Latest News

March 06, 2016

கிளிநொச்சி உணவகங்களில் பழுதடைந்த உணவுகள் கண்டுகொள்ளாத சுகாதாரப் பகுதியினர்
by admin - 0

கிளிநொச்சி உணவகங்களில் பழுதடைந்த உணவுகள் கண்டுகொள்ளாத சுகாதாரப் பகுதியினர். புகைத்தல் ஊக்குவிப்பு மையங்களாகவும் உணவகங்கள் காணப்படுகின்றன.

கிளிநொச்சியில் உள்ள பல உணவகங்களில் உடலுக்கு ஒவ்வாத பழுதடைந்த உணவுப் பண்டங்கள் விற்கப்பட்டு வருகின்றது. அதனை வாங்கிச் சாப்பிட்டவர்கள் பலர் உடல் கோழாறுகளுக்குள்ளானதாகவும் இவ்விடயத்தில் கிளிநொச்சி சுகாதாரப் பகுதியினர் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் கூறிக் கவலை தெரிவிக்கப்படுகின்றது. 


இதேவேளை இப்படியான உணவகங்கள் இளைஞர்கள், சிறுவர்களுக்கான புகைத்தல் ஊக்குவிப்பு மையங்களாகவும் காணப்படுகின்றன.
கிளிநொச்சி நகர் ஏ-9 வீதி, பரந்தன் நகர் ஆகிய பகுதிகளில் காணப்படும் உணவகங்களில் குறிப்பிட்ட ஒருபகுதி பீடி, சிகரெட், சுருட்டு போன்றவற்றைப் புகைப்பதற்கான இடமாக ஒதுக்கப்பட்டுக் காணப்படுகின்றன. 

அப்பகுதி உணவுப் பண்டங்களைத் தயாரிக்கும் பகுதிக்கு அருகிலேயே காணப்படுகின்றன.


உணவுப் பண்டங்கள் விற்கப்படும் உணவகங்களில் பீடி, சிகரெட், சுருட்டுப் போன்ற புகைத்தல்ப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இப்படியான உணவகங்களுக்குச் செல்லும் இளைஞர்கள் புகைத்தல் பொருட்களையும் சோடா போன்ற குளிர்பானத்தையும் வாங்கிக்கொண்டு அப்பகுதிக்குச் சென்று புகை இழுத்தபடி குளிர்பானங்களையும் பருகி வருகின்றார்கள்.

 இதில் பாடசாலை மாணவர்கள் சிலரும் இப்படியான உணவகங்களை நாடிச் சென்று புகைத்தல் பழக்கத்தைப் பின்பற்றி வருகின்றார்கள்.  

உணவகங்களிலுள்ள புகைத்தலுக்கான பிரத்தியேக இடம் இராணுவத்தினருக்காக அவர்களின் வசதிகருதி ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. 
மற்றும் இப்படியான உணவகங்களில் இராணுவத்தினரையும் புகைப் பொருட்களை வாங்குபவர்களையுமே வாடிக்கையாளர்கள் எனக் கூறி சிறப்பாகக் கவனிக்கப்பட்டு வருவதனை அவதானித்தறிய முடிகின்றது.


இப்படியான உணவகங்களில் பழுதடைந்த உணவுப் பண்டங்கள் வெளிப்படையாக விற்கப்பட்டு வருகின்றன. உணவு தயாரிக்கும் இடங்கள் சுகாதாரச் சீர்கேடு நிறைந்து காணப்படுவதையும் சில உணவகங்களில் உணவு தயாரிப்பவர்கள் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் சுகாதாரச் சீர்கேட்டுடன் உணவுப் பண்டங்களைத் தயாரித்து வருகின்றார்கள்.

வடமாகணத்தில் இதனைக் கண்காணிக்கவென்றொரு அமைச்சர் மற்றும் அவருடன் தொடர்புடைய அதிகாரிகள் இருக்கின்ற போதிலும் இப்படியான சுகாதாரச் சீர்கேடுகள் காணப்படுவதுடன் இளைஞர்கள், சிறுவர்களை புகைத்தல் பழங்கத்தைத் தூண்டும் இடங்களாக உணவகங்கள் காணப்படுகின்றமையை அறிந்திருந்தும் கட்டுப்படுத்த அவர்கள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் எதுவும் தெரியாதமாதிரி இருந்து வருகின்றார்கள்.
எதிர்காலச் சந்ததியும் புகைத்தல் பழக்கத்தைப் பழகினால்தான் புகைத்தல் பொருட்களை எதிர்காலத்திலும் விற்பனை செய்யலாம் என்ற நோக்கத்திலா பொறுப்புவாய்ந்தவர்கள் இவ்விடயத்தில் கண்டுகொள்ளாமல் இருக்கின்றார்கள்?

« PREV
NEXT »

No comments