Latest News

April 17, 2016

உடைந்தது ஈ.பி.டி.பி! சந்திரகுமார் வெளியேற்றம்
by admin - 0

தமிழ் மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளித்து தனது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்குரிய நியாயமான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கு அர்த்தபூர்வமாக செயற்படவுள்ளதாகவும் இதற்கான புதிய சூழ்நிலைகள் உருவாகி வரும் சந்தர்ப்பத்தில் பல்வேறு சக்திகளையும் அவற்றின் தனித்தன்மைகளுடன் ஒன்றிணைய வைத்துச் செயலாற்ற விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது ஸ்ரீலங்காவில் உருவாகியிருக்கும் புதிய அரசியற் சூழ்நிலைக்கு அமைய ஈழமக்கள் ஜனநாயக் கட்சியிலிருந்து விலகி தனித்துச் செயற்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மக்களுடைய உணர்வுகளில் தமக்கான நியாயமான அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என்கின்ற நிலைப்பாடு மிக நீண்டகாலமாகவே இருப்பதாக குறிப்பிட்ட அவர்,

இதில் எந்தச் சமரசத்துக்குப் போவதையும் அவர்கள் விரும்பவில்லை எனவும் இன்றைய உலக ஒழுங்கின் அடிப்படையில் சமூகங்களுக்கான சமத்துவ, பன்மைத்துவத்தை ஏற்றுக்கொண்டு அதனூடான சுயநிர்ணய அங்கீகாரத்தை அவர்கள் வேண்டி நிற்பதாகவும் கருத்து வெளியிட்டார்.

மக்களுடைய உணர்வுகளும் தெரிவும் வேறாக இருந்ததைத் தேர்தலில் உணர்ந்து கொண்டதாகவும் மக்கள், தன்னிடம் வேறு விடயங்களையும் எதிர்பார்க்கின்றனர் என்பதை உணர்ந்து கொண்டதன் அடிப்படையிலேயே தனது அரசியல் நிலைப்பாட்டை மீளாய்வு செய்ய வேண்டும் என்ற அவசியத்திற்குள் தள்ளப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

இன்றும் மக்கள் தன்னுடன் மிகவும் சுமுகமான அன்பான உறவைக்கொண்டிருக்கிறார்கள். எனவே மக்களின் நலனுக்காக அவர்களது உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டி அவசியம் ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இதனை அங்கிகரிக்கும் ஒரு சமூக நீதிக்கட்டமைப்புக்குள் மட்டுமே உண்மையான பன்மைத்துவமும் இனங்களுக்கிடையிலான பரஸ்பர அங்கீகாரமும் ஏற்படும். நலிவுற்ற மக்களுக்குரிய விசேட ஏற்பாடுகளும் நன்மைகளும் ஒவ்வொருவரும் அனுபவிக்கும் சூழலிலேயே பன்மைத்துவத்தின் ஊடான சமத்துவம் சாத்தியமாகும்.

இதுவே, சுய நிர்ணய உரிமையை அர்த்தமுடையதாக்கும். இவற்றை அடிப்படையாகக் கொண்டு இனப்பிரச்சினைக்கான தீர்வையும் சமூக நீதியையும் உருவாக்குவதற்கான ஒரு சட்டவாட்சி முறையை ஏற்படுத்துவதற்காக உழைப்பது தன்னுடைய இலக்கு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது ஒரு பாரிய பணி. பலருடைய அர்த்தமுள்ள பங்களிப்புகள் சேர்ந்தாலே இதைச் சாத்தியமாக்க முடியும். இன்று தமிழ் பேசும் மக்கள், தங்களுடைய அரசியல் தலைமைகளை ஐக்கியப்படுமாறு கோருகின்றனர்.

ஆனால், அந்த ஐக்கியம் என்பது, எல்லோருடைய கருத்துக்களையும் ஏற்றுக்கொள்கின்ற நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டு, சரியான தீ்ர்மானங்களை நோக்கிய விவாதங்களாக அமைய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதன் மூலமே ஒரு உண்மையான ஐக்கியத்தை உருவாக்க முடியும். இந்த அடிப்படையில் இன்று ஐக்கியப்படும் நிலைப்பாட்டை வலியுறுத்தி, ஒரு பொதுமைப்பாடுடைய அரசியல் தீர்மானத்தை நோக்கி நகர்வதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன்.

அத்துடன், கடந்த காலங்களைப்போன்று மக்களுடைய நலன்களை, தேவைகளை நிறைவு செய்வதில் என்னால் ஆற்றக்கூடிய பங்களிப்பை எப்போதும் வழங்கிக் கொண்டிருப்பேன் என உறுதியளித்துள்ளார்.

என்னுடைய இளம் வயதில் (1980களில்) கூர்மையடைந்திருந்த தேசிய விடுதலை உணர்வு, என்னை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் (ஈபிஆர்எல்எப்) இணைய வைத்தது என அவர் தெரிவித்துள்ளார்.

அப்போது, தேசிய விடுதலைக்கான ஒரு போராளியாக, தேசிய விடுதலையை வேண்டி நிற்கும் மக்களுக்கான விடுதலைப்படையின் உறுப்பினர் என்ற அளவிலேயே தன்னால் சிந்திக்கவும் செயற்படவும் முடிந்ததென குறிப்பிட்டுள்ளார்.

இங்கே, தேசிய விடுதலையுடன் இணைந்ததான சமூக விடுதலையின் அவசியத்தையும் புரிந்து கொள்ள முடிந்தது. இதுவே, தனது அரசியல் பாதையை தீர்மானிக்கும் அடிப்படையாக அமைந்தது என முருகேசு சந்திரகுமார் கூறியுள்ளார்.

தேசிய விடுதலைப்போராட்டத்தினுடைய நகர்வின் பரிமாணங்கள், பல்வேறு வகையாக மாற்றமடைகின்ற காலங்களில் இந்த அடிப்படையில் நின்றே தீர்மானங்களை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் நலன்களை முதன்மைப்படுத்திய அரசியல் வழிமுறையில் ஈடுபட்ட காரணத்தினால், நீண்டகாலம் ஆயுதப்போராட்டத்திலும் அதன் பின்னர் ஜனநாயக நீரோட்டத்திலும் தன்னுடைய தீர்மானங்கள் இருந்தன என தெரிவித்துள்ளார்.

இந்த அடிப்படையிலேயே ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி,(ஈபிஆர்எல்எப்) ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) என்பவற்றில் தான் செயலாற்றி வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் என்னைத் தமது பிரதிநிதியாக 2010ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இரண்டாவது தடவையும் தெரிவு செய்தனர். இந்தக் காலகட்டத்தில் மிக மோசமான யுத்தம் மற்றும் இடப்பெயர்வுக்குள் சிக்குண்டு, ஏதுமற்றவர்களாக மீள்குடியமர்ந்த மக்களின் வாழ்க்கை தன்னை மிகவும் பாதித்ததாக முருகேசு சந்திரகுமார் கவலை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், இந்த மக்களுடைய நலனுக்காகச் செயற்படுவது எனது தார்மீகப் பொறுப்பு என்பதை உணர்ந்து, கடந்த ஐந்து வருடங்களும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் செயற்பாட்டு வரையறைக்குள் மிகக் கடினமாக இந்த மக்களுடைய தேவைகளை நிறைவு செய்ய உழைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மக்களும் என்னைத் தங்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டமையை நான் உணர்ந்திருந்தேன். ஆனாலும் மக்களுடைய உணர்வுகளும் தெரிவும் வேறாக இருந்ததைத் தேர்தலில் உணர்ந்து கொண்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மக்கள் என்னிடம் வேறு விடயங்களையும் எதிர்பார்க்கின்றனர் என்பதை உணர்ந்து கொண்டதன் அடிப்படையிலேயே நான் என்னுடைய அரசியல் நிலைப்பாட்டை மீளாய்வு செய்ய வேண்டும் என்கிற ஒரு அவசியத்திற்குள் தள்ளப்பட்டேன்.

எனவே தான் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிலிருந்து (ஈபிடிபி) விலகி, புதிய செயற்பாட்டைத் தொடர முன்வந்திருக்கிறேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments