் எப்போது எமது சொந்த வீடுகளுக்கு நாம் வந்து வாழப்போகின்றோம். என்ற ஏக்கமும் காணப்பட்டதனை அவதானிக்க முடிந்தது.

இதனைவிட தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகம், அரசியல்துறை நடுவப் பணியகம், தமிழீழ வைப்பக நடுவப் பணியகம் என்பவற்றைக் கண்ட மக்கள் ஆவலோடு பார்வையிட்டதனை நோக்கமுடிந்தது. 

















« PREV
NEXT »

No comments