Latest News

April 14, 2016

கிளிநொச்சி கிருஸ்ணபுரத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு மாணவர்கள் பலி
by admin - 0

கிளிநொச்சி கிருஸ்ணபுரத்தில் இன்று 14.04.2016 மாலை 3.00 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்கள்.


இது பற்றி மேலும் தெரியவருவதாவது, பாரதிபுரத்தைச் சேர்ந்த கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் ஜெ.டிலக்ஸன் வயது-17 மற்றும் மலையாளபுரத்தைச் சேர்ந்த பாரதி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் வி.ஜெனார்த்தனன் வயது-17 ஆகிய க.பொ.த. உயர்தர மாணவர்கள் இருவரும் இன்றைய தினம் மாலை 3.00 மணியளவில் தனியார் கல்வி நிலையம் ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரது மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற போதே கிருஸ்ணபுரம் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மிகவேகமாகச் சென்று வீதிக்கருகில் இருந்த மின்கம்பத்துடன் மோதிதால் விபத்து இடம்பெற்று சம்பவ இடத்திலேயே இரண்டு மாணவர்களும் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. மாணவர்கள் தலைக்கவசம் அணியாத நிலையில் மிகவேகமாக மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றதாகவும் சம்பவத்தை பார்த்தவர்களால் கூறப்படுகின்றது. 

வீதியால் சென்றவர்களால் இருவரையும் மீட்டு உடனடியாகவே கிளிநொச்சி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது இருவரையும் காப்பாற்ற முடியவில்லை. 
இவர்களது உடல்கள் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளைக் கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
இவ்விபத்தினைக் கேள்விப்பட்டு அதனைப் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்ற இன்னொரு நபரொருவரும் விபத்துக்குள்ளாகிப் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கிளிநொச்சிப் பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதனை விட இன்றைய தினம் கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியிலும் இருவர் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.
« PREV
NEXT »

No comments