Latest News

September 23, 2015

ஃபோக்ஸ்வாகன் நிறுவனத் தலைமை அதிகாரி பதவி விலகல்!
by Unknown - 0

பிரபல ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான, ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, மார்ட்டின் விண்டர்கோன் , மாசு வெளியீடு சோதனைகளை அந்நிறுவனம் ஏமாற்றிய மோசடி விஷயத்தை அடுத்து பதவி விலகிவிட்டார்.

அமெரிக்காவில் விற்கப்பட்ட கார்களில் அமெரிக்க மாசு கட்டுப்பாடு சோதனைகளை ஏமாற்ற உதவும் ஒரு மென்பொருளை வடிவமைத்து விற்றதாக அந்த நிறுவனத்தின் மீது அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து அந்த நிறுவனம், தனது கார்கள் வெளிவிடும் புகை விஷயத்தில், சோதனைகளை ஏமாற்ற ஒரு கருவியை பொருத்தியதாக ஒப்புக்கொண்டிருந்தது.

உலகின் மிகப்பெரும் கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வாகன் உலகெங்கிலும் இது போன்ற சோதனையை ஏமாற்றும் கருவிகள் 1.1 கோடி வாகனங்களில் பொருத்தப்பட்டதாகவும், இதை சரி செய்ய சுமார் 6.5 பிலியன் யூரோக்களை ஒதுக்குவதாகவும் அறிவித்தது.

பதவி விலகிய மார்ட்டின் விண்டர்கோன், இது தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில், கடந்த சில நாட்களில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக தான் மிகுந்த அதிர்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டார்.

தன்னைப் பொறுத்தவரை எந்தத் தவறும் நடந்தது தனக்குத் தெரியாது என்றும், ஆனால் நிறுவனத்தின் நலன்களை மனதில் வைத்தே பதவி விலகுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"என்னுடைய பதவி விலகல் மூலம் ஒரு புதிய தொடக்கத்துக்கு வழிகோலுகிறேன்" , என்றார் அவர்.
« PREV
NEXT »

No comments