Latest News

April 22, 2020

ஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்- 22.04.2020...
by Editor - 0

ஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்- 22.04.2020...

20 வது ஆண்டு வெற்றி நாள்

சிறிலங்கா அரசதரப்பால் மட்டுமன்றி உலக இராணுவ வல்லுநர்களாலும் “வீழ்த்தப்பட முடியாத தளம்” என்று கருதப்பட்டதே ஆனையிறவு இராணுவப் படைத்தளம். அதேநேரம் அத்தளம் விடுதலைப்புலிகளால் தாக்குதலுக்குள்ளாகுமென்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டே வந்தது.1999இன் நடுப்பகுதியில் அப்போதைய இராணுவப் பேச்சாளர் சரத் முனசிங்க, ‘புலிகள் ஆனையிறவைத் தாக்குவார்களென்பது எமக்குத் தெரியும். நாங்கள் சகல ஆயத்தங்களுடனுமே இருக்கிறோம்’ என்று ஓர் ஊடகத்துக்குச் சொன்னார். ஆனையிறவு மீதான புலிகளின் தாக்குதல் எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டாலும், அது வீழ்த்தப்பட முடியாத தளமாகவே கருதப்பட்டது. வெளிநாட்டு இராணுவ வல்லுநர்களும் அதைச் சொல்லியிருந்தனர்.

1760 ஆம் ஆண்டளவில் ஒல்லாந்தரால் Bascula என்று பெயரிடப்பட்டுக் கட்டப்பட்ட ஒரு காவற்கோட்டையே, அதன்பின் ஆள்மாறி ஆள்மாறி இறுதியாகச் சிங்கள இராணுவத்திடம் வந்துசேர்ந்த ஆனையிறவுப் படைத்தளமாகும். ‘ஆனையிறவு’ என்பதற்கான சரியான பெயர்க்காரணம் எனக்குத் தெரியவில்லை. யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு செல்லப்படும் யானைகள் இரவில் தங்கவைக்கப்படும் இடமாக அது இருந்ததே அப்பெயருக்குக் காரணம் என்று பரவலாகச் சொல்லப்படுவதுண்டு.

ஓயாத அலைகள் – 3 தாக்குதல் காணொளிகள்
ஆனையிறவுப் படைத்தளம் தமிழரின் வாழ்வில் நீங்காத வடு. யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய பகுதிகளுக்குச் செல்ல இருந்த பாதைகள் இரண்டு. பூநகரி வழியான பாதையொன்று, ஆனையிறவு வழியான பாதை மற்றொன்று. இவற்றில் பூநகரிப் பாதை, மன்னார் மாவட்டத்துக்கான போக்குவரத்துக்காகப் பயன்பட்டது. ஏனையவற்றுக்கு ஆனையிறவுதான் ஒரேபாதை. அதிலிருந்த இராணுவ முகாமில் சோதனைகள் நடக்கும். அங்கு நிற்பவர்களின் மனநிலையைப் பொறுத்துக் காரியங்கள் நடக்கும். அந்தக் கொழுத்தும் வெயிலில் செருப்பைத் தலையில் வைத்துக்கொண்டு நடக்கவிடுவார்கள். பலர் பிடிபட்டுக் காணாமலே போய்விட்டார்கள்.

அதுவொரு சித்திரவதைக் கூடமாகவும் இருந்ததாக மூத்தோர் பலர் சொல்லக் கேள்விப்பட்டுள்ளோம். அப்பாதையால் போய் வந்த தமிழர் பலருக்கு நடுக்கத்தைத் தரும் ஓரிடமாக அது இருந்தது.
ஈழப்போராட்டம் முனைப்புற்ற பின் இத்தளம் தன் கோர முகத்தை அவ்வப்போது காட்டியது. சில முன்னேற்ற நடவடிக்கைளின் மூலம் அத்தளம் விரிவடைந்து பருத்தது. இத்தளம் மீது புலிகள் பலமுறை தாக்கதல் தொடுத்துள்ளார்கள். ஆனால் எல்லாம் கைகூடிவந்தது 2000 இல்தான்.

1990 இல் இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியதும், யாழ் குடாநாட்டுக்கான வெளியுலகத் தொடர்புகள் முற்றாகத் துண்டிக்கப்பட்டன. இருந்த பாதைகளான ஆனையிறவும் பூநகரியும் மூடப்பட்டன. கொம்படி – ஊரியான் பாதை எனச் சொல்லப்பட்ட ஒரு பாதைவழியே, ஏறத்தாழ 5 மைல்கள் நீருக்குள்ளால் செல்லும் பாதைவழியே பயணம் செய்தனர் மக்கள்.
உப்புவெட்டையையே பெரும்பகுதியாகக் கொண்ட இத்தளம்மீது 1991 நடுப்பகுதியில் “ஆகாயக் கடல் வெளிச் சமர்” என்ற பெயரிட்டு பாரியதொரு தாக்குதலைத் தொடுத்தனர் புலிகள். பெயரிட்டு நடத்தப்பட்ட முதலாவது தாக்குதல் இது. ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்தது இத்தாக்குதல். சில முகாம்கள் புலிகளிடம் வீழ்ந்தபோதும் ஆனையிறவு முற்றாக விழவில்லை. இத்தாக்குதல் நடத்தப்பட்டபோது அதைக் காக்கும் முகமாக கட்டைக்காடு, வெற்றிலைக்கேணிப் பகுதிகளில் பாரிய தரையிறக்கத்தைச் செய்தது அரசபடை. அதன்மூலம் ஆனையிறவைத் தக்க வைத்துக்கொண்டது இராணுவம். அச்சமரில் புலிகள் கடுமையான இழப்பைச் சந்தித்தனர். ஏறத்தாழ 600 வரையானவர்கள் புலிகள் தரப்பில் சாவடைந்திருந்தனர்.
அத்தாக்குதலின்பின் வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு உட்பட பெரும்பகுதியைக்கொண்டு வீங்கயிருந்தது இப்படைத்தளம். மேலும் இயக்கச்சிவரை முன்னேறி தன்னை விரித்துக்கொண்டது இராணுவம். இதிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி “யாழ்தேவி” என்ற பெயரில் முன்னேறிய நடவடிக்கையை முறியடித்தனர் புலிகள். இப்போது கிழாலிக் கடல்வழிப்பாதை மட்டுமே யாழ்ப்பாண மக்களுக்கு இருந்தது. கிழாலிக்கடலிலும் பல படுகெலைகளைச் செய்தது சிங்களக் கடற்படை.
யாழ்குடாநாடு முற்றாக இராணுவ வசம் வந்தபின் போராட்டம் வன்னியை மையமாக வைத்து நடத்தப்பட்டது. இராணுவம் பரந்தன், கிளிநொச்சி என இடங்களைப் பிடித்து, ஆனையிறவை மையமாகக் கொண்ட பெரியதொரு இராணுவ வலையத்தை ஏற்படுத்திக்கொண்டது. இந்நிலையில் 09.01.1997 அன்று ஆனையிறவு மீது பெரியதொரு தாக்குதல் நடத்தப்பட்டது. 11 ஆட்லறிகள் அழிக்கப்பட்ட போதும் ஆனையிறவு முற்றாகக் கைப்பற்றப்படாத நிலையில் தாக்குதலணிகள் திரும்பின. பின் 27.09.1998 அன்று கிளிநொச்சி நகரை மீட்டெடுத்தனர். புலிகள்.

இந்நிலையில் ஆனையிறவை முற்றாகக் கைப்பற்றும் காலமும் வந்தது.

ஆனையிறவின் மீதான தாக்குதல் நேரடியாக நடத்தப்பட்டதன்று. அது பலபடிமுறையான நகர்வுகளின் தொகுப்பு. 11.12.99 அன்று ஆனையிறவைப் பிடிக்கத் தொடங்கப்பட்டதிலிருந்து 20.04.2000 இல் இறுதித்தாக்குதல் நடத்தப்படும்வரை, நான்கு மாதங்களுக்கும் மேலாக ஆனையிறவு மீது புலிகள் கை வைக்கவேயில்லை.

ஓயாத அலைகள் -3 இன் முதல் இரு கட்டங்களும், வன்னியின் தெற்கு, மேற்குப் பகுதிகளை மீட்டெடுத்தபின், ஆனையிறவு மீதான கவனம் குவிந்தது. அடுத்தது ஆனையிறவுதான் என்று எல்லோருமே நம்பிய நிலையில், 11.12.1999 அன்று கட்டைக்காட்டு – வெற்றிலைக்கேணி தளங்கள் மீது ஓயாத அலைகள் -3 இன் மூன்றாம் கட்டத் தாக்குதல் தொடங்கப்பட்டது. இப்பகுதி ஆனையிறவிலிருந்து கிழக்குப்பக்கமாக உள்ள கடற்கரைப்பகுதி. 91 இல் ஆனையிறவு மேல் தாக்குதல் நடத்தப்பட்டபோது இராணுவத்தினர் தரையிறக்கம் செய்யப்பட்ட பகுதிதான் இது. அத்தளங்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, தொடர்ந்தும் கடற்கரை வழியாக சில இடங்களைக் கைப்பற்றிக்கொண்டனர் புலிகள். அப்போதுகூட ஆனையிறவு வீழ்ந்துவிடுமென்று இராணுவம் நம்பவில்லை.

பின் கண்டிவீதியில் ஆனையிறவுக்குத் தெற்குப்புறமாக இருந்த பரந்தன் தளங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. இது முக்கியமானதொரு தாக்குதல். அதுவரை பெரும்பாலும் இரவுநேரத்தாக்குதல்களையே நடத்திவந்தனர் புலிகள். முதன்முதலாக பகலில் வலிந்த தாக்குதலொன்றைச் செய்தனர் புலிகள். அதுவும் எதிரிக்குத் தெரிவித்துவிட்டு நடத்தப்பட்ட தாக்குதல். ஒருநாள் மதியம் இரண்டு மணிக்கு பரந்தன் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அத்தாக்குதலுக்கு முன் புலிகளின் தளபதி கேணல் தீபன், இராணுவத்தின் பரந்தன் கட்டளைத் தளபதியோடு வானொலித் தொலைத்தொடர்பு வழி கதைத்தபோது, ‘முடிந்தால் தாக்குதல் நடத்தி பரந்தனைப் பிடியுங்கள் பார்ப்போம். எங்களை ஒட்டுசுட்டான் இராணுவம் என்று நினைக்க வேண்டாம்’ என்று தீபனுக்குச் சொன்னாராம். ஆனால் மதியம் தொடங்கப்பட்ட தாக்குதலில் பரந்தன் தளம் புலிகளிடம் வீழ்ந்தது. புலிகளின் கனரக ஆயுத வளத்தை எதிரிக்கு உணர்த்திய தாக்குதலென்று அதைச் சொல்லலாம்.

வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, பரந்தன் உள்ளிட்ட முக்கிய முன்னணித்தளங்கள் வீழ்ந்தபின்பும் கூட, ஆனையிறவின் பலத்தில் எல்லோருக்கும் நம்பிக்கையிருந்தது. பரந்தன் கைப்பற்றப்பட்டதால் ஆனையிறவுக்கான குடிநீர் வழங்கல் வழிகளிலொன்று அடைபட்டது. சில நாட்கள் எந்த முன்னேற்றமுமின்றி களமுனை இருந்தது.

பின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ‘மாமுனைத் தரையிறக்கம்’ புலிகளால் நடத்தப்பட்டது. தரையிறக்கப்பட்ட 1200 புலிவீரர்கள், ஆனையிறவிலிருந்து யாழ்ப்பாணப் பக்கமாக 15 கிலோமீட்டரில் இருக்கும் இத்தாவில் என்ற இடத்தில் கண்டிவீதியை மறித்து நிலையெடுத்தார்கள். அதேயிரவு பளை ஆடலறித் தளத்தினுள் புகுந்த கரும்புலிகள் அணி அங்கிருந்த 11 ஆட்லறிகளைத் தகர்ந்தது. அப்போதுதான் ஆனையிறவு மீதான ஆபத்து கொஞசம் புலப்பட்டது. ஆனாலும் தரையிறங்கிய புலியணிகள் எவ்வளவு காலம் தாக்குப்பிடிப்பார்களென்று சொல்ல முடியாத நிலை. மிகச்சிறிய இடம். சுற்றிவர ஏறத்தாள நாற்பதாயிரம் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள ஆனையிறவு, யாழ்ப்பாணப் படைநிலைகள்.

முழுப்பேரையும் துவம்சம் செய்வதென்று கங்கணங் கட்டிக்கொண்டு நிற்கும் இராணுவத்தினர். மிகப்பெருமெடுப்பில் அந்நிலைகள் மீது எதிரி தாக்குதல் நடத்தினான். ஆனாலும் அவனால் அவ்விடத்தைக் கைப்பற்ற முடியவில்லை.

மாமுனையில் தரையிறங்கிய அணிகள் இத்தாவில் நோக்கிச் செல்கின்றன.

இதற்கிடையில் கடல் வழி மட்டுமே இத்தாவிலுடன் தொடர்பிருந்த நிலையில், தாளையடி, செம்பியன்பற்று போன்ற முக்கிய கடற்கரைப் பகுதிகளைத் தாக்கிக் கைப்பற்றியதன் மூலம் நேரடித் தொடர்பை இத்தாவில் அணியினருடன் ஏற்படுத்திக்கொண்டனர் புலிகள். முப்பத்து நான்கு நாட்கள் வரை ஆனையிறவுக்கான முதன்மை வினியோகப் பாதையை மறித்து வைத்திருந்தனர், கேணல் பால்றாஜ் தலைமையிலான அவ்வணியினர்.

இதுவரை ஆனையிறவு மீது நேரடியான எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை. இவை ஒருபுறம் நடந்துகொண்டிருக்க ஆனையிறவு மீதான இறுதித்தாக்குலைத் தொடுத்தனர் புலிகள். இயக்கச்சிப் பகுதியைக் கைப்பற்றியதன் மூலம் ஆனையிறவை மிக நெருங்கியதுடன், ஆனையிறவுப் படையினருக்கான குடிநீர் விநியோகத்தையும் முற்றாகக் கட்டுப்படுத்தினர் புலிகள். இயக்கச்சி முகாம் வீழ்ந்த உடனேயே ஆனையிறவைக் கைவிட்டு ஓடத்தொடங்கியது சிங்களப்படை. அவர்களுக்கிருந்த ஒரே வழி, கிழாலிக்கடற்கரை வழியாகத் தப்புவதே. தப்பியோடிய இராணுவத்தினரும் தாக்குதலுக்கு இலக்கானார்கள். அப்பாதையில் வைத்து 152 mm ஆட்லறிப்பீரங்கியொன்று கைப்பற்றப்பட்டது. ஆனையிறவுப்படைத்தளம் முழுமையாகப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 22.04.2000 அன்று கேணல். பானு அவர்கள் ஆனையிறவில் புலிக்கொடியேற்றினார்.

மக்களுக்கு ஆனையிறவு வீழ்ந்தது கனவு போலவே இருந்தது.

ஆனையிறவு முகாம் மீதான இறுதித்தாக்குதல் வெகு சுலபமாக முடிவடைந்தது. புலிகள் தரப்பில் 34 போராளிகளே சாவடைந்தனர். ஆனால் அத்தளத்தைக் கைப்பற்ற, முற்றுகை நடத்திச் செய்த சண்டைதான் நீண்டதும், கடினமானதும்.

ஆனையிறவுக்காக ஈழப்போராட்டத்தில் ஏறத்தாழ 3000 புலிவீரர்கள் களமாடி வீரச்சாவடைந்ததாக புலிகளின் குறிப்பு கூறுகிறது. ஆனையிறவின் வீழ்ச்சியை சிங்களத் தரப்பால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் சடலங்கள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள மறுத்தது. இது வழமையான ஒன்றே.

வெளித்தோற்றத்துக்கு, ஈழப்போராட்டத்தில் ஆனையிறவு மீட்பே மிகப்பெரிய வெற்றியாகத் தோன்றுகிறது. அவ்வளவுக்கு அப்பெயர் மிகப்பிரசித்தம்.
தலைவர் பிரபாகரனின் பன்னாட்டுப் பத்திரிகையாளர் மாநாட்டில், வெற்றிகளில் எதை முதன்மைப்படுத்துகிறீர்கள் என்று கேட்கப்பட்டதற்கு, பெரும்பாலானோர் எதிர்பார்த்த பதில் ‘ஆனையிறவு’தான். ஆனால் வந்த பதில், ‘ஜெயசிக்குறு எதிர்ச்சமர்’.

ஆனையிறவுப் படைத்தளம் மீதான தாக்குதலிலும் அதன் துணைத்தாக்குதல்களிலும் மக்களின் பங்களிப்பு மிகப்பெரியது. குறிப்பாக இத்தாவில் பகுதியில் நடந்த சண்டையில் எல்லைப் படையினராக மக்கள் கலந்துகொண்டு முழுமையான பங்களிப்பைச் செய்தனர். நிறையப்பேர் களப்பலியாகினர்.

இந்த நேரத்தில் ஆனையிறவுப் படைத்தளம் வெற்றி சமரில் வீரகாவியமான மாவீரர்கள் நாட்டுப்பற்றாளர்கள் அனைவருக்கும் எமது வீரவணக்கம்.
« PREV
NEXT »

No comments