Latest News

October 07, 2015

விசுவமடு கூட்டுப்பாலியல் வல்லுறவு வழக்கு: 4 இராணுவ சிப்பாய்களுக்கு 30 ஆண்டுகள் கடூழியச் சிறை : இளஞ்செழியன் அதிரடி தீர்ப்பு
by admin - 0


கிளிநொச்சி விசுவமடு கூட்டுறவுப் பாலியல் வல்லறுவு மற்றும் பாலியல் துஸ்பிரயோக வழக்கில் எதிரிகளான 4 இராணுவத்தினருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 30 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். 

கடந்த 2010 ஆம் ஆண்டு வன்னிப்பிரதேசத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போது, இராணுவத்தினரால், விசுவமடு பகுதியில் இரண்டு குழந்தைகளின் தாயார் ஒருவர் கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதுடன், 5 பிள்ளைகளின் தாயார் ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். நள்ளிரவு வேளையில் பாதுகாப்பற்ற தற்காலிகக் கூடார வீடொன்றில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தினால் விசுவமடு பிரதேசம் மட்டுமல்லாமல் கிளிநொச்சி மாவட்டத்தின் மீள்குடியேற்ற பிரதேசமே பெரும் அச்சத்தில் மூழ்கியிருந்தது. 

 இந்தச் சம்பவத்தையடுத்து, முழுமையான இராணுவ மயமாகியிருந்த சூழலில், கொட்டில்களினும் தரப்பாள் கூடாரங்களிலும் மக்கள் மீள்குடியேறியிருந்த அந்த நேரம் பெண்கள் உரிய பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்ற அச்சத்துடனேயே இரவு நேரங்களைக் கழித்தார்கள். 

இந்தச் சம்பவத்தில் விசுவமடுவைச் சேர்ந்த 27 வயதுடைய 2 குழந்தைகளின் தாயார் ஒருவரை கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும்,  மற்றுமொரு பெண்ணாகிய  5 குழந்தைகளின் தாயாரை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாகவும் குற்றம் சுமத்தி சட்டமா அதிபர் 4 இராணுவத்தினருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். 

விசுவமடு பிரதேச இராணுவ முகாமில் கடமையாற்றியிருந்த, பண்டித கெதர சாந்த சுபசிங்க, பத்திரண பண்டாரநாயக்க பிரியந்த குமார, தெல்கொல்லகே தனுஸ்க புஸ்பகுமார, கொப்பேராலகே கெதர தனுஸ்க பிரியலால் ரத்நாயக்க ஆகிய 4 இராணுவ சிப்பாய்களுக்கு இந்த வழக்கில் 5 கூட்டுப்பாலியல் வல்லுறவு, பாலியல் துஸ்பிரயோகம் உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. 

இந்த வழக்கு விசாரணையின்போது, நான்காவது எதிரி மன்றில் ஆஜராகவில்லை. தலைமறைவாகியிருந்தார். அவர் இல்லாமலேயே இந்த வழக்கு விசாரணை நடைபெற்று இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

குற்றம் சுமத்தப்பட்டிருந்த 4 இராணுவ சிப்பாய்களும் விசாரணையில் குற்றவாளிகளாகக் காணப்பட்டிருப்பதாகத் தெரிவித்து,அவர்கள் ஒவ்வொருவருக்கும் மொத்தமாக 30 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்குவதாக தனது தீர்ப்பில் தெரிவித்தார். 

இரண்டு பிள்ளைகளின் தாயராகிய இளம்பெண்ணை கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றத்திற்காக எதிரிகள் நால்வருக்கும், இந்தத் தீர்ப்பில் தலா 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்து பிள்ளைகளின் தாயராகிய பெண்ணை அதே சம்பவத்தில் பாலியல் துஸ்பிரயோகம் செய்தமைக்காக நான்கு எதிரிகளுக்கும் இந்தத் தீர்ப்பில் 5 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

நட்டஈடும்,தண்டமும் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு நட்டயீடாக 5 லட்ச ரூபாவும், பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு லட்ச ரூபாவும் நட்டயீடு வழங்க வேண்டும் என்றும் நட்டயீடு செலுத்தத் தவறும் பட்சத்தில் எதிரிகள் ஒவ்வொருவரும் 3 வருட கடூழியச் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.  

அதேநேரம், கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு 25 ஆயிரம் தண்டப்பணமும், பாலியல் துஸ்பிரயோகத்திற்கு 10 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் செலுத்த வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் எதிரிகள் 2 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, இந்த வழக்கின் எதிரிகள் நால்வருக்கும் கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு 20 வருடமும், பாலியல் துஸ்பிரயோகத்திற்கு 5 வருடமும்,நட்டயீடு வழங்காவிட்டால் 3 வருடமும், தண்டப்பணம் செலுத்தாவிட்டால் 2 வருடமுமாக மொத்தமாக 30 வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது

« PREV
NEXT »

No comments