Latest News

February 05, 2016

மீண்டும் பதவிக்கு வரும் சரத்பொன்சேகா? அச்சத்தில் ஊடகவியலாளர்கள்!
by Unknown - 0

முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா ஆளும் ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்துள்ளதுடன் அவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படலாம் என்ற செய்தியானது பத்திரிகையாளர்கள் மைத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.

இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் இராணுவத்தினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தும், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக செய்திகளை வெளியிட்ட பல்வேறு ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டும், கொல்லப்பட்டும், காணாமல் போகச் செய்யப்பட்டும் இருந்தனர்.

இந்நிலையில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் குறிப்பாக பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தி நேசன் பத்திரிகையின் துணை ஆசியரியாக இருந்த Keith Noyahr (கீத் நொயர்) சரத் பொன்சேகாவை தாக்கி இராணுவம் என்பது ராணுவ தளபதியின் தனிப்பட்ட ராஜ்ஜியம் இல்லை என ஒரு கட்டுரை எழுதினார்.

இதற்காக அவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டார். இந்த தாக்குதலில் சரத் பென்சேகாவுக்கு நேரடி தொடர்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

இதன் போது அமெரிக்க தூதராக இருந்த ரொபேட் ஓ பிளேக் கடந்த 2008 யூன் மாதம் எழுதியுள்ள ஒரு குறிப்பில், Keith Noyahr(கீத் நொயர்)  தாக்கப்பட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற பேரணியில் பங்கேற்றார்கள் என்பதற்காக அரசு அச்சகத்தை சேர்ந்த இரண்டு பத்திரிகையாளர்களை முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபைய ராஜபக்ச அழைத்து 2 மணி நேரத்துக்கு மேலாக கடுமையாக திட்டியுள்ளார்.

இதேவேளை, ஊடக சுதந்திரத்துக்கு ஆதரவாக பேரணி நடத்தினால் சரத் பொன்சேகாவை சேர்ந்த குழுக்களால் கொல்லப்படுவீர்கள் என்று எச்சரித்துள்ளார் என பத்திரிகையாளர்கள் தெரிவித்திருந்தனர்.

அரசாங்க பத்திரிகையான லேக் ஹவுஸில் பணியாற்றிய ஊடகவியலாளர்களும் இந்தப் பேரணியில் பங்கேற்க அனுமதி இல்லை என்றும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

இதேவேளை சரத் பொன்சேகாவுக்கு எதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் அப்போது கூறியுள்ளார்.

பொன்சேகாவை கடவுளாக வணங்கும் ராணுவ வீரர்கள் சிலர் உள்ளனர். நீங்கள் இவ்வாறு அவரை விமர்சித்தால், எங்களால் அவர்களை தடுக்க முடியாது என்றும் எச்சரித்துள்ளார் என வோஷிங்டனுக்கு எழுதியுள்ள குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட அரசாங்கம் சட்டத்தை மீண்டும் நிலைநிறுத்துவதற்காக சமரசங்கள் மேற்கொள்ளுவதாக ஊடகவியலாளர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக சுதந்திர ஊடக இயக்கத்தை சேர்ந்த முன்னாள் அமைப்பாளர் ஒருவர் கருத்து வெளியிடுகையில்அ கீத் நொயர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணையை அரசாங்கம் விரைவில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் சரத் பொன்சேகாவுக்கு பதவி வழங்குவது விசாரணையை ஒன்றுமில்லாமல் செய்துவிடும். ஊடகவியலாளர்கள் மீது நடைபெற்ற தாக்குதலில் சரத் பொன்சேகாவுக்கு முக்கிய தொடர்புண்டு.

அவர் தளபதியாக இருந்த காலத்தில் ஏராளமான தமிழ் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அப்போது அதிகாரத்தில் இருந்த மகிந்த ராஜபக்ச இது தொடர்பாக எந்த விசாரனையும் நடத்தவில்லை.

புதிய அரசாங்கம் விசாரணையை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் இந்நிலையில் சரத் பொன்சேகாவின் வருகை அனைத்தையும் அழித்துவிடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் விடுதலைப் புலிகளை அழிக்க கோத்தபாய ராஜபக்சவும், சரத்பொன்சேக்காவும் இணைந்து பல்வேறு ராஜதந்திர நகர்வுகளை முன்னெடுத்தனர்.

இதன்போது, தமக்கு எதிராக எவர் விமர்சனம் செய்தாலும் அவர்களை தண்டிப்பதும், அடையாளம் தெரியாமல் பண்ணுவதிலும் சரத்பொன்சேக்காவிற்கும், கோத்தபாய ராஜபக்சவிற்கும் விசேட அதிகாரங்களை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வழங்கியிருந்தார்.

இருப்பினும், புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, மகிந்த ராஜபக்சவிற்கும், முன்னாள் இராணுவத் தளபதிக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேக்கா மகிந்த ராஜபக்சவை எதிர்த்து நின்றார். ஆனாலும் தேர்தலில் அவரால் வெற்றி பெறமுடியவில்லை. தோல்வியடைந்த சரத்பொன்சேக்கா மீது, பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பபட்டார். நாடாளுமன்ற பதவியும் பறிக்கப்பட்டது.

இந்நிலையில் புதிய அரசாங்கம் ஆட்சியை ஏற்றுக்கொண்டதோடு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சரத் பொன்சேகாவின் பதவிகள் அனைத்தையும் திரும்பக் கொடுத்தார்.

உயரிய விருதான பீல்ட் மார்ஷல் விருதையும் வழங்கி கௌரவப்படுத்தப்பட்டார்.

இந்நிலையிலேயே அவர் அரசியலில் பிரவேசித்து, அமைச்சுப் பொறுப்பை பெற்றுக்கொள்வார் என்ற செய்தி வெளியாகியிருக்கின்றது. இது பெரும்பாலும் நல்லாட்சியை விரும்பிய மக்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளதோடு, ஊடகவியலாளர்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
« PREV
NEXT »

No comments