Latest News

April 22, 2020

கர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்! china india
by Editor - 0

கர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்!
அன்று 2009 இல் தமிழினப் படுகொலைக்கு பாரிய தூண்களாக நின்ற சீனா, இந்தியா அமெரிக்கா இன்னும் சில ஐரோப்பிய நாடுகள்... இன்று கர்மவினைப்பயனை அனுபவித்து வருகின்றன..!

இலங்கை அரசிற்கு, இன்று கொழும்பில் தாமரைக் கோபுரத்திற்கு அத்திவாரம் எப்படிப் பலமாக சீனாவினால் போடப்பட்டதோ அதைவிட மிகப் பலமாக இலங்கை இராணுவத்திற்கும், அதன் அரசிற்கும் இந்தச் சீனா பக்கபலமாக நின்று எமது மக்களை மூச்சுத்திணற வைத்துக் கொல்வதற்கான பல மில்லியன் பெறுமதியான நச்சு வாயுக்களையும், இவ் வாயுக்கள் அடைக்கப்பட்ட ரொக்கெட் குண்டுகளையும் இலங்கை இராணுவத்திற்குக் கொடுத்து அதனை வன்னியில் உள்ள தமிழ் மக்கள் மீது பிரயோகித்ததனால் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் மூச்சடக்கியும், மூச்சுத் திணறியும் உயிரை மாய்த்தார்கள்!
அதனை இன்று சீனா தன் கர்மவினைப் பயனாக அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

இதே காலகட்டத்தில்தான் இந்தியாவும் தனது படைகளையும், தனது உயரிய தொழில்நுட்பங்களையும் இலங்கை அரசிற்கு கொடுத்ததன் மூலமும், அதன் இராணுவத்தை நேரடியாக சண்டைகளில் ஈடுபடுத்தியும் எம் மக்களை பாரபட்சமின்றி கொன்று குவித்தார்கள்! எம் தொப்புள்க்கொடி உறவான இந்தியாவே எம்மை அழிக்க முன்னின்று செயற்படும் என கனவில்கூட ஒருபோதும் எம்மக்கள் நினைத்ததே இல்லை!
காரணம், கடந்த 2000 ஆண்டில் விடுதலைப் புலிகள், ஆனையிறவு பெருந்தளத்தைக் கைப்பற்றி வெற்றிவாகை சூடி, பெரும்பலத்தோடு யாழ் நகரை கைப்பற்ற நகர்ந்தபோது யாழ்மாவட்டத்தில் உள்ள நாற்பதினாயிரம் (40.000) சிங்களச் சிப்பாய்களைக் காப்பாற்றுமாறு சந்திரிகா அரசாங்கமானது, அப்போதைய இந்தியப் பிரதமர் வாஜ்பாய் அரசிடம் கெஞ்சியது! அப்போதைய இந்தியப் பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்கவே விடுதலைப் புலிகள் ஒருதலைபட்சமாக போர்நிறுத்தத்தை அறிவித்து சிங்களச் சிப்பாய்களுக்கு மறுபிறவி கொடுத்தார்கள்! (இது வரலாற்று உண்மையாகும்) இவ்வாறான இந்தியாவைத்தான் எம் மக்கள் முற்றுமுழுதாகவே நம்பினார்கள்.
மேற்குறிப்பிட்ட இந்தியாவைப்பற்றிய தமிழீழம் நோக்கிய வரலாற்றுப் பார்வைகள் ஒருபுறமிருக்க, நான் மறுபடியும் எனது பதிவிற்கே வருகிறேன்.

இதே இந்தியாவினால்தான்....

பசியாலும், பட்டினியாலும் அதேவேளை மருந்துகள் இன்றியும் எம்மக்கள்  அநியாயமாகக் கொன்று பழி தீர்க்கப்பட்டார்கள்! இவற்றையும்விட அமெரிக்காவுடன் இணைந்து கூகுள் வரைபட செயலி (Google Map) மூலம் எம் மக்கள் எத்திசை நோக்கி நகருகிறார்கள் என்பதையும்,  விடுதலைப் புலிகளின் நடமாட்டங்களையும்... எம் இனத்தை அழித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இடைவிடாது இரவு பகலாக தரவுகளை வழங்கி எம் மக்கள் பெருந்தொகையாக கொல்லப்படுவதற்கு காரணமாகியது.
ஆனால், இன்று கர்மவினை அல்லது "வினை விதைத்தவன் வினை அறுப்பான்" என்ற எம் முன்னோரின் வாசகம் நினைவிற்கு வரும் அதேவேளை, இந்தியாவின் தலைநகரில் பல்லாயிரக் கணக்கானோர் இறந்தாலும் அது அவர்களது வினைப் பயனே! இதில் நாம் கவலை கொள்வதற்கு எதுவுமே இல்லை!
ஏனெனில், எமது அயல்நாடு என்று எம் மக்கள் இறுதி யுத்தத்தின்போதும் கடைசி வரை நம்பியே இருந்தனர். 2009 இறுதி யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது....

"நம்மட இந்தியா, நம்மளக் கைவிடாது!" என எம் மக்கள் பேசிக்கொண்டது அப்போது என் காதுகளில் வலம் வந்தது. இப்போது கூட இக்கட்டான இந்த உலக சூழலில், என் மனதில் பதிவாகிய அவ்வார்த்தைகள் பிரதிபலிக்கின்றது!

ஆனால், இந்தியா எமக்கு என்ன செய்தது? வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருந்ததா? இல்லை! மாறாக எம் தமிழின அழிப்பிற்கு நூறு வீதம் துணை போனது!
2009ல் அமெரிக்காவானது, தனது புதிய அரசியல் தளத்தை பயன்படுத்தி எமக்கு நம்பிக்கை ஊட்டுவதை போன்ற ஒரு தோற்றப்பாட்டை உருவாக்கி 2009 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பிற்கு மிக முக்கிய தொழில்நுட்ப வளங்களை இலங்கை இராணுவத்திற்கு இடைவிடாது வழங்கிக் கொண்டே இருந்தது. 

அமெரிக்கா, தனது செயற்கைக்கோள்களை வன்னி நிலப்பரப்பின்மேல் நிலையாக நிறுத்தி வேவு பார்த்தது மட்டுமல்லாமல். ஆளில்லாத விமானங்கள் மூலம் வேவு பார்த்த தரவுகளை உடனுக்குடன் இலங்கை இராணுவத்தினருக்கு வழங்கி பேருதவி புரிந்து வந்தது. 

கூகுள் வரைபடச் செயலியை பூராணமாகப் பயன்படுத்தி விடுதலைப் புலிகளின் படை நகர்வுகளைக் கண்காணிப்பதாகக் கூறி, மக்கள் எங்கெல்லாம் செறிந்து இடம்பெயர்கிறார்கள் என்பதை இனங்கண்டு இலங்கை இராணுத்திற்கு தரவுகள் கொடுக்க, அவர்கள் அந்த இடங்களை நோக்கி நச்சு வாயுக்கள் தாங்கி வரும் குண்டுகளையும்,  பல்குழல் எறிகணைகளையும் மற்றும் சாதாரண எறிகணைகளையும் கொண்டு பரவலாகத் தாக்கி தப்பிக்கவே முடியாமல் மூச்சுத் திணற வைத்தே கொன்று குவித்தனர். 

"இதில் என்ன இலாபம் அமெரிக்காவிற்கு இருந்ததோ தெரியவில்லை?! அதனால்தான் என்னவோ இன்று மற்றைய நாடுகளையும் விட அமெரிக்காவில் பல இலட்சம் மக்கள் மூச்சுத்திணறி இறந்தவண்ணம் உள்ளனரோ?" என்று எம்மைச் சிந்திக்க வைக்கின்றது!

எம் முன்னோர்களின் பழமொழியான "தன்வினை தன்னைச் சுடும்" என்பது இவ்விடத்தில் சாலப் பொருத்தமானதாக இருக்கும் என நான் கருதுகிறேன். 

ஏனெனில், எமது மக்கள் 2009இல் முள்ளிவாய்க்கால் பகுதியில் ஒருவேளை கஞ்சிக்காக நீண்டவரிசையில் நின்றபோது இதே அமெரிக்காவின் செயற்கைக்கோள்களும் ஆளில்லா விமானங்களும் நீண்ட வரிசையில் கஞ்சிக்காக நின்ற எம் மக்களை படம் பிடித்தும், காணொளிகளாக பதிவு செய்தும், மிகத் துல்லியமாக அந்த இடத்தை சுட்டிக் காட்டி, கொடுத்த தரவுகளின் அடிப்படையில்தான் அங்கு வரிசையில் கடும்பசியோடும், ஒட்டிய வயிறோடும் காத்திருந்த மக்கள் மீது விமானம் மற்றும் எறிகணைகள் மூலம் சரமாரியான குண்டுத் தாக்குதல்களை நடாத்தி அந்த இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் மண்ணுக்குள் புதைத்தனர். 

இதைவிடவும் எம்மக்கள் பசியால் பலநூறுபேர் இறந்தார்கள்! அதே நிலை இன்று அமெரிக்காவில் பத்தாயிரத்திற்கும் (10,000) மேற்பட்ட வாகனங்கள் (Cars) நிவாரணப் பொதிகளை வாங்குவதற்காக வரிசையில் நிற்பதை, உலக மக்கள் பார்த்து ஆர்ச்சரியப்பட்டாலும், அதைப் பெரிய விடயமாக எம்மக்கள் பெரிதாக கருத்தில் எடுத்துக் கொள்ளமாட்டார்கள்! தற்போதைய சூழலில் யாருமே எதுவுமே செய்துவிடமுடியாது! 

ஏனெனில், அவர்கள் (அமெரிக்கா) விதைத்த வினை இன்று அறுவடை செய்யப்படுகிறது!

அமெரிக்காவின் பொருளாதாரம் தற்போது வீழ்ச்சி அடைந்து கொண்டே இருப்பதால்... இந்நிலை நாளை இன்னும் மிகமிக மோசமாக மாறலாம்.! அதையும் எம் மக்கள் கண்ணூடாகப் பார்த்து தங்கள் கவலைகளுடன் சேர்த்து  தேற்றிக்கொள்ளலாம்!

இன்னுமொன்றை நாம் கண்கூடாகக் காண்கின்றோம். கோவிட் 19 கிருமியால் உலகெங்கும் தாக்கத்திற்கு உள்ளானபோதும், தமிழினம் அழிக்கப்பட்ட வன்னி நிலப்பரப்பில் இன்றுவரை (22.04.2020) கோவிட்19 கிருமியால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கூட நீங்கள் காணமுடியாது! அதற்கும் ஒரு தீர்க்கதரிசனமான காரணம் உண்டு.  

1995 ஆம் ஆண்டு வன்னிக்கு இடம்பெயர்ந்த எம் மக்களை மலேரியா தொற்றிக் கொண்டது. அதற்கான மருந்தாக எமது மருத்துவர்களின் ஆலோசனைப்படி குளோறோக்குயின் மாத்திரைகள் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. 2001 ஆம் ஆண்டளவில் வன்னி நிலப்பரப்பில் தமிழீழ மருத்துவர்களின் இடைவிடாத தீவிர செயற்பாடுகளினால் மலேரியாவின் தாக்கம் பெருமளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது!

அதன்பின்னர் தமிழீழ மருத்துவர்களை அழைத்து கலந்தலோசித்த எமது தேசியத் தலைவர் அவர்கள் மேற்குறிப்பிட்ட மாத்திரைகளை குறிப்பிட்ட சில வியாதிகளுக்கு தடுப்பாக அமையும் என்பதால் வாரத்தில் ஒருமுறை இரண்டு மாத்திரைகள் வீதம் மக்கள் மற்றும் போராளிகள் என அனைவருக்கும் வழங்கப்பட்டதோடு போர்க்கைதிகளாக விடுதலைப் புலிகளிடம் சிறைபிடிக்கப்பட்ட இராணுவத்தினருக்கும் வழங்கப்பட்டது.

இந்தக் குளோறோக்குயின் மாத்திரைகளின் வீரியத்தன்மை இப்போதும் எம்மக்களில் இருப்பதனாலோ அல்லது இறைவனின் இரக்கத்தினாலோ வன்னி மக்கள் நோய்த் தொற்றுக்கு ஆளாகாமல்  மிகவும் ஆரோக்கியத்துடனேயே இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.

2009 இல் எம் மக்கள் படுகொலை செய்யப்பட்டபோது இவ்வுலக நாடுகள் அனைத்தும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். எம் மக்களின் பிணக்குவியல்களை உழவுஇயந்திரப் பெட்டிகளில் ஏற்றிச் சென்று கிடைத்த இடங்களில் மண்ணைக் கைகளால் தோண்டிப் புதைத்தோம், தென்னை மரங்களுக்கு பசளை போடுவதற்காக வெட்டிய குழிகளில் எம்மக்களின் உடல்களைப் போட்டு அந்த உடல்களின் மேல் தென்னம்மட்டைகளை வைத்து மண்ணைப் போட்டு மூடினோம்! இதைவிட மிகக் கேவலமான நிலையில்தான் முக்கியமாக சீனா, அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் தற்போது  அனுபவித்து வருகின்றன.

இறுதி யுத்தத்தின்போது நாம் உண்ண உணவின்றி, உறங்க இடமின்றி, மருத்துவமின்றி, மருந்துகளின்றி, மருத்துவர்களின்றி, மருத்துவமனைகளின்றி, பிணவறைகளின்றி மற்றும் பிணங்களைப் புதைக்க இடமின்றி... நாதியற்றுப்போய் நின்றோம்! இவற்றையெல்லாம் பார்த்து அனுபவித்த எம் மக்களுக்கு, இன்று இவ்வுலகில் நடப்பவை எவையும் புதியவை அல்ல!

இன்று சீனர்களும், அமெரிக்கர்களும் மேற்கூறிய யாவற்றையும் அனுபவிக்கும் அதேவேளை, பிணங்களை என்ன செய்வதென்று தெரியாது பாரிய கனரக வாகனங்களில்  ஏற்றித் தெருத்தெருவாக அலைந்து திணறி வருகின்றனர்.

புதைப்பதற்கு இடமின்றி ஒருசில நாடுகள் பெருந்தொகையான பிணங்களை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக கடலில் வீசியுள்ளதையும் நாம் அறிவோம்!

இவையனைத்தையும்... எம்மக்கள் கண்டு குதூகலம் கொண்டாலும் தவறென சொல்வதிற்கில்லை! மாறாக எம்மக்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல... பல தசாப்த காலங்களாக உலக நாடுகளால் ஏமாற்றப்பட்டு இலங்கை மற்றும் இந்திய அரசுகளால் வஞ்சிக்கப்பட்டு நீண்ட போரினாலும், பல பேரிடர்களாலும் பல இழப்புகளுக்கு முகம் கொடுத்து பெரும் வலிகளைச் சுமந்தவர்கள். 

அம்மக்களே அடுத்தவர்களின் வலிகளை மிகவும் நன்றாக உள்வாங்கி உணர்ந்தவர்கள்! 

அவ்வாறு உணர்ந்த எம் மக்கள்தான், இன்று இவ்வுலக மக்கள் நலம் பெறவும், அவர்களுக்குத் தேவையான தம்மால் முடிந்த உதவிகளையும் இன்றுவரையும் செய்தவண்ணமே இருக்கின்றார்கள்.  

அவர்கள்தான் என்னின தமிழர்கள்.

தாயக விடியலை நோக்கி...

- வல்வை அலன்
« PREV
NEXT »

No comments