Latest News

September 29, 2015

வலுவான சர்வதேச பிரசன்னத்தை உறுதிசெய்யும் தீர்மானமொன்றை ஐ.நா மனித உரிமை பேரவை நிறைவேற்றவேண்டும் - HRW
by Unknown - 0

இலங்கையின் ஈவிரக்கமற்ற உள்நாட்டுயுத்தத்தின் துஸ்பிரயோகங்களிற்கு நீதி வழங்குவதற்கான பொறிமுறையில் வலுவான சர்வதேச பிரசன்னம் காணப்படுவதை உறுதிசெய்யும் தீர்மானமொன்றை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை நிறைவேற்றவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அதன் ஜெனீவா இயக்குநர் ஜோன் பிசர் தெரிவித்துள்ளதாவது.

இலங்கை அரசாங்கம் செயற்படவேண்டிய தருணம் வந்துவிட்டதை தற்போது சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் புலப்படுத்துகின்றது.சர்வதேச பங்களிப்புடனான நீதிபொறிமுறையை தீர்மானம் அங்கீகரித்துள்ளதன் மூலம் நீதிவழங்குவதற்கு சர்வதேசபங்களிப்பு அவசியம்என்ற முக்கியமான விடயத்தை அது ஏற்றுக்கொண்டுள்ளது.

இலங்கையின் புதிய அரசாங்கம் இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதுடன்,இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களிற்கு முக்கியமான வாக்குறுதிகளை வழங்கிவருகின்றது.

எனினும் நேர்மையான நீதிசெயற்பாடுகளில் உள்நாட்டு அழுத்தங்களும்,அச்சுறுத்தல்களும் காணப்படுவதை உறுதிசெய்வதற்கு சர்வதேசபங்களிப்பும், கண்காணிப்பும் அவசியம்.

இலங்கையில் உடனடியாக முன்னெடுக்கவேண்டிய சீர்திருத்தங்களிற்கான உறுதியான வேண்டுகோளாகவும் இந்த தீர்மானம் அமைந்துள்ளது.

உத்தேச தீர்மானத்தில் கலப்பு நீதிமன்றம் பற்றி குறிப்பிடப்படாத போதிலும், அனைத்து பரிந்துரைகளும் அமுல்படுத்தப்பட்டால் கடந்த கால சம்பவங்களுக்கு நீதி வழங்கக்கூடிய ஓர் நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைமையின் போது ஏற்படக் கூடிய குழப்ப நிலைமைகள் பிரச்சினைகளை தவிர்க்க அர்த்தமுள்ள சர்வதேச பங்ளிப்பு, சர்வதேச கண்காணிப்புப் பொறிமுறைமை மிகவும்அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச தலையீடு இல்லாவிட்டால் உள்ளக அழுத்தங்கள் தலையீடுகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாம் கிடைக்கக்கூடிய சாத்தியங்கள் குறைவாகவே காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை ரத்துசெய்தல் உள்ளிட்ட பல்வேறு யோசனைகளை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படுகின்றதா அல்லது வேறுபெயரில் அதேபோன்ற மோசமான சட்டம் கொண்டுவரப்படுகின்றதா என்பதே இந்த விவகாரத்தில்இலங்கையின் புதிய அரசாங்கத்தின் நேர்மையை வெளிப்படுத்தப்போகின்றது.

ஐக்கிய நாடுகளின் பிரகடனம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் இலங்கையின் மனித உரிமை கரிசனைகளிற்கு தீர்வை காண்பதில் அது மைல்கல்லாக அமையும்.வழங்கிய வாக்குறதிகளை நிறைவேற்றவேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்திடமே தற்போதுள்ளது,ஐக்கிய நாடுகளின் உறுப்பினர்கள் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்யவேண்டும், கண்காணிக்கவேண்டிய தேவையில்லாத நாடுகளின் பட்டியலில் இலங்கையை சேர்ப்பதற்கான தருணம் இன்னமும் வந்துவிடவில்லை .

தீர்மானத்தின் பரிந்துரைகளை சர்வதேசம் கண்காணிப்பதற்கு போதியளவு சட்ட அதிகாரம் இல்லாத நிலைமை நீடித்து வருகின்றது என தெரிவித்துள்ளார். தீர்மானத்தின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படாவிட்டால் எவ்வாறான விளைவுகள் ஏற்படும் என்பது குறித்த அழுத்தமான நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்படாமை கவனிக்கப்பட வேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களை முழு அளவில் இலங்கையில் அமுல்படுத்தினால், மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்தும் ஓர் மைல் கல்லாக இந்த நடவடிக்கை அமையும் என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையுடன் இணைந்து நிலையான மாற்றத்தை ஏற்படுத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமென பிசர் கோரியுள்ளார்.

« PREV
NEXT »

No comments