Latest News

April 14, 2016

40 வருடங்களின் பின் நெடுந்தீவில் மீண்டும் மலர்ந்தது தமிழரசு!
by admin - 0

நாற்பது வருடங்களுக்குப் பின்னர் நெடுந்தீவில் மீண்டும் தமிழரசுக் கட்சியின் கிளை ஆரம்பித்து வைக்கப்பட்டமையானது நெடுந்தீவு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 9 ஆம் திகதி 4.00 மணிக்கு நெடுந்தீவு மண்ணில் 40 வருடங்களின் பின்னர் இலங்கைத் தமிழரசுக் கட்டியின் கிளையை ஆரம்பித்து வைத்து கட்சியின் ஆதரவாளர்கள், மக்கள் மத்தியில் உரையாற்றிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் எஸ்.ஜே.குலநாயகம்,

'கடந்த யுத்தங்களாலும் அதனைத் தொடர்ந்து காணப்பட்ட அராஜகங்களாலும் நெடுந்தீவில் இருந்த தமிழரசுக் கட்சியின் கிளையை இயக்கி அதனூடாக மக்களுக்கான அரசியல் பணியை முன்னெடுக்க முடியாத சூழ்நிலை காணப்பட்டது. அதனால் தமிழ் மக்களின் விடிவுக்காக ஜனநாயக வழியில் பயணிக்கும் தமிழர்களின் கட்சியாகிய இலங்கைத் தமிழரசுக்கட்சி தனது கிளையை கடந்த 40 வருடகாலமாக நெடுந்தீவு மண்ணில் தொடர்ந்தும் இயக்க முடியாத சூழல் காணப்பட்டது. 

தமிழர்களின் ஏகோபித்த முடிவினால் தற்போது ஓரளவுக்கு அமைதி நிலவுகின்றது. அதனால் நெடுந்தீவு மண்ணில் மீண்டும் 40 வருடங்களின் பின்னர் தமிழரசுக் கட்சிக் கிளை ஆரம்பிக்கப்பட்டுள்ளமையானது தமிழர்களின் மனங்களில்,  நாற்பது வருடங்களின் பின் நெடுந்தீவில் மீண்டும் மலர்ந்தது தமிழரசு என்ற உணர்வினை ஏற்பட்டுள்ளதைக் காணமுடிகின்றது.
கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய அராஜகங்களால் நாட்டில் அமைதியற்ற சூழல் நிலவியது. ஆதனால் மக்கள் சொல்லொணாத் துயரங்களை எதிர்நோக்கி வந்தார்கள். அந்தக் காலங்களில் தீவகப் பகுதி முழுவதும் கடற்படையினரது கட்டுப்பாட்டிலும் அவர்களோடு சேர்ந்தியங்கிய ஒட்டுக் குழுக்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. எமது தீவக மக்களைச் சந்திக்க முடியாத சூழல் நிலவிய அக்காலங்கள் மிகவும் மோசமான அடாவடிகள் இடம்பெற்ற காலங்களாகும்.

கடந்த 2004 ஆண்டு காலப் பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் தீவக மக்களைச் சந்திப்பதற்காக வந்தவேளையில் அல்லைப் பிட்டியில் வைத்து ஆயுதம் தாங்கிய ஒட்டுக்குழுவினரால் வழிமறிக்கப்பட்டு எம்மீது மிகவும் மோசமான விதத்தில் தாக்குதல்கள் இடம்பெற்றன. அதில் எமது கட்சியைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டதுடன் அடித்து முறிக்கப்பட்ட வரலாற்றையும் நீங்கள் அறிவீர்கள். தீவகத்துக்கு நாங்கள் வரக்கூடாது என்பதிலும் தீவக மக்களின் உரிமைகளை மறுப்பதிலும் அந்த ஒட்டுக் குழுவினர் குறியாக இருந்து செயற்பட்டு வந்தார்கள். இன்று அந்த நிலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதனை மாற்றியமைத்தவர்களாக மக்களாகிய நீங்கள்தான் காணப்படுகின்றீர்கள். 

இப்போது இருக்கும் ஓரளவு அமைதியான சூழல் தொடர்ந்தும் நிலவவேண்டும். அதனை நிரந்தர அமைதியான சூழலாக மாற்ற வேண்டும் அதற்கு மக்களாகிய உங்களின் ஒற்றுமையும் ஒத்துழைப்பும் மிகவும் அவசியமானதாகும் அதற்காக நாங்கள் ஜனநாயக வழியில் தொடர்ந்தும் பயணித்து மக்களுக்கான எமது செயற்பாடுகளை முன்னெடுப்போம். ஆதற்காகத்தான் இன்றைய தினம் 40 வருடங்களின் பின்னர் மீண்டும் இந்த மண்ணில் எமது கிளையை ஆரம்பித்துவைத்துள்ளோம்.

எமது கட்சியானது ஒரு ஒழுங்கு முறையிலான கட்டுப்பாடுகளைக் கொண்டு இயங்கி மக்களுக்காக ஜனநாயக முறைப்படி பணியாற்றுகின்ற கட்சியாகும்.' எனக் குறிப்பிட்டார்.

இந்திகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடமாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராசா மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை ஆகியோருடன் கட்சியின் ஆதரவாளர்கள், மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.









« PREV
NEXT »

No comments