இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தியது தற்கொலை குண்டுதாரிகள் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.இந்த குண்டுவெடிப்பு தாக்குதல்கள் தொடர்பாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரூவான் விஜேவர்தன, ஊடக நிறுவனங்களின் பிரதம அதிகாரிகளை சந்தித்தார்.
"இந்த குண்டு வெடிப்புகளில் பெரும்பாலானவை தற்கொலை தாக்குதல்கள். இது தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்." என்றார்.
ராணுவம், காவல்துறை மற்றும் விமானப்படை ஆகியற்றின ஊடக பொறுப்பாளர்கள் இன்று மாலை ஊடகங்களை சந்தித்தனர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினர் கொழும்பில் மட்டும் குவிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு தேசிய வைத்திய சாலையில் 66 சடலங்கள் உள்ளன. அங்கு காயமடைந்த 260 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நீர் கொழும்பில் 104 சடலங்கள் உள்ளன. அங்கு 100 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
களுபோவில வைத்தியசாலையில் 2 சடலங்கள் உள்ளன, 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மட்டக்களப்பு வைத்தியசாலையில் 28 சடலங்கள் உள்ளன. அங்கு 51 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராகமவில் 7 சடலங்கள் உள்ளன. 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
"இந்த தாக்குதல் குறித்து முன்பே உளவு அமைப்புகளுக்கு தகவல்கள் வந்தன. ஆனால், சுதாரிப்பதற்குள் இந்த தாக்குதல்கள் நடந்தேறிவிட்டன. இது வெளிநாட்டிலிருந்து திட்டமிடப்பட்ட தாக்குதல்கள். இனவாத பிரச்சனை ஏற்பட வேண்டும் என்று எதிர்பார்த்தே இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன."
தாக்குதல்கள் தொடரலாம் என பொதுமக்களிடையே அச்சம் நிலவுகிறது. அதை நாம் புறந்தள்ள முடியாது. மேலும் தாக்குதல்கள் நடத்த வாய்ப்புள்ளது என்றார் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன.
இந்த தாக்குதல்களை தொடர்ந்து விசேஷ ஊடக பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
இலங்கை உள்நாட்டு யுத்தத்தின் போது இருந்த இந்த அமைப்பானது 2009ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது. இப்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
உளவுத் துறை இந்த தாக்குதல் குறித்து முன்பே வந்த தகவல்களில் ஒருவரின் பெயரை குறிப்பிடப்பட்டு இருந்தது. அவரின் பெயரும், ஷாங்ரி லா நட்சத்திர விடுதியில் இறந்தவரின் பெயரும் ஒன்றாக உள்ளது என்றும் அமைச்சர் ரூவான் விஜேவர்தன ஊடகவியலாளர் சந்திப்பில் கூறினார்.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் உள்ள யாழ் புனித மரியன்னை உள்ளிட்ட தேவாலயங்களில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
No comments
Post a Comment