Latest News

March 29, 2016

விமானத்தை குண்டு இருப்பதாக பயமுறுத்தி கடத்தியவர் கைது
by admin - 0

கெய்ரோ: எகிப்து பயணிகள் விமானத்தை கடத்திய சயிப் எல் தின் முஸ்தபா கைது செய்யப்பட்டுள்ளார் என சைப்ரஸ் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எகிப்தின் அலெக்சாண்ட்ரியாவில் இருந்து எகிப்து ஏர் நிறுவன விமானம் எம்எஸ்181 இன்று கெய்ரோவுக்கு கிளம்பியது. விமானத்தில் 81 பயணிகள், 7 சிப்பந்திகள் இருந்தனர். இந்நிலையில் விமானம் கடத்தப்பட்டு சைப்ரஸ் நாட்டில் உள்ள லார்னாகா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

விமானத்தை தனது உடலில் வெடிகுண்டுகளை கட்டிய எகிப்தை சேர்ந்த இப்ராஹிம் சமஹா(27) என்பவர் கடத்தினார் என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில் விமானத்தை கடத்தியது அலெக்சாண்ட்ரியா பல்கலைக்கழக பேராசிரியர் சமஹா அல்ல என்றும், கடத்தல்காரரின் பெயர் சயிப் எல் தின் முஸ்தபா என்றும் எகிப்து அதிகாரிகள் தற்போது தெரிவித்தனர்.

முஸ்தபாவுடன் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாக விமானத்தில் இருந்த 5 வெளிநாட்டு பயணிகள், 7 சிப்பந்திகள் தவிர்த்து பிற பயணிகள் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் முஸ்தபா சிப்பந்திகளில் 5 பேரை விடுவித்தார். அதன் பிறகு அவரது பிடியில் இருந்த மேலும் 4 பேர் விடுவிக்கப்பட்டனர். சில நிமிடங்களில் 3 பேர் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் முஸ்தபாவை கைது செய்துவிட்டதாக சைப்ரஸ் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. முஸ்தபா குண்டுகள் எதுவும் வைத்திருக்கவில்லை என்று கூறப்படுகிறது. பிணையக் கைதிகள் அனைவரையும் விடுவித்த பிறகு முஸ்தபா தனது இரு கைகளையும் உயர்த்தியபடி விமானத்தில் இருந்து வெளியே வந்து அதிகாரிகளிடம் சரண் அடைந்துவிட்டாராம்.

« PREV
NEXT »

No comments