கொரோனாவால் உலகின் முதல் மருத்துவ வல்லரசாகும் கியூபா!
------------------------------------------------------------
நவீன ஆயுதங்களால் இந்த உலக நாடுகளை கட்டுப்படுத்தி விடமுடியும் என ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த வல்லரசு நாடுகளால்...
கண்ணுக்குத் தெரியாத ஒரு கிரிமியை கடந்த சில மாதங்களாகவே அழிக்க முடியாமல் திணறி வருகின்றன.
கடந்தகால பூமியின் சுவடுகளின் வரலாறுகளையும், எதிர்கால பூமியின் இயக்கங்களையும் அடித்துக்கூறும் விஞ்ஞானத்தால் தற்போது உருவாகிய (4 மாதங்கள்) ஒரு கிரிமியை அழித்தொழிக்க முடியவில்லை என்றால்... அதைவிட ஒரு மனித இனத்தின் தோல்வி எதுவுமில்லை!
நம் பூமியை விட்டு பிரபஞ்சத்தையே ஆராய்ந்து... ஆராய்ச்சி செய்ய முடிந்த விஞ்ஞானத்தால் இதுவரையும் எதுவுமே செய்ய முடியாமல் வரைமீறி போய்விட்டது.
பூமியிலிருந்து மனிதக் கண்ணுக்குத் தெரியாத கோள்களையும், பூமியில் ஏற்படும் காலநிலை மாற்றங்களையும் கருவிகளால் கண்டுபிடித்து, இயற்கையாக பூமியை நோக்கி வரும் பெரும் கற்களையும் அழித்து அல்லது பாதையை மாற்றி பூமியைக் காப்பாற்றிய விஞ்ஞானத்தாலும், கண்ணுக்குத் தெரியாத கொரோனா (Covid 19) கிரிமியைக் கண்டுபிடித்த மருத்துவத்தாலும் அதை எவ்வாறு அழிப்பது என திணறி வருகின்றது.
கண்ணுக்குத் தெரியாத அந்தக் கிரிமி... பல நாடுகளை மட்டுமல்ல... நவீன ஆயுதங்களாலும் அழிக்க முடியாத, நவீன தொழில்நுட்பங்களாலும் கண்காணிக்க முடியாத / புக முடியாத இடங்களுக்கெல்லாம் (தனக்குரிய இழப்புக்களே இல்லாமல்) சென்று நாளுக்கு நாள் பல ஆயிரம் மனித உயிர்களை ருசித்து வருகிறது.
பெரும் ஆயுதத் தாக்குதலில் இருந்து தம்மைக் தற்காத்து காப்பாற்றிக் கொண்ட பெரும் (நாட்டை ஆண்ட) தலைவர்களைக் கூட இந்தக் கொரோனா கிரிமியானது இலகுவாக தாக்கி அழித்து விடும் வல்லமை பெற்றது.
சில நாட்டின் இயற்கை வளங்களைச் சுரண்ட தேவையற்ற காரணங்களைக் கூறி அந்தநாட்டின் மீது வலியப் போர் தொடுத்து அழித்து அடிமையாக்கிக் கொண்ட உலக வல்லரச நாடுகளையெல்லாம் வாய் விட்டு கெஞ்சிக் கதற வைத்துள்ளது.
ஒரு கிரிமியை அழிக்க முடியாத நாடுகளையெல்லாம் எவ்வாறு "எல்லாம் வல்ல அரசு" எனக் கூறமுடியும்??
அமெரிக்காவால் வஞ்சிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட கியூபாவானது, தனது நாட்டில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடரால் தனது சொந்த நாட்டு மக்கள் கொத்துக் கொத்தாக செத்துக் கொண்டிருந்த தருணத்தில்,...
"உலக நாடுகளே! எங்கள் மக்களின் சாவைத் தடுத்து நிறுத்துங்கள்! மருந்துகள் தாருங்கள்; உங்கள் மருத்துவர்களை அனுப்பி உதவி செய்யுங்கள்", என பிடல் காஸ்ட்ரோ கெஞ்சினார்!
அப்போது... மருத்துவர்களும், மருந்துகளுமே அவர் கேட்டது. ஆனால், அமெரிக்கா விதித்திருந்த தடைக்கு அஞ்சி எந்த நாடுகளும் உதவ முன்வரவில்லை. அதன்பிறகே, கியூபா முழுவதும் மருத்துவக் கல்லூரிகளை அதிகப்படியாக நிறுவி, மருத்துவக் கல்வியையும், மருத்துவத்தையும் இலவசமாகக் கொடுக்கவேண்டும் என்ற யோசனை பிறந்தது பிடலுக்கு. இன்று உலகின் முன்மாதிரியான தரமான மருத்துவம் கியூபாவிடமே உண்டு.
”நமக்கதெற்கு ஆயுதங்கள்? நம்மிடம்தான் நல்ல மருத்துவர்கள் இருக்கிறார்களே” என்றார் பிடல் காஸ்ரோ. அவர் சொன்னது போலவே ஆயுதங்களால் கூட அழிக்க முடியாத ஒரு கிருமியை தம்மிடம் உள்ள மருத்துவத்தால் அழிக்க முடியும் என்று நிரூபித்து வருகின்றது கியூபா.
கொரோனா தொற்று இருப்பதாக அறிந்த தனது சொந்த நாட்டு கப்பலைக் கூட தனது நாட்டிற்குள் அனுமதிக்க அஞ்சிய பல நாடுகளை ஆண்ட பிரித்தானிய அரசானது திணறிக் கொண்டிருந்த வேளையிலும், உலக நாடுகளும் தங்கள் நாட்டிற்குள்ளும் அனுமதிக்க மறுத்த போதும் சிறிய நாடான கியூபாவே மனிதாபிமானத்தோடு தங்கள் நாட்டிற்குள் கப்பலை அனுமதித்ததோடு அவர்களுக்கான சிகிச்சை அளித்து குணப்படுத்தி வருகின்றது.
ஒரு காலத்தில் உலக நாடுகளால் ஒதுக்கப்பட்டு... தனிமைப்படுத்தப்பட்டு... கைவிடப்பட்ட சிறிய நாடான கியூபாவிடமே இன்று உலக வல்லரசுகளும், பல நாடுகளும் "தங்களுக்கு மருந்துகள் தாருங்கள், மருத்துவர்களை அனுப்பி வையுங்கள், தங்கள் மக்களைக் காப்பாற்றுங்கள்" என கையேந்தி நிற்கின்றன.
இன்றைய இக்கட்டான சூழலில் சீனா, இத்தாலி, ஸ்பெயின் இன்னும் பல நாடுகளுக்கு தங்கள் நாட்டு மருத்துவர்களை அனுப்பி கொரோனா கிரிமியில் இருந்து பல மனித உயிர்களை வெற்றிகரமாக காப்பாற்றி வருகின்றது கியூபா.
பல வல்லரசு நாடுகளால் எதுவுமே செய்யமுடியாது என கைமீறி போன நிலையில் இன்று கியூபாவே கொரோனா கிருமியிலிருந்து உலகைக் காப்பாற்றி வருகின்றது.
உலகை தம்மால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்த வல்லரசுகளுக்கு தற்சமயம் உலக மக்களை தங்களாலேயே காப்பாற்ற முடியும் என்று முகத்தில் அறைந்தால் போல் பல மனித உயிர்களைக் காப்பாற்றி வருகிறது கியூபா.
ஆயுத பலத்தால் உலகை அடக்கி, அச்சுறுத்தி பல மனித உயிர்களை அழித்த நாடுகள் எல்லாம் வல்லரசு என்றால்... அதே உலகில் பல மனித உயிர்களை காப்பாற்றி வரும் கியூபாவும் உலக மருத்துவத்தில் முதல் வல்லரசே!
கொரோனா... இவ்வுலகிற்கு பல தகுந்த படிப்பினைகளையும், சிறந்த அனுபவங்களையும் விட்டுத்தான் செல்லப்போகிறது.
- வல்வை அகலினியன்
No comments
Post a Comment