Latest News

November 05, 2015

மன்னாரில் 4ஆயிரம் ஏக்கரை இராணுவம் சுவீகரிக்க முயற்சி
by admin - 0

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் இராணுவத்தாலும் அரசாலும் சுவீகரிக்கப்பட்ட காணிகளை மக்களிடம் மீளக் கையளிக்கப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில் தொடர்ந்தும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன 


மன்னார் மாவட்டத்தில் சுமார் நாலாயிரம் ஏக்கர் காணியை இராணுவத்தினர் சுவீகரிக்க மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தின் சன்னார் பிரதேசத்தில் இந்த சுவீகரிப்பு முயற்சி இடம்பெற்று வருகிறது. 

குறித்த பகுதிகளுக்குள் மக்களின் விவசாய நடவடிக்கைகள் மற்றும் அன்றாட அடிப்படைத் தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் கோயில் குளம் சவேரியார் புரம் குளம் என்பனவும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்படுகிறது. 



குறித்த பகுதிகளை சட்ட ரீதியாக பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருவதாகவும் விரைவில் காணிகளை நில அளவையாளர்கள் அளவிட உள்ளனர் என்றும் மன்னார் மாவட்ட அரச செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வட மாகாணத்தில் இலங்கை அரசும் படையினரும் பல்லாயிரக்கணக்கான காணிகளை சுவீகரித்தும் ஆக்கிரமித்தும் வைத்துள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை மாவட்ட மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 



இதேவேளை இலங்கையின் புதிய அரசும் முன்னைய அரசைப்போல காணி சுவீகரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர். அண்மையில் பூநகரியிலும் காணி சுவீகரிப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதுடன் அதற்கு எதிராக போராட்டமும் இடம்பெற்றிருந்ததது. 

இதேவேளை காணி சுவீகரிப்பை எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் புதிய அரசு இராணுவத்தின் காணி சுவீகரிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
« PREV
NEXT »

No comments