பேரினவாதத்தின் தமிழ்முகம்
-இதயச்சந்திரன்
'முரளிதரன் மீதான விமர்சனங்கள், அவரின் எதிர்கால அரசியல் பாதையை பலமடையச் செய்யும்' என்கிற அரசியல் பார்வை முன் வைக்கப்படுகிறது.
அது பலமடையுமா? அல்லது பலவீனமடையுமா? என்பதை சிங்களமே தீர்மானிக்கப் போகிறது.
'ஒருவர் மீதோ அல்லது அவர்சார்ந்த கட்சியின் மீதோ விமர்சனங்களை முன் வைக்கும் போது, அவர்கள் அதனைச் தமக்குச் சாதகமாக மாற்றுவார்கள்' என்பது இயல்பானது.
தேர்தல் காலங்களில்,
'ரணிலைப் பகிரங்கமாக ஆதரித்தால், சிங்கள மக்கள் மத்தியில் மகிந்தருக்கு ஆதரவு அதிகரித்துவிடும்' என்று கூட்டமைப்பினர் கூறுவதை நாம் அவதானித்துள்ளோம்.
அது ஓட்டு அரசியலின் மறைமுகமான தந்திரம்.
இங்கு நாம் கவனிக்க வேண்டிய அரசியல் தந்திரோபாயக் களம் வேறு வகையானது .
முத்தையா முரளிதரன் என்கிற 'சர்வதேச கிரிக்கட் முகம்' பேசும் பேரினவாத சார்பு அரசியலால் வரும் தாக்கம் பெரியது.
இதன் மீது தமிழ்த்தேசிய அரசியல் தொடுக்கும் விமர்சனப் போர், சிங்களத்தின் மனதில் தற்காலிக இடம் பிடிக்கும் சந்தர்ப்பத்தை முரளிக்குக் கொடுக்கலாம்.
ஆனால் சிங்களப் பேரினவாதத்தின் முதல்வர் மகிந்த இராஜபக்ச, இதனை எவ்வாறு தனது சர்வதேச அரசியல் நகர்வுகளுக்குப் பயன்படுத்தப் போகிறார் என்பதை அவதானிக்க வேண்டும். அதுதான் தமிழ்த்தேசிய விடுதலை அரசியல் எதிர்நோக்கும் சவால்.
லக்ஸ்மன் கதிர்காமரை தனது சர்வதேசப் பரப்புரைக்காக, சந்திரிகா விஜயகுமார ரணதுங்க எவ்வாறு கையாண்டார் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.
முரளியைப் பொறுத்தவரை அர்ஜுனா ரணதுங்க போல தானும் ஒரு அரசியல் பிரமுகராக வலம் வரவேண்டுமென்கிற ஆசை இருக்கலாம்.
எவ்வாறு இந்திய-அமெரிக்க உறவில் இலங்கையை இணக்கமாகப் பொருத்திப் பார்ப்பதற்கு , அமெரிக்க நண்பர் மிலிந்த மொரகொடவின் பாத்திரம் முக்கியத்துவம் பெறுகிறதோ, அதேபோன்று வழுவழுத்த இந்திய-இலங்கை தடுமாற்ற உறவில் தானும் ஒரு தமிழ் மிலிந்தாவாக ஆகிவிட முடியாதாவென முரளி கற்பிதம் கொள்ளலாம்.
ஆகவே கிரிக்கட்டால் பெற்ற புகழ்வெளிச்சத்தை, சினிமா ஊடாக இந்தியாவெங்கும் பரவவிட்டு, தனக்கான கொழும்பு -இந்திய சிம்மாசனத்தை முரளி உருவாக்க எண்ணுகிறார் போலுள்ளது.
கடந்த தேர்தலில் மகிந்த சார்பில் நுவரெலியாவில் தனது சகோதரரை இறக்கினார்.
அது தோல்வியிலேயே முடிந்தது.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றார்.சிங்களக் கடும்போக்காளர் விமல் வீரவன்சவிற்கு வாக்களிக்குமாறு தமிழ்மக்களைக் கேட்டுக் கொண்டார்.
அவருடைய சகல அரசியல் நகர்வுகளும் சிறுதளவேனும் வெற்றி வாய்ப்பினை அளிக்கவில்லை.
'இவரல் எந்த நாடாளுமன்ற அரசியல் இலாபமும் தமக்கு இல்லை' என்பதனை மகிந்த சகோதரர்கள் தற்போது உணரத் தொடங்கிவிட்டார்கள்.
பொதுவாகவே, தமது கட்சிக்கு வாக்குச் சேகரிக்க முடியாதவர்களை, இந்த அதிகாரத்தரப்பானது எப்போதுமே கெளரவ நடிகர்களாகவே வைத்துக் கொள்ளும்.
இராஜபக்ச ஆட்சியாளர்களுக்கு இப்போது சீனாவிற்கெதிரான வல்லரசுநாடுகளை சமாளிக்க, அந்த நாடுகளால் கனிவாகப் பார்க்கப்படும் நல்லெண்ணத் தூதுவர்கள் (அம்பாசிடர்ஸ்) தேவை.
முன்னாள் பிரித்தானியாவின் பிரதமர் டேவிட் கமரூன் அவர்களின் யாழ். விஜயத்தின் போதே சிங்களத்தின் 'அம்பாசிடர் முரளிதரன்' களமிறங்குகிறார்.
பிரெஞ்சு அதிபர் சென்றிருந்தால் வேறொருவர் சென்றிருப்பார்.
ஆதலால் கிரிக்கட் இரசிகரான கமரூன் வரும்போது முரளியை முன்னிறுத்துகிறது சிங்களத்தின் இராஜ தந்திரம்.
முரளியின் ஆட்டக்களம் எதுவென்பதை சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்கள் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளார்கள்.
அவர்களே இவரின் இருப்பிடத்தைத் தீர்மானிப்பார்கள்.
கருணா போன்று, பொதுஜன பெரமுனவின் உப-உப- தலைவர்களில் ஒருவராகலாம்.
இல்லையேல் அம்சா போல, சென்னையிலுள்ள இலங்கைத் தூதுவராகலாம். எதுவும் நடக்கலாம்.
பெற்ற பேரையும் புகழையும் காசாக்குவதற்கு கார்பரேட் நிறுவனங்களின் விளம்பரம் உண்டு.
ஆனால் சேர்த்த பணத்தையும் புகழையும் பாதுகாக்க, பலருக்கு தலையைச் சுற்றி 'அரசியல் ஒளிவட்டம்' தேவைப்படுகிறது.
இவர் எப்படியும் இருந்துவிட்டுப் போகட்டும்.
அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் மக்களுக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டினை ஆதரிப்பது அவரின் சுயநலம் சார்ந்த உரிமை.
அதனை எதிர்ப்பது மக்கள்திரள் அரசியலின் தலையாய கடமை.
-
No comments
Post a Comment