Latest News

March 04, 2016

பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகியோரை விடுவிக்க இந்திய அரசு முடிவு? இன்று விடுவிப்பு ?
by admin - 0

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும், இந்தியக் குடிமக்களான பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகியோரை விடுவிப்பது தொடர்பாக இந்திய மத்திய உள்துறை அமைச்சு சட்ட ஆலோசனையைப் கோரியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும்  பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேரையும் விடுவிக்க தமிழ் நாடு அரசு முடிவு செய்திருப்பதாகவும், இது தொடர்பாக இந்தி்ய மத்திய அரசாங்கத்தின் கருத்தை அறிந்து கொள்ள விரும்புவதாகவும், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் நேற்றுமுன்தினம் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

தமிழ்நாடு அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பை வெளியிட்டிருந்த அதேவேளை, இதுகுறித்து மத்திய அரசு பரிசீலனை செய்யும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்திருந்தார்.

இந்தநிலையில், இந்த வழக்கில் சிறையில் அடைபட்டுள்ள, இந்தியர்களான பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்வது குறித்து மத்திய அரசாங்கம் சாதகமான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களை விடுவிப்பது குறித்து  தலைமை சட்டவாளரின் கருத்தை மத்திய உள்துறை அமைச்சு கோரியுள்ளது. அவரது பரிந்துரையின்படி, இவர்களின் விடுதலை குறித்து இன்று மாலை முடிவெடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, இலங்கையர்களான சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரின் விடுதலை குறித்து உடனடியாக பரிசீலனை செய்ய இந்திய அரசாங்கம் தயாராக இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.



இரண்டாம் இணைப்பு


ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று நீண்ட நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி, பேரறிவாளன் மற்றும் ரவிச்சந்திரன்  ஆகியோர் விடுவிக்கப்பட இருப்பதாகவும், முருகன் உள்ளிட்ட மீதமுள்ள 4 பேர் அகதிகள் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட இருப்பதாகவும் இன்று வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.

நளினி, பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞரான புகழேந்திக்கு இன்று காலை தமிழக அரசிடமிருந்து அழைப்பு வந்ததாகவும், அவரிடம் நளினி, பேரறிவாளன், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்ய முடிவு செய்திருப்பதாக சொல்லப்பட்டதாகவும், இது தொடர்பான ஃபார்மாலிட்டி ( சம்பிரதாய) நடவடிக்கைகளுக்காக வேலூர் சிறைக்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார் என்றும் தகவல்கள் தெரிவித்தன. 

மீதமுள்ள முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரும் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அகதிகள் முகாமுக்கு கொண்டு செல்லப்பட இருப்பதாகவும் புகழேந்தியிடம் சொல்லப்பட்டதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவித்தன. 


இந்நிலையில் இன்று மாலை 6 மணி வரை அதுபோன்று விடுவிப்பு நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் இல்லை.  இந்தச் சூழலில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று பிற்பகல் முதல் அமலுக்கு வந்துவிட்டது. இந்நிலையில் இது தொடர்பாக சட்ட சிக்கல் ஏதும் உள்ளதா என ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும், இன்று இரவுக்குள் ஏதேனும் ஒரு முடிவு தெரியவரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த 3 பேரின் கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் ஏற்பட்ட காலதாமதத்தை காரணம் காட்டி அவர்களுக்கான தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது. மேலும் அவர்களை விடுதலை செய்வது பற்றி உரிய அரசு முடிவெடுக்கலாம் என்றும் கருத்து தெரிவித்தது.


இதைத்தொடர்ந்து முருகன், சாந்தன், பேரறிவாளன் மட்டுமின்றி,  ஏற்கனவே இவ்வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் சிறையில் இருந்து விடுவிப்பதாக தமிழக அரசு அறிவித்தது.

ஆயுள் தண்டனை காலம் முடிந்த நிலையில் அவர்களை விடுதலை செய்வதாக தமிழக அரசு எடுத்த முடிவுக்கு எதிராக, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. கடந்த டிசம்பரில் வழக்கு விசாரணை முடிவில், ‘இந்த வழக்கில் உள்ளவர்களை விடுதலை செய்வது குறித்த அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை. மத்திய அரசுக்குத்தான் உள்ளது’ என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

இதனையடுத்து இவ்விவகாரத்தில் 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு மற்றொரு முயற்சியை மேற்கொண்டது. இந்நிலையில், பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிப்பது குறித்து கருத்துக் கேட்டு தமிழக தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், மத்திய உள்துறை செயலாளருக்கு நேற்று முன்தினம் கடிதம் எழுதி இருந்தார்.



அதில், பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், நளினி உள்ளிட்ட 7 பேர் 24 ஆண்டுகளாக சிறையில் இருப்பதாகவும், அவர்களை விடுப்பதில் மத்திய அரசு கருத்தை தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

மத்திய அரசிடமிருந்து இது தொடர்பாக கருத்து எதுவும் வராத நிலையில்தான் மேற்கண்ட தகவல் இன்று மதியம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.



« PREV
NEXT »

No comments