Latest News

December 08, 2013

பொதுநலவாய மாநாடு இலங்கைக்கு பாதகமா? சாதகமா?
by admin - 0

இலங்கைக்கு சர்வதேச ரீதியிலுள்ள அவப் பெயரை நீக்கிக் கொள்ளவும் இலங்கையின் கெளரவத்தை தூக்கி நிறுத்தவுமே இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாடு நடத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாக இருந்தது. இருந்தும் இந்த மாநாடு இந்த நோக்கத்தை நிறைவேற்றியதா என்பது கேள்விக்குறியாக இருப்பதாகவே அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், மனித உரிமைகள், ஜனநாயகம், சட்டத்தின் ஆதிபத்தியம், சீரான நிர்வாகம் போன்றவை குறித்தும் இலங்கை வந்த முக்கிய நாடுகளின் தலைவர்களும் சர்வதேச ஊடகங்களினதும் கவனம் திரும்பியதே இதற்குக் காரணமாகும்.
இந்த மாநாட்டுக்குப் பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் 54 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இந்த மாநாட்டில் 21 நாடுகளின் அரச தலைவர்கள் மாத்திரமே கலந்து கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய நாடுகளின் சார்பாக வெளிவிவகார அமைச்சர்கள் சிலரும் பிரதிநிதிகளுமே கலந்து கொண்டனர் என தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கம் பிரிட்டனில் இயங்கும் சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்த கெலம் மெக்ரே உட்பட அந்த நிறுவனத்தைச் சேர்ந்த பத்துக்கும் அதிகமான ஊடகவியலாளர்களுக்கு இந்த மாநாட்டுக்கு வந்து செய்திகள் சேகரிக்க விசா வழங்கியிருந்தது. இது தொடர்பாக தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லயிடம் உள்நாட்டு ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

‘‘இலங்கையில் ஜனநாயகம் நிலவுகின்றது என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இலங்கையில் எந்தப் பகுதிக்கும் அவர்கள் பயணம் செய்யலாம். அவர்கள் முன்னர் இலங்கைக்கு எதிராக வெளியிட்டிருந்த இறுதிக்கட்ட யுத்தக் குற்றச்சாட்டுகள் பிழையானது என்பதை அவர்கள் இந்த நாட்டில் எப்பகுதிக்கும் விஜயம் செய்வதன் மூலம் புரிந்து கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. எம்மிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை’’ இவ்வாறு அமைச்சர் பதிலளித்தார்.

ஆனால் நடந்தது என்ன?

சனல் 4 நிறுவன ஊடகவியலாளர்களுக்கு இலங்கைக்கு எதிராக மேலும் பல வீடியோக்களை வெளியிடுவதற்கு அரசாங்கம் தெரிந்தோ தெரியாமலோ வழிவகுத்துள்ளதாகவே அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இவர்களுக்கு இலங்கை வருவதற்கு விசா வழங்காமலிருந்தால் சர்வதேசத்தின் பழிச் சொல்லிலிருந்து இலங்கை தப்பித்திருக்கலாம்.
சனல் 4 தொலைக்காட்சி இந்தியாவின் சர்ச்சைக்குரிய காஷ்மீர் பற்றிய வீடியோவொன்றினை ஒளிபரப்பியது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பை உடனடியாகத் தெரிவித்தது மட்டுமன்றி, இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாடு நடைபெற்ற கால கட்டத்தில் சனல் 4 ஊடகவியலாளர்கள் இந்தியாவுக்கு விஜயம் செய்ய இந்திய குடிவரவு குடியகல்வுப் பிரிவினரிடம் விசா விண்ணப்பித்திருந்தனர். ஆனால், இந்திய அரசாங்கம் சனல் 4 ஊடகவியலாளர்களின் விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டது. இந்த நடைமுறையை இலங்கை பின்பற்றி இருக்க வேண்டும் என்பதே பொதுவான கருத்தாகவுள்ளது.
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இலங்கையில் காலடி வைத்தது முதலே இலங்கை அரசுக்கு பெரும் தலையிடியாக அமைந்து விட்டது. இலங்கைக்கு வருவதற்கு முன்னரே அவர் பிரிட்டனில் வைத்து நான் இலங்கையின் வட பகுதிக்கு குறிப்பாக யாழ் நகருக்கு விஜயம் செய்வேன். அங்கு நடைபெறும் மனித உரிமைகள் மீறல் உட்பட இன்னும் பல குற்றச்சாட்டுக்கள் குறித்து இலங்கையிடம் நேரடியாகக் கேள்வி எழுப்புவேன் எனவும் தெரிவித்திருந்ததையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இலங்கையில் காலடி வைத்தது முதலே வேண்டா வெறுப்பாக நடந்து கொண்டார் என்பது ஊடகங்களில் வெளியான செய்திகளிலிருந்து தெரிந்து கொள்ளக்கூடியதாகவிருந்தது. அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இறங்கியதும் வரவேற்கவென நடந்த நடனத்தை புறக்கணித்தார். விருந்தினர் புத்தகத்தில் சைச்சாத்திடவுமில்லை.
கொழும்பு தாமரைத்தடாக மஹிந்த ராஜபக் ஷ அரங்கில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வுகளில் பங்குபற்றிய அவர் உடனடியாக யாழ்ப்பாணத்தை நோக்கிய தனது பயணத்தை ஆரம்பித்தார். அவருடன் பிரிட்டனின் சனல் 4 ஊடகவியலாளர்களும் யாழ் சென்றனர். யாழ்ப்பாணம் நூலகத்தில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரைச் சந்தித்து பிரித்தானிய பிரதமர் டேவின் கமரூன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையின் போது சனல் 4 ஊடகவியலாளர்கள் உட்பட உள்நாட்டு ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்த சந்திப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது யாழ்.நூலகத்துக்கு முன்னால் யுத்தத்தின் போதும் அதற்குப் பின்னரும் காணாமற் போனோரின் உறவுகள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்திக் கொண்டிருந்தனர். காணாமற் போன தமது பிள்ளைகள், கணவர்மார், சகோதரர்களது புகைப்படங்களையும் அவர்கள் கைகளில் ஏந்தியவாறு கோஷமிட்டபடி பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனின் கவனத்தை ஈர்க்க முயன்றனர். ஆனால், அவர்களது இந்தப் புகைப்படம் ஏந்தியவாறு கண்ணீர் மல்க நடத்திய ஆர்ப்பாட்டம் சனல் 4 ஊடகவியலாளர்களை வெகுவாக ஈர்த்து விட்டது. அவர்கள் பரபரப்பாக இயங்கி பல பேட்டிகளை தங்களது வீடியோ கமராக்களில் பதிவு செய்து கொண்டதுடன், பிரதமர் டேவிட் கமரூன் காணாமற் போனோரின் உறவுகளைச் சந்திக்காமல் சென்றதை அறிந்து காணாமற் போனோரின் உறவுகள், பிரித்தானிய பிரதமரிடம் கையளிக்கவெனக் கொண்டு வந்திருந்த பெட்டிஷன்கள் மற்றும் ஆவணங்களையும் சேகரித்துக் கொண்டதையும் காணக்கூடியதாக இருந்தது. அவர்கள் அதை உரியவரிடம் அதாவது, டேவிட் கெமரூனிடம் சேர்த்திருக்கக்கூடும்.
பின்னர் பிரித்தானிய பிரதமர் கடந்த 24 வருடங்களாக இடம்பெயர்ந்தவர்கள் வாழ்ந்து வரும் முகாமைப் பார்வையிட்டார். அங்கு வாழும் அகதிகளின் வீடுகளுக்கும் சென்று அவர்களது நிலையை அறிந்து கொண்டார். பின்னர் அங்குள்ள பத்திரிகை நிறுவனமொன்றுக்கும் விஜயம் செய்தார்.
டேவிட் கமரூன் இந்த விஜயத்தின் போது வட மாகாண ஆளுநரையோ அல்லது வட மாகாண கட்டளைத்தளபதியையோ அல்லது எந்தவொரு அரச அதிகாரிகளையோ சந்திக்கவில்லை என்பதை இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும்
கொழும்பு திரும்பிய பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் விசேடமாக அமைக்கப்பட்டிருந்த ஊடக நிலையத்தில் செய்தியாளர் மாநாடொன்றையும் நடத்தினார்.
இந்த செய்தியாளர் மாநாட்டில் கமரூன் விடுத்த செய்தி இலங்கையை எச்சரிப்பதாகவே அமைந்திருந்தது. கமரூன், இலங்கையில் தான் பார்த்த நல்ல விடயங்களையும் இந்த மாநாட்டில் தெரிவிக்கத் தவறவில்லை. உண்மைகளைக் கண்டறியும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் படி யுத்தத்தின் பின்னர் இலங்கை அரசாங்கம் பல காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்பதை அவர் ஏற்றுக்கொண்டார். இருந்தும் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நியாயமான விசாரணைகள் இடம்பெறவில்லை என்றும், எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் இது குறித்து முறையான விசாரணையை இலங்கை அரசு மேற்கொள்ளாவிட்டால் அடுத்து ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் சர்வதேச விசாரணையொன்றை கோருவதற்கு பிரிட்டன் பின் நிற்கப் போவதில்லை என்றும் ஆணித்தரமாகத் தெரிவித்தார்.
பிரித்தானிய பிரதமர் கமரூனின் செய்தியாளர் மாநாடு முடிவடைந்ததும் அரசாங்க அமைச்சர்கள் மூவர் அதே இடத்தில் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினர். அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, கெஹலிய ரம்புக்வெல்ல, அநுர பிரியதர்சன யாப்பா ஆகியோர் நடத்திய இந்த செய்தியாளர் மாநாடு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனுக்குப் பதிலடியாகவே இருந்தது. அரசாங்கம் சர்வதேச யுத்தக் குற்ற விசாரணைகளை நடத்த ஒரு போதும் இணங்கப்போவதில்லை. இலங்கை ஒரு சுயாதீனமான நாடு. இதில் யாரும் மூக்கை நுழைக்க அனுமதிக்க முடியாது. இலங்கை இந்த விசாரணைகளை சுயாதீனமாக நடத்தும் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த செய்தியாளர் மாநாட்டில் அறுதியிட்டுக் கூறினார். இதற்கு மறுதினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ "கண்ணாடி வீட்டில் இருப்பவர்கள் அடுத்தவர்கள் மீது கல்லெறியக்கூடாது" என்று பிரித்தானிய பிரதமரின் பெயரைக் குறிப்பிடாமல் பதிலளித்தார். மனித உரிமைகள் விடயத்தில் பிரிட்டன் நடந்து கொண்டதை அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டியதாகவே தெரிகிறது. ஜனாதிபதி, பிரித்தானிய பிரதமரை இவ்வாறு மறைமுகமாக விமர்சித்த போதும் இறுதிக்கட்ட யுத்தத்தில் மனித உரிமைகளை மீறும் வகையில் இராணுவத்தினர் செயற்படவில்லை என்பதை அறுதியிட்டுக் கூறவில்லை. இதற்குப் பதிலாக யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவையில்லை. சுயாதீன விசாரணைகளை நடத்தும் வல்லமை இலங்கைக்கு இருக்கின்றது என்றே அவர் தெரிவித்தார்.
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன், பிரிட்டனின் செனல் 4 ஊடகங்கள் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை இலங்கைக்கு எதிராகத் திசை திருப்பியதென்றே கூற வேண்டும். இதேவேளை பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டுக்கு முன்னரே சில கசப்பான சம்பவங்களும் இடம்பெற்றதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் மாநாட்டுக்கு சமாந்தரமாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்துடன் இணைந்து சட்டத்துடன் தொடர்புடைய தொழில்சார் விற்பன்னர்களுக்காக விஷேட செயலமர்வொன்றை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் சட்டத்தரணிகள் மற்றும் நீதியரசர்கள் தொடர்பான முக்கிய அதிகாரியான மலேஷியாவைச் சேர்ந்த பரம் குமாரசுவாமி மற்றும் இப்போது அந்தப் பதவியை வகிப்பவர் உட்பட பிரதிநிதிகள் பலர் இந்த செயலமர்வில் கலந்து கொள்ளவிருந்த போதும், அவர்களுக்கு இலங்கை வர விசா வழங்கப்படாததால் இந்த செயலமர்வு இரத்துச் செய்யப்பட்டது. இதன் மூலம் எமது சட்டத்துறையும் நீதிமன்றங்களும் சர்வதேச மட்டத்தில் நம்பிக்கைக்கும் கெளரவத்துக்கும் உரிய நிலையில் இல்லை என்பதே புலனாவதாக சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விடயம் செயலமர்வில் பேச்சு வார்த்தைக்குட்படுவதை அரசாங்கம் விரும்பவில்லை என்பதே இதன் மூலம் தெளிவாவதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது. இந்த நிலையில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டுக்கு சமாந்தரமாக நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் வர்த்தகர்கள் கலந்து கொண்ட அமர்வில் அவுஸ்திரேலிய கஸினோ மன்னன் ஜேம்ஸ் பாக்கர் முக்கிய உரை நிகழத்தியதும் உள்நாட்டில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இலங்கை அரசாங்கம் கஸினோ சூதாட்டம் மூலம் நாட்டில் பொருளாதார அபிவிருத்தியை மேற்கொள்ளப் போகின்றதா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. மொத்தத்தில் இலங்கை பெரும் செலவில் நடத்திய ‘‘சோகம்’’ என்ற இந்த பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டால் இலங்கைக்கு ஏதாவது நன்மை ஏற்படுமா? இலங்கையின் கீர்த்தியும் கெளரவமும் சர்வதேச மட்டத்தில் உயருமா? அல்லது இந்த மாநாடு தனது நோக்கத்திலிருந்து விலகி மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை சர்வதேச விசாரணைக்கு இட்டுச் செல்லுமா? என்பன போன்ற கேள்விகளை எழுப்பியுள்ளது. இதேவேளை இந்தப் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டுக்குச் செய்திகளை சனல் 4 ஊடகவியலாளர்கள் டுவிட்டர் மூலமும் மற்றும் இன்னோரன்ன இலத்திரனியல் ஊடகங்கள் மூலமும் உடனுக்குடன் சர்வதேசத்துக்கு அறிவித்துக் கொண்டிருந்தனர். 2013 நவம்பர் 16ஆம் திகதி ‘‘த கார்டியன்’’ இணைய தளத்தில் கெலம் மெக்ரே A Film of alleged war crimes.How I became Sri Lanka's Most Hated Man என்ற கட்டுரையில் தாமும் சனல் - 4 ஊடகவியலாளர்களும் முகம் கொடுத்த சம்பவங்களை விவரமாக எழுதியுள்ளார். இது இலங்கையை மிக மோசமாகப் பாதிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. சனல் - 4 குழுவினர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கியதும் விமான நிலையத்தில் அவசர அவசரமாக எழுதப்பட்ட சுலோக அட்டைகளைத் தாங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் குறித்தும் தாம் தங்கியிருந்த நட்த்திர ஹோட்டல் முன்னாலும் விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டம் செய்த அதே நபர்கள் காணப்பட்டதாகவும் கெலம் மெக்ரே அக்கட்டுரையில் தெரிவித்திருப்பதுடன், நாம் வடக்கு நோக்கி ரயிலில் செல்லும் போதும் இந்த நபர்களே ரயிலை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தகவல் ஊடகத்துறை அமைச்சரின் கூற்றுப்படி இலங்கையில் ஜனநாயகம் நிலவுவதையும் சனல் 4 வெளியிட்ட யுத்தக் குற்ற வீடியோக்கள் பொய்யானவை என்பதை சனல் - 4 ஊடகவியலாளர்கள் நேரில் கண்டறிவதற்காக அவர்களுக்கு இலங்கை வர வழங்கப்பட்ட விசா அனுமதியால் இலங்கை அரசின் நோக்கம் நிறைவேறியுள்ளதா?
« PREV
NEXT »

No comments