Latest News

August 01, 2020

மாற்று என்றால் யார்? கஜேந்திரகுமாரா அல்லது விக்கினேஸ்வரன் ஐயாவா?
by Editor - 0

மாற்று என்றால் யார்? கஜேந்திரகுமாரா அல்லது விக்கினேஸ்வரன் ஐயாவா? 
கலாநிதி குருபரன் குமாரவடிவேல் -

முதலில் விக்கினேஸ்வரன் ஐயாவை பார்ப்போம். தனிப்பட்ட நீதியரசர் விக்கினேஸ்வரனின் கரங்கள் தூயமையானவை. 2013இல் கூட்டமைப்பில் இணைந்து முதலமைச்சரானவர் 18 மாதங்களிலேயே தமிழரசுக் கட்சியின் பிறழ்வுகளை விளங்கி தனித்து ஒரு நிலைப்பாட்டை எடுத்தவர். தனது மனசாட்சிக்கு ஏற்ப செயற்படுபவர் என்பதை ஏற்றுக்கொள்ளலாம். 

ஆனால் ஐயாவிடம் உள்ள மிகப் பெரிய குறைபாடே அவரின் அரசியல் தயக்கமும் அரசியல் கருத்தியல் தெளிவின்மையும். இரண்டு உதாரணங்களை பார்ப்போம்: 

முதலாவது: 

தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு முன்மொழிவுகளில் மிகப் பெரிய கருத்தியல் உள்ளடக்க தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முக்கியமானவர். அந்த நேரத்தில் நான் பேரவையின் உப குழுவில் சிவில் சமூக பிரதிநிதியாக சனாதிபதி சட்டத்தரணி திரு. விவேகானந்தன் புவிதரனுடன்- Vivekananthan Puvitharan சேர்ந்து பணியாற்றினேன். பேரவையின் வரைவை தயாரிப்பதில் குறிப்பிடத்தக்களவு பங்கு எங்களுக்கும் இருந்தது. அந்த வரைபின் இறுதி வடிவம் நீதியரசருக்கு சமர்ப்பிக்கப்பட்ட போது அதில் 'தமிழ் தேசம்' எனக் குறிப்பிடப்பட்ட இடங்களை எல்லாம் வெட்டி நீக்கி 'தமிழ் மக்கள்' என வெட்டி திருத்தினார். மேலே தான் செய்ததற்கு விளக்கமாக 'இந்த திருத்தங்கள் கூட்டமைப்பின் 'உணர்வுகளை' (feelings) ஐ மதித்து செய்யப்படுகின்றன' என விக்கினேஸ்வரன் ஐயா குறிப்பிட்டார்.  

கஜேந்திரகுமார் இதை கடுமையாக எதிர்த்தார். கஜேந்திரகுமார் தேசம் என்ற சொல் பாவனையின் முக்கியத்துவத்தை சட்டம் சார்ந்து, தேசத்தின் இறைமையில் இருந்தான எமது தீர்வு எடுத்தப்படவேண்டியதன் நடைமுறை முக்கியத்துவம் சார்ந்து, முன்வைத்து வருபவர். ஒரு நாட்டிற்குள் தீர்வையினும் அது தேசம் என்ற அங்கீகாரத்துடன் வராவிட்டால் அதனால் பிரோயோசனமில்லை என்பதனையும் குறிப்பாக தமிழரால் முன்வைக்கப்படும் தீர்வுத்திட்டங்களிலேயே நாம் இதனை சொல்லாமல் விடுவது ஒரு தொடந்தேர்ச்சியான அரசியல் நிலைப்பாட்டில் ஏற்பட்ட முறிவாக இருக்கும் என்பதனையும் கஜேந்திரகுமார் அறிவார். அந்த தெளிவோடு எவ்வளவு அழுத்தம் வந்தாலும் தோல்வியை கண்டாலும் தொடர்ந்து பிரயாணிப்பவர் அவர். அந்த வகையில் விக்கினேஸ்வரன் ஐயா தேசம் என்ற சொல்லை விடுத்து சுமந்திரன் சேர் பரிந்துரைக்கும் 'மக்கள்' என்ற சொல்லை முன்வைப்போம் என்று நிலைப்பாடு எடுத்த போது மிகக் கடுமையாக எதிர்த்து அந்த மாற்றத்துடன் பேரவையின் அரசியல் தீர்வு யோசனை முன்வைக்கப்பட அனுமதிக்க மாட்டேன் என்ற நிலைப்பாட்டை எடுத்தார். இந்த மாற்றங்களை பிரேரித்த விக்கினேஸ்வரன் ஐயா ஆவணத்திற்கு நான் மின்னஞ்சலில் உடனடியாக பதிலளித்தேன்.  1951 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியின் முதலாவது பேராளர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முதலாவது தீர்மானத்திலேயே 'தேசம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி இதனை தற்போதைய தமிழரசுக் கட்சியினர் மறந்திருக்கலாம் ஆனால் தமிழரை தேசம் என வரையறுத்த முதல் கட்சி தமிழரசுக் கட்சி தான் என்பதை சுட்டிக்காட்டியிருந்தேன். அதன் பின்னர் விக்கினேஸ்வரனை ஐயா அதை ஏற்றுக்கொண்டார். இந்த சம்பவம் விக்கினேஸ்வரன் ஐயாவின் அரசியல் தயக்கத்திற்கும் தெளிவின்மைக்கும் சான்று. 

இரண்டாவது: 

2019 சனாதிபதித் தேர்தலில் தமிழ் கட்சிகள் மத்தியில் பொது நிலைப்பாடு வேண்டும் என்ற நோக்கத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் கூட்டங்களை நடத்தினர். நான் இதில் ஆரம்பத்தில் கலந்து கொள்ளவில்லை. பின்னர் இடைக்கால அறிக்கையை வெளிப்படையாக நிராகரிக்க வேண்டும் என்ற கஜேந்திரகுமார் பொன்னம்மபலத்தின் வலியுறுத்தலை கூட்டமைப்பு ஏற்காதிருக்க பேச்சுவார்த்தை முறிவடையும் என்று மாணவர்கள் அஞ்ச என்னையும் அழைத்தார்கள். அறிக்கையின் கீழே முன்னணியின் நிலைப்பாட்டை தனித்து சொல்லி அவர்களின் அந்த நிராகரிப்பை பதிவு செய்தல், ஒரு அடிக்குறிப்பாக முன்னணியின் நிலைப்பாட்டை சேர்த்தல் என பல தெரிவுகள் முன்வைக்கப்பட்டன. மாவை, சுமந்திரன் சேர், ஸ்ரீகாந்தா சேர், சுரேஷ் என்று எல்லோரும் அதை எதிர்த்தார்கள். முன்னணி மட்டும் நிராகரிக்கின்றது என்று அறிக்கை வெளிவந்தால் தாம் இடைக்கால அறிக்கையை ஏற்றுக்கொள்வது என்று அர்த்தமாகி விடுமே, அதனால் அப்படி சேர்க்கக் கூடாது என்றும் இன்று விக்கினேஸ்வரன் ஐயாவோடு கூட்டணியில் இருக்கும் சில தலைவர்கள் கருத்து  தெரிவித்தனர்.விக்கினேஸ்வரன் ஐயா கொஞ்சம் பிந்தி வந்தார். அவருக்கு நடந்த விவாதத்தின் சுருக்கத்தை சுமந்திரன் சேர் வழங்கினார். நிராகரிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை தானும் ஏற்பதாக விக்கினேஸ்வரன் ஐயாவும் சொன்னது எனக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது. குறைந்தது முன்னணி தமது நிலைப்பாட்டை தனித்து சொல்ல அறிக்கையில் இடம் வழங்கலாம் என்பதைக் கூட விக்கினேஸ்வரன் ஐயா பரிசீலிக்கவில்லை. இடைக்கால அறிக்கையை பற்றி அந்த அறிக்கையில் பேச வேண்டுமா என்பதை கூட நியாயமான நிலைப்பாடாக கருதலாம். ஆனால் அதை நிராகரிக்கக் கூடாது என்ற நிலைப்பாடு ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது. அன்றுடன் யார் மாற்று என்பது தொடர்பில் எனக்கு தெளிவாக விளங்கியது. 

இதை சொல்வதால் எனக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு கருத்து முரண்பாடுகள் இல்லை என்று சொல்வதற்கு இல்லை. முன்னணி சனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரியது தவறு எனக் கருதுகிறேன். 2013இல் வடக்கு மாகாண சபை தேர்தலை புறக்கணிக்க எடுத்த முடிவு உத்தி சார்ந்து தவறு என நான் கருதுகிறேன். முன்னணியின் சில உறுப்பினர்களின் அதி தீவிர தேசியவாதம் வன்மமானது. தேர்தல் அரசியலில் அதி கூடிய விட்டுக்கொடுப்பின்மை, இறுக்கத்தை காட்டுவதாகவும் கருதியது உண்டு. எனினும் கூட்டமைப்பின் தேசிய நீக்க அரசியலுக்கு சவால் கொடுக்க கூடிய தெளிவு உள்ள ஆளுமைகள் உள்ள ஒரே கட்சி என்னை பொறுத்த வரையில் முன்னணி தான்.

- கலாநிதி குருபரன் குமாரவடிவேல் -
« PREV
NEXT »

No comments