Latest News

March 04, 2016

தமிழகம், புதுச்சேரியில் மே 16ல் சட்டசபைத் தேர்தல்!: 19ம் தேதி வாக்கு எண்ணிக்கை
by admin - 0

தமிழகம், புதுச்சேரி, கேரள மாநில சட்டசபைகளுக்கு மே 16ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 19ம் தேதி நடக்கிறது. இதனை தலைமைத் தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி இன்று டெல்லியில் தெரிவித்தார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளும் உடனடியாக அமலுக்கு வந்துவிட்டதாகவும் ஜைதி அறிவித்தார். தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் 22ம் தேதி (வெள்ளிக்கிழமை) மனுத்தாக்கல் தொடங்கும். வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 29ம் தேதி (வெள்ளிக்கிழமை) கடைசி நாளாகும்.

வேட்புமனு பரிசீலனை ஏப்ரல் 30ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறும். வேட்புமனுவை வாபஸ் பெற மே 2ம் தேதி (திங்கள்கிழமை) கடைசி நாள் ஆகும். மே 16ம் தேதி (திங்கள்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறும். மே 19ம் தேதி (வியாழக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

அதே போல புதுச்சேரியிலிலுள்ள 30 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி தவிர கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே, தேர்தல் தேதி தொடர்பாக, இந்த 5 மாநில தேர்தல் அதிகாரிகளிடம் இந்திய தேர்தல் ஆணையர் கருத்து கேட்டு வந்தார். டெல்லியில் 5 மாநில தேர்தல் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டமும் நடந்தது.

இந்நிலையில், இன்று மதியம் 3 மணிக்கு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார், தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி. அப்போது அவர் அளித்த பேட்டி:

  • தமிழகத்தில் 65,616 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும்
  • புதுவையில் 913 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும்
  • தமிழகத்தில் மொத்தம் 5.8 கோடி வாக்காளர்கள் உள்ளனர்
  • வாக்கு இயந்திரத்தில் நோட்டாவுக்கு தனி சின்னம் பொருத்தப்பட உள்ளது.
  • குழப்பத்தை தவிர்க்க, கட்சிகளின் சின்னத்தோடு சேர்த்து, வாக்கு இயந்திரத்தில் வேட்பாளர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றிருக்கும்.
  • ஒவ்வொரு தொகுதியிலும் அனைத்து மகளிர் வாக்குச் சாவடி அமைக்கப்படும்.

தமிழக அரசின் பதவி காலம் மே மாதம் 22ம் தேதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

« PREV
NEXT »

No comments