Latest News

June 05, 2020

இராணுவ மயமாக்கலினால் சுயாதீன தேர்தலுக்கு ஆபத்து ஏற்படலாம்: லால் விஜேநாயக்க எச்சரிக்கை
by Editor - 0

நாட்டில் இராணுவமயமாக்கல் இடம்பெற்று வருகின்ற நிலையில், நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அதனூடாக மக்கள் அச்சுறுத்தப்படலாம் என்கிற அச்சநிலை ஏற்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக சட்டநிபுணரும், ஜே.வி.பியின் தேசிய மக்கள் சக்தியின் கீழ் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுபவருமான சட்டத்தரணி லால் விஜேநாயக்க சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

கண்டியில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் அங்கு கருத்துத் தெரிவிக்கையில்,

பொதுத் தேர்தலின் பின்னர் இலங்கை மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சிறந்த அரசியலமைப்பு ஒன்றை அரசாங்கம் உருவாக்க வேண்டும்.

இலங்கை சுங்கப் பணிப்பாளர், சுகாதார அமைச்சின் செயலாளர், பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

ஜனாதிபதியின் இந்த செயற்பாட்டினை ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு என எதிரணியினர் கடுமையாக விமர்சித்திருந்ததோடு இராணுவ மயமாக்கலுக்கான முதற்கட்ட நடவடிக்கை.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இராணுவமயமாக்கலின் ஊடாக மக்களின் வாக்குகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படலாம்.

எமது நாட்டில் சுயாதீன, நீதியான தேர்தல்களே அதிகமாக இடம்பெற்றிருக்கின்றன. பொதுமக்கள் கருத்துக் கணிப்பு ஒன்றும் மிக மோசமாக நடத்தப்பட்ட சந்தர்ப்பமும் உள்ளது. அவ்வாறு இந்த தேர்தலை நடத்த முனைந்தால் நாடு மீள ஆபத்தையே சந்திக்கும். தற்போது சுயாதீன, நீதியான தேர்தலை நடத்தமுடியும்.

1931 ஆம் ஆண்டிலிருந்தே எமது மக்கள் தேர்தலுக்குப் பழக்கப்பட்டவர்கள். தேர்தலின் ஊடாக இலங்கையைப் போல அரசாங்கங்களை மாற்றியமைத்த வேறு நாடுகள் இல்லை.

அரசியல் அதிகாரிகள் இந்த தேர்தலில் தலையீடு செய்து மாற்ற முனைவதை தடுத்தால்தான் சுயாதீன தேர்தலை எதிர்பார்க்க முடியும். அதிலும் ஒரு சந்தேகம் எழுந்துள்ளது.

தற்சமயம் இராணுவ மயப்படுத்தல் இடம்பெற்று வருவதைப் பார்க்கின்றபோது மக்கள் மத்தியில் இப்படியான சந்தேகமும் எழுந்துள்ளது. அச்சுறுத்தி, பயத்தை ஏற்படுத்தி வாக்குகளை சூறையாடும் முயற்சி இடம்பெறலாம் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கின்றது.

இதேவேளை நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றி மக்களின் கருத்துக்கோரும் குழுவின் தலைவராக இருந்த சட்டநிபுணர் லால்விஜேநாயக்க, நடைபெறும் பொதுத் தேர்தலின் பின்னர் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

புதிய அரசியலமைப்பை ஏற்படுத்துவதே பொதுத் தேர்தலின் பின்னரான அரசாங்கத்தின் பிரதான இலக்காக அமைய வேண்டும். தற்காலத்தில் நாங்கள் பெற்றுக்கொண்ட அனுபவங்களைக் கொண்டு புதிய அரசியலமைப்பொன்று நமக்கு இல்லாமையே பிரச்சினைகளுக்கான காரணம் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

72ஆவது சுதந்திர ஆண்டை சந்திக்கவுள்ளோம். நேபாளம், கென்யா, இந்தியா போன்ற நாடுகளும் தங்களுக்கு ஏற்ற வகையிலான அரசியலமைப்பை உருவாக்கிக்கொண்டன. இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் அடுத்தபடியான அவர்களுக்கு அவசியமாகின்ற அரசியல் யாப்பைத் தயாரித்துக் கொண்டனர். அந்நாட்டுத் தலைவர்கள் ஆட்சிக்குவந்தவுடன் இதற்கே முன்னுரிமை கொடுத்தார்கள்.

ஆனால் நாங்கள் இன்னமும் பழைமையான அரசியலமைப்பையே பயன்பாட்டில் வைத்திருக்கின்றோம். இதுவே எமது இனப்பிரச்சினை மற்றும் பிரிவினைவாதத்திற்கான அடிப்படையாக அமைந்துள்ளது. தற்போதுள்ள அரசியலமைப்பானது சிறுபான்மையினர் ஏற்றுக்கொண்ட யாப்பு அல்ல. சிறுபான்மையின மக்கள் சோல்பரி யாப்பினை பெயரளவிலும் ஏற்றுக்கொண்டிருந்தனர்.

ஆனால் சிறுபான்மையின மக்களை முற்றாக ஒதுக்கப்பட்டு செய்யப்பட்ட அரசியலமைப்பபே தற்போது உள்ளது. இந்த அரசியலமைப்பு உருவான காலத்திலிருந்து அதனை மாற்றுவதற்கு பல தடவைகள் முயற்சித்த போதிலும் அது தோல்வியிலேயே முடிந்துள்ளது.

ஆகவே மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் இலங்கை அடையாளத்தை உணர்த்தும் அரசியலமைப்பை பொதுத் தேர்தலின் பின்னர் அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

« PREV
NEXT »

No comments