யாழில் வன்முறைகளைக் கையில் எடுக்கும் மாணவர்கள்: மேற்குலகு போல் மாறும் அபாயம்.
 --ஜெசிந்தா--
ஒரு காலத்தில் கல்வியில் முன்னணியில் இருந்த யாழ் மாவட்டம், தற்போது எதை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது? என்பதே தற்போதைய சூழ்நிலையில் அனைவரதும் கேள்வியாக உள்ளது.
அண்மையில் யாழ் நகரில் அமைந்துள்ள ஒரு பிரபல ஆண்கள் பாடசாலையின் மாணவர்களால் நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் உச்சக் கட்டத்தை அடைந்து நீதிமன்ற வாசலையும் தட்டியுள்ளமை தான் பெற்றோர்களின் அண்மைய அதிர்ச்சிக்கு காரணம்.
இதற்கு உதாரணமாக அண்மையில் குறித்த பாடசாலை மாணவர்களால் நிகழ்த்தப்பட்ட நான்கு வன்முறைச் சம்பவங்களைக் குறிப்பிட முடியும்.
முதலாவது, பாடசாலை வளாகத்தில் இருந்த அதிபரின் வீடு (விடுதி) தாக்கப்பட்டமை.
இரண்டாவது, தட்டாதெரு வாள்வெட்டு சம்பவம்.
மூன்றாவது, O/L மாணவன் ஒருவனின் வகுப்புக்குள் நுழைந்து A/L மாணவர்கள் குழுவாக கொலைவெறித் தாக்குதல். சுயநினைவை இழந்த நிலையில் இருந்த குறித்த மாணவனை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டமை.
நான்காவது, கொக்குவில் பகுதியில் உள்ள மாணவர்களின் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக உள்ள ஆசிரியரின் வீடு தாக்கப்பட்டமை.
யாழிலுள்ள வேறும் சில பாடசாலை மாணவர்களால் நிகழ்த்தப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் பல இருந்தாலும் இவை பாரதூரமானதாய் அமைந்துள்ளன.
குறிப்பாக அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளில் தான் ஆசிரியரை சுட்டுக் கொன்ற மாணவன், சக மாணவர்களை சுட்டுக் கொன்ற மாணவன், போன்ற செய்திகளைப் படித்திருப்போம். ஆனால், தற்போது நம் நாட்டிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
போதைப் பொருளுக்கு அடிமையாதல், அதீத மதுப் பாவனை, வழிப்பறி, கொள்ளை, தாக்குதல் சம்பவங்கள் என மாணவர்களின் வன்முறைகள் யாழ்ப்பாணத்தில் பரவலாக இடம்பெற்று வருகின்றன.
மாணவர்கள் ஏன் இப்படியான வன்முறைகளைக் கையில் எடுக்கின்றார்கள். என்பதனை அறிய அவர்களின் சமூக உளவியலை ஆராய்வது அவசியமானதாகும்.
மாணவர்கள் ஒன்றும் வேற்றுக் கிரகத்தில் இருந்து வந்தவர்களல்ல. எம் சமூகத்தில் இருந்து தான் தோன்றியவர்கள். அப்படியாயின் எம் சமூகமே ஒரு வன்முறைச் சமூகமா?
ஒரு மாணவன் சிறிய வயதிலிருந்து கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் பாடசாலையில் கல்வி கற்று தனது பாடசாலைக் கல்வியின் இறுதிக் காலப்பகுதியில் வன்முறையைக் கையில் எடுக்கின்றான் என்றால், அதற்கு எமது கல்வி கற்பித்தல் முறையிலுள்ள குறைபாட்டைத் தவிர வேறு என்ன காரணமாக இருக்க முடியும்.
உண்மையில் இதனை ஒரு சமூக அவலமாகவே நோக்க வேண்டியுள்ளது. நாம் எதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம். என்று எங்களை நாங்களே சுய பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.
யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை ஆண் பிள்ளைகளுக்கு பெற்றோர் கொடுக்கும் எல்லையற்ற சுதந்திரமும், நினைத்த உடன் நினைத்த பொருளை வாங்கிக் கொடுக்கும் தன்மையும் தான் இத்தகைய வன்முறைச் சம்பவங்களுக்கு தூண்டுகோலாக அமைகின்றது.
யாழ்ப்பாணத்தில் அண்மையில் மாணவனொருவன் பெற்றோரிடம் மோட்டார் சைக்கிள் வாங்கித் தருமாறு கேட்டிருக்கிறான். அவர்கள் மறுக்கவே மின்சாரத்துக்குள் கையை வைத்து தற்கொலை செய்வேன் எனக் கூறியிருக்கிறான். உடனடியாக பெற்றோர் மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். இந்த சம்பவத்தில் மாணவனின் மனநிலையை முதலில் பாருங்கள்.
புலம்பெயர் தமிழர்களால் அனுப்பப்படும் பணங்களால் மாணவர்கள் தென்னிந்திய சினிமா பாணியில் வாழ முற்படுகின்றனர் என கல்வியலாளர் ஒருவர் அண்மையில் சுட்டிக் காட்டியிருந்தார்.
தொடர்ச்சியான வன்முறைகளின் விளைவுகளாக தினமும் காவல் நிலையங்களுக்கும், நீதிமன்றங்களுக்கும் அலைய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும்.
15, 16 வயதுகளில் இப்படியான பிரச்சினைகளில் சிக்கி தங்கள் வாழ்க்கையையே தொலைத்து விடும் நிலையும் உள்ளது.
இதனால் குடும்பத்தின் கௌரவம், சமூக மதிப்பு என்பன இல்லாமல் போகும் நிலை ஏற்படும்.
ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா? இதனாலேயே படிப்பிலும், வாழ்க்கையிலும் கவனம் சிதறி திசைமாறிய பறவைகள் ஏராளம் உள்ளன.
தவறுகளைச் செய்யும் தங்கள் பிள்ளைகளைக் கண்டிக்காமல், அவர்களுக்கு முன்னாலேயே என்ர பெடியன் அப்படியெல்லாம் ஒருக்காலும் செய்ய மாட்டான் என்று கண்மூடித்தனமாக ஆதரிப்பதும், ஆண் பிள்ளைகள் ஒரு வயசில் கொஞ்சம் அப்படி இப்படித் தான் இருக்கும். பிறகு சரியாகி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் கண்டும் காணாது விட்டு விடுவதால் தான் இன்று இந்த இழிநிலை ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு பாடசாலைகளிலும் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில மாணவர்கள் தான் இப்படியான வன்முறைகள் உருவாவதற்கு மூலகாரணியாக உள்ளார்கள். இவர்களே மேலும் பல மாணவர்களை வன்முறை செய்யத் தூண்டுகிறார்கள். இப்படியான மாணவர்களை சரியாக இனங்கண்டு அவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்படுவது அவசியமாகும்.
மேலை நாடுகளில் உள்ளது போன்று, ஒவ்வொரு பாடசாலைக்கும் உளவியல் ஆலோசகரை நியமிக்க வேண்டும். அவர் கிழமையில் ஒருமுறை அல்லது இருமுறை சென்று மாணவர்களின் உளவியல் ரீதியான பிரச்சினைகளை கண்டறிந்து தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்களின் பிறந்த, வளர்ந்த சூழ்நிலையை ஆராய்ந்து அதற்கான உளவியல் ரீதியான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டியது அவசியம்.
ஆசிரியருக்கு மாணவர்கள் பயப்பட்ட காலம் போய், மாணவர்களைக் கண்டால் ஆசிரியர்கள் பயப்படும் காலம் வந்துவிட்டது. முன்னைய காலங்களில் வீதியில் ஆசிரியர்கள் போவதைக் கண்டால் தொப்பியை கழட்டி மரியாதை செய்வதும், பாடசாலையில் ஆசிரியர் சொல்லுக்கு மறுபேச்சு பேசாத ஒரு நிலையும் இருந்தது.
எந்தப் பிள்ளைகள் தாய், தந்தை, தாத்தா, பாட்டியின் முழுப் பராமரிப்பில் வளர்கிறதோ அக்குழந்தைகள் திசைமாறிப் போவதற்க்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்றே கூறலாம்.
முன்னைய காலங்களில் எல்லாம் அனைத்து மதங்களும் அன்பையே போதிக்கின்றன என்கிற அடிப்படையில் அறநெறி வகுப்புக்கள், ஆன்மீக வழிகாட்டல்கள் போன்றன ஒவ்வொரு ஊரிலும் இருந்தன. ஆனால், தற்போதைய காலங்களில் இவை இல்லாமல் போய் விட்டன. அல்லது மிகக் குறைந்தளவே இடம்பெறுகின்றன என்றே கூறலாம்.
தடம் மாறிப் பயணித்துக் கொண்டிருக்கும் மாணவ சமுதாயத்தை சரியான வழியில் வழிநடத்த கல்விப் புலமையாளர்கள் மட்டத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் உடனே அவசியம்.
--ஜெசிந்தா--
No comments
Post a Comment