பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டத்தில் ஈடுபடும் போராட்டக்காரர்கள் காட்டாற்று வெள்ளமாக முன்னேறி வருவதால், தடைகளை ஏற்படுத்த முனையும் பொலிசாரும், இராணுவத்தினரும் திண்டாட்டத்தில் இருப்பதாக தெரியவருகின்றது.
போராட்டக்காரர்களை வழிமறிக்க இராணுவத்தினரும், பொலிசாரும் பல தயார்படுத்தல்களை மேற்கொண்ட சமயங்களில், அந்த பாதைகளை தவிர்த்து வேறு மார்க்கங்களையும் பயன்படுத்தி போராட்டக்காரர்கள் முன்னேறி வருகின்றனர்.
இன்று காலை 9.40 அளவில் பொத்துவில் நகரில் போராட்டம் ஆரம்பித்தது. போராட்டக்காரர்களிடமிருந்த பதாதைகளை பறிக்க பொலிசார் முயன்றபோது, அவர்களை தள்ளிவிட்டு பேரணி முன்னகர்ந்தது. பொலிசார் வீதித்தடைகளை அமைத்த போது, அதையும் உடைத்தெறிந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னேறியுள்ளனர்.
சுமார் ஒன்றரை கிலோமீற்றர் நகர்ந்த போது குண்டுமடுவில், பொலிசார் தடை செய்தனர். அங்கிருந்து வாகன பேரணியாக போராட்டக்காரர்கள் முன்னேறினர்.
பின்னர், தாண்டியடி, திருக்கோவில், தம்பட்டை, ஆலையடி வேம்பு பகுதிகளில் வாகன பேரணியை பொலிசார் தடுத்தனர். சுகாதார விதிமுறைகளை கடைப்பிடித்தே தாம் முன்னேறுவதாக விளக்கமளித்து போராட்டம் தொடர்கிறது.
இடையில், கோமாரியில் சுமார் அரை கிலோமீற்றர் தூரம் நடைபவனியாக பேரணி சென்றது.
No comments
Post a Comment