தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறை செயலாளர் (தமிழீழ நிதிப் பொறுப்பாளர்) பிரிகேடியர் தமிழேந்தி (ரஞ்சித்தப்பா) அவர்களின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.பிரிகேடியர் தமிழேந்தி (சபாரத்தினம் செல்லத்துரை), 15.02.1950 யாழ். மாவட்டத்தில் பிறந்தார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக தன்னை முழுமையாக அர்ப்பணித்து பணியாற்றியவர்.
தனது தனித்துவமான திறமையால் நிதித்துறையை திறம்பட செயலாற்றி தேசியத் தலைவரினாலும், போராளிகளாலும் நன் மதிப்புபெற்றிருந்தவர்.10.03.2009 அன்று இலங்கை ஆக்கிரமிப்பு படையின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சவடைந்தார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்தில் இருந்து விடுதலைக்காக உழைத்து அனைவராலும் தமிழேந்தி அப்பா என அழைக்கப்படும் என அழைக்கப்படும் ஒருவர்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதிப்பிரிவு பொறுப்பாளராக செயற்பட்டு விடுதலைப்போராட்டத்திற்காக தாயகத்திலும் புலம்பெயர்நாடுகளிலும் நிதியினை பெற்றுக்கொள்ளும் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டார்.
தாயகத்தில் பால்வேறு துறைகளை உருவாக்கி ஒருநாட்டின் அராசங்கத்தின் வருமானங்கள் எவ்வழிகளில் பெற்றுக்கொள்ளலாமோ அவ்வாறு பலவழிகளில் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டார்.
இதற்காக பல பிரிவுகளை உருவாக்கி பண்ணைகளை உருவாக்கி, தொழில்சாலைகளை உருவாக்கி மற்றும் விவசாய செய்கையினை மேற்கொண்டு விடுதலைப்போராட்டத்திற்காக வருமானங்களை ஈட்டிக்கொண்டிருந்தார்.மற்றும் விடுதலைப்புலிகளின் கட்டமைப்பின் தளஅமைப்பு வேலைகள் உள்ளிட்ட கட்டுமான வேலைகள் அனைத்தினையும் ஒழுங்குபடுத்தி மேற்கொண்டார்.
சமாதான காலப்பகுதியில் தமிழ் மொழியில் பற்றுக்கொண்டு அனைத்து நிர்வாக கட்டமைப்புக்களிலும் தமிழ் பெயர்சூட்டி தமிழினை வளர்க்க பெரும்பாடுபட்டார்.
பல போராளிகளுக்கு தமிழ் மொழி ஊடாக பல திட்டங்களையும் தமிழின் வரலாற்றினையும் கற்றுக்கொள்ள பல முனைப்புக்களுடன் செயற்பாட்டார்.
தாயகத்தில் போர் உக்கிரம் பெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களினால் தமிழீழ விடுதலைப்புலிகளின் படைத்துறை செயலாளராக மாற்றம் பெற்று விடுதலைப்போராட்டத்திற்கான அடுத்தகட்ட பணியினை மேற்கொண்டார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக தன்னை முழுமையாக அர்ப்பணித்து தனது தனித்துவமான திறமையால் நிதித்துறையை திறம்பட செயலாற்றி தேசியத் தலைவர் அவர்களிலும் போராளிகளிலும் நன் மதிப்பு பெற்றிருந்தவர்.
-ஈழம் ரஞ்சன்-
###############
பிரிகேடியர் தமிழேந்தி(ரஞ்சித்தப்பா) புலிகளமைப்பின் பெரும் விழுது.!
ரஞ்சித்தண்ணையையும் தமிழர் போராட்டத்தையும் யாராலும் பிரித்து பாத்துவிட முடியாது. விடுதலைப்புலிகளின் அசுரவளர்ச்சியின் பின்னால், தலைவருக்கு பின்னால் இருந்து இயங்கியவர்களில் ரஞ்சித்தண்ணையின் பக்கங்கள் மிகவும் வலிமையானவை.
எங்கள் போராட்டத்தின் மிகவும் முக்கியமான ஒரு தூண் ரஞ்சித்தப்பா என்றால் அது மிகையாகாது. ரஞ்சித்தண்ணை என்று போராளிகளாலும், பின்னைய நாட்களில் பிரிகேடியர்.தமிழேந்தி என்று தமிழீழ மக்களால் அறியப்பட்டவருமாவார்.
கடைசிவரை நான் ரஞ்சித்தண்ணை என்றே கூப்பிட்டு பழகியதால் அப்படியே எனக்கும் அவருக்குமான உறவை உங்களோடு பகிரவிரும்புகின்றேன்.
1980களின் ஆரம்பத்தில் யாழ்பாணத்தில் அமைந்திருந்த இலங்கை வங்கியின் (bank manager) மேலாளராக கடமையாற்றி இருந்தார். அந்த நேரத்தில் புலிகளமைப்பு மக்கள் மத்தியில் பிரபல்யம் இல்லாது இருந்த நேரத்தில், அவர்களின் போராட்டத்தின் மேல் கரிசனை கொண்ட ஒருவராகவே ரஞ்சித்தண்ணையும் இருந்தார்.
ஆரம்ப காலத்தில் இயக்கம் பெரும் நிதி நெருக்கடியை சந்தித்திருந்த நேரம், அப்போது தான் ரஞ்சித்தண்ணையும் புலிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி இருந்தார். அவருடன் தொடர்பை ஏற்படுத்தியிருந்த லெப்.கேணல்.சந்தோசமண்ணை, அமைப்பின் நிதி நெருக்கடி பற்றி அவரிடம் கூறினார்.
அதற்கு உடனே அவர், குறிப்பிட்ட ஒரு திகதியை ஒன்றை கூறி, அந்த நேரத்தில் வங்கியில் நிறைய பணம் சேரும் என்றும், அன்று அதை எடுப்பதற்கான சரியான நேரத்தையும் கூறினார். அதன்படி அந்த நாள் இரவு வங்கியின் திறப்பை (சாவி) சந்தோசமண்ணையிடம் கொடுத்து, அவர்களுடன் அதே வாகனத்தில் இவரும் சென்றார்.இவர் வாகனத்தில் இருக்க வங்கியினுள் நுழைந்த போராளிகள், ஆயுதமுனையில் காவலாளியை மடக்கி சிங்களஅரசின் பல லட்சம் பணத்தை புலிகள் எடுத்துச்சென்றனர். பணத்தை எடுத்ததும் போராளிகளின் வாகனம் வேகம் பெற்றது. ரஞ்சித்தண்ணையின் வீடு வந்ததும் அவரை இறங்கி செல்லும் படி போராளிகள் கூறினர்.
அதற்கு அவர் “நான் எங்க போறது? இதோடை எனக்கு வேலையும் போய்டும், அதோடை ஆமி பிடிச்சு உள்ளுக்கையும் போட்டிடுவான். நான் போகேல்லை, நானும் இனி உங்களோடையே இருக்கிறன்” என்று போராட்டத்தில் இணைந்தவர் தான் ரஞ்சித்தண்ணை.
அப்படியே காலம் சுழன்று புலிகள் வளர்ச்சியை நோக்கி பயணிக்க ஆரம்பித்த போது, புலிகளின் நிதித்தேவையும் கூடியிருந்தது. அதற்கென்று ஒரு தனி நிர்வாக அலகொன்றை உருவாக்கிய தலைவர், இவரிடமே அந்த பொறுப்பையும் கொடுத்திருந்தார்.
அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு நிதிப்பொறுப்பாளரை நியமித்து தனது பணியை கச்சிதமாக நிறைவேற்றி வந்தார். இப்படியே காலம் சுழன்று 1987இந்திய இராணுவத்துடன் சண்டை ஆரம்பமானவுடன், புலிகள் மக்களோடு மக்களாக இருந்து எதிர்த்தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதில் யாழ்மாவட்ட நிதிப்பொறுப்பாளராக கப்டன்.வரதப்பா என்பவர் இருந்தார். இவர் 1988ம் ஆண்டு இந்திய இராணுவத்தினரின் சுற்றிவளைப்பொன்றில், தன்னிடம் இருந்த பணத்தை அழித்தபின் தன்னைத்தானே சுட்டு வீரச்சாவடைந்திருந்தார்.
இவர் வீரச்சாவடைந்து சில நாட்களில் ரஞ்சித்தண்ணை யாழ்பாணத்தில் வைத்து இந்திய இராணுவத்தால் உயிருடன் கைது செய்யப்பட்டிருந்தார். அந்த நேரத்தில் புலிகளின் மொத்த பணமும் ரஞ்சித்தண்ணையின் நேரடி மேற்பார்வையில், வரதப்பாண்ணையே மண்ணில் புதைத்திருந்தார். அதில் 16கோடி பணமும், 9kg தங்கமும் இருந்தது.
அந்த நேரத்தில் இந்தியாவிற்கு பணம் கொண்டு செல்வதில்லை. தங்கமாகவே கொண்டு செல்லப்படும். அதனால் பணம் எப்போதும் தங்கமாகவே மாற்றப்பட்டிருக்கும். அந்த நேரத்தில் இந்தத்தொகை மிகப்பெரியதே.
இவை புதைத்த இடம் இந்த இருவருக்கு மட்டுமே தெரியும். அதில் ஒருவர் வீரச்சாவு.! அடுத்தவர் உயிருடன் பிடிபட்டுவிட்டார். அடுத்த நாள் ரஞ்சித்தண்ணை தலைப்பு செய்தியானார். புலிகளின் நிதிப்பொறுப்பாளரின் கைது எதிரிக்கு உச்சாகத்தை கொடுத்தது.அடுத்த நாள் செய்தி, அவரது தகவலின் பேரில் 1kg தங்கமும் 2கோடி பணமும் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டதாக செய்தி வந்திருந்தது. இதை அறிந்த தலைவர் கடும் சினத்திற்கு உள்ளானார். அவர் உயிருடன் பிடி பட்டதுவே,அவரது கடும் கோபத்திற்கு காரணம்.
புலிகளின் முக்கியமான கொள்கைகளில் ஒன்று எதிரியிடம் போரிட்டு, அது முடியாது போனபின்னர் உயிரோடு பிடிபடும் சூழ்நிலை வந்தால், சயனைட் அருந்தி மரணிக்கவேண்டும். என்பது தான் கொள்கை. அதை அவர் கடைப்பிடிக்காது, உயிருடன் பிடிபட்டு காங்கேசன்துறையில் இருந்த இந்திய இராணுவத்தினரின் சிறையில் அடைக்கப்பட்டார்.
அங்கு ஏற்கனவே சிறையில் இருந்த மற்றைய போராளிகள் இவரை விரோதியாகவே பார்த்தனர். எல்லாவித அவமானங்களையும் தாங்கினார் நாட்டுக்காக.
இது நடந்து சில காலங்களின் பின் இந்திய இராணுவம் எமது நாட்டை விட்டு சென்றபின், கைது செய்யப்பட்டிருந்த போராளிகளும் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் எல்லோருக்குமான விசாரணை ஒன்று புலிகளால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அதில் சரியான காரணங்களை கூறியவர்கள் மீண்டும் அமைப்பில் இணைக்கப்பட்டனர். அதன் படி ரஞ்சித்தண்ணையை தலைவர் சந்தித்தார். அப்போது தான், பணமும், நகையும் புதைத்த இடம் எனக்கும் கப்டன்.வரதப்பாக்கும் தான் தெரியும்.நானும் குப்பி கடித்தால், அது மண்ணோடு மண்ணாய் போய்விடும் என்பதால், அந்த இடத்தை போராளிகளுக்கு தெரியப்படுத்துவதற்காகவே, தான் உயிரோடு பிடிபட்டதாக கூறினார்.
அத்தோடு,தான் புலிகளின் நிதிப்பொறுப்பாளர் என்பது எதிரிக்கு தெரியும் என்பதால் 1kg,தங்கம், 2கோடி பணத்தை கொடுத்ததால், தன்னை அவர்கள் நம்பியதால் தான் மிகுதி 8kg தங்கமும்,14கோடிபணத்தையும் என்னால் பாதுகாக்க முடிந்ததென்று கூறி எல்லாவற்றையும் மீண்டும் ஒப்படைத்தார்.
தனது பக்க நியாயத்தை கூறியபின் அவர் பெரிய சத்தமாக அழ ஆரம்பித்தார். புலிகளின் மிகப்பெரும் நிர்வாகத்தை கட்டி காப்பாற்றிய போதும் அவர் மனதளவில் குழந்தை போன்றவர். மிகவும் இளகிய மனம் படைத்தவர். எந்த பிரச்சனை, சோகம் என்றாலும் இறுதியில் அவரிடமிருந்து கண்ணீரே வரும்.
அவரது பக்கத்து நியாயத்தை உணர்ந்த தலைவர் மீண்டும் அவரது பொறுப்பை அவரிடமே வழங்கினார்.
எனக்கு தெரிந்தவரை தலைவரின் கட்டளையை மீறும் ஒருவர் அமைப்பில் இருந்தார் என்றால், அது ரஞ்சித்தண்ணை மட்டுமே. புலிகளின் நிதிக்கட்டமைப்பு மிகப்பெரும் வலைபின்னல். அதை முழுவதும் கட்டியாண்ட மேதையும் அவரே.1990இன் பின் புலிகள் அமைப்பும் அசுரவளர்ச்சியை பெற்ற நேரம் என்பதால் நிதித்தேவையும் மிகப்பெரிதாகவே இருந்தது. அதை தனி ஒருவனாக, அவரே திரட்டினார். அதற்காக தாயகத்தின் எல்லா வளங்களையும் ஒன்றாக்கி, அதை காசாக்கினார்.
சர்வதேசத்திலும் பெரும் நிதிக்கட்டமைப்பையும் உருவாக்கினார். அந்த நேரத்தில் எல்லா துறைகளுக்கும் நிதி ஒதுக்கப்படும். ஆனபோதும் சில விசேட தேவைகளுக்கு தலைவர், பொறுப்பாளர்கள் கேட்கும் பணத்திற்கு, தலைவரே தனது கைப்பட ஒரு துண்டில் இவ்வளவு பணம் இவருக்கு கொடுக்கவும் என்று எழுதி ரஞ்சித்தண்ணைக்கு கொடுத்து விடுவார்.
பொறுப்பாளர்கள் கொண்டு போய் கொடுத்தாலும், பெரும்பாலும் அந்த முழுப்பணமும் அவருக்கு கொடுக்கப்படாது. 10லட்சம் என்று இருந்தால் 5 லட்சம் தான் அவருக்கு கொடுக்கப்ப்படும். ஏனெனில் அவரிடம் அந்த பணம் கையில் இருக்காது.
அதனால் ஏற்படும் மன அழுத்தத்தில் சத்தம் போடுவார். இதனால் எல்லா பொறுப்பாளரும் பயத்துடன் தான் அங்கு செல்வார்கள். யாராவது “தலைவர் தந்தவர்,நீங்கள் குறைச்சு தாறியள்” என்று கேட்டாள், அன்று தலைவருக்கும் சேத்து பேச்சு விழும். இது தான் ரஞ்சித்தண்ணை. இது தலைவருக்கும் தெரியும்.இப்படித்தான் பெரும் சிரமத்தின் மத்தியில் எமது போராட்டம் கட்டி எழுப்பப்பட்டது. இப்படி ஒரு நாளில் எங்களுக்கும், பணம் வாங்குவதற்கு தலைவரின் துண்டொன்று கிடைத்திருந்தது. நானும் சங்கரண்ணையும் தான் அந்த பணத்தை பெறுவதற்கு சென்றிருந்தோம்.
அப்போது அவர் கூறினார் நான் வட்டகொட்டிலில் இருக்கிறன், இந்த பணம் உனது தேவைக்கு தானே, நீ போய் வாங்கிக்கொண்டு வா என்றார். அத்தோடு உன்னுடன் அவர் ரொம்ப பிரியம் என்று எனக்கு தெரியும் உடனை தந்திடுவார் என்றார்.
ரஞ்சித்தண்ணை விடுதலையாகி வந்தபோது எங்கள் முகாமில் தான் சிறிதுகாலம் தங்கி இருந்தார். அதனால் என்னுடன் அங்கு அதிக நேரம் செலவிடுவார். அந்த நாட்களில் கிடைத்த நட்பினால் என்னுடன் எப்போதும் பிரியமாகவே இருப்பார்.
நானும் நேரம் கிடைத்த போதெல்லாம் அவரை சந்தித்து உறவாடுவேன். ஆனால் பணம் வாங்க செல்வது இது தான் முதல் முறை. அதனால் எந்த சங்கடமும் இல்லாது, எங்கட ரஞ்சித்தண்ணை தானே என்று அவரிடம் சென்றேன்.
நான் சென்ற நேரம் சொர்ணமண்ணையும் ஒரு துண்டுடன் வந்திருந்தார். கண்டதும் என்னை நலம் விசாரித்தும் ரஞ்சித்தண்ணையின் அறையினுள் சென்றார். அவர் சென்று சிறிது நேரத்தில் ரஞ்சித்தண்ணை சத்தம் போட ஆரம்பித்தார்.
அத்தோடு மேலதிக பணம் கேட்டு வந்தவர்கள் எல்லோரும் ரஞ்சித்தண்ணைக்கு கொதி வந்திட்டுது, போயிற்று பிறகு வருவம் என்று எல்லோரும் ஓட்டமெடுத்தனர். நான் செய்வதறியாது அறையை எட்டிப்பார்த்தேன் என்னை கண்டு உள்ளுக்குள் வரும் படி கூறினார்.
அப்போது ரஞ்சித்தண்ணை, சொர்ணமண்ணையை பார்த்து பெரும் குரலில் என்னிடம் பணம் இல்லை, பணத்துக்கு நான் எங்கு போவேன் என சத்தம் போட்டபடி அழ ஆரம்பித்தார். அவரது அழுகையை பார்த்த சொர்ணமண்ணையும் கண் கலங்கி விட்டார். அவருக்கு தெரியும் ரஞ்சித்தண்ணை அந்த நிதியை திரட்ட படும் சிரமம்.
சிறிது நேரத்தில் வழமைக்கு வந்தபின் அடுத்த அறைக்கு சென்று இரண்டு வாழைப்பழத்துடன் வந்தார். ஒன்றை எனக்கும், இன்னொன்றை சொர்ணமண்ணைக்கும் கொடுத்து சாப்பிடு என்றார். சத்தமில்லாது சாப்பிட்டு முடித்ததும், நாளைக்கு வரும்படி அவரை அனுப்பி வைத்தார்.
நான் தயங்கியபடி வந்த நோக்கத்தை கூறியதும், என்னுடனும் சத்தம் போட்டுவிட்டு எனக்கும் நாளைக்கு வரும் படி கூறி என்னையும் அனுப்பினார். அப்போது தான் எனக்கு புரிந்தது சங்கரண்ணை திட்டமிட்டு என்னை மாட்டிவிட்டது.
அன்றிலிருந்து பணம் கேட்டு நான் போனது கிடையாது. என்னுடன் வருபவரை அனுப்பிவிட்டு நான் வட்டக்கொட்டிலில் இருந்து விடுவேன்.
ஆனால் போராளிகள் அவரை தந்தைக்கு நிகராகவே பார்த்தனர். அதனால் தானோ என்னவோ அவர் ஏசுவதை பொருட்படுத்தாது மீண்டும் அடுத்தநாள் அவரது வாசலில் காத்திருப்பார். இப்படி மிகப்பெரும் பண நெருக்கடியை தலைவரும், ரஞ்சித்தண்ணையும் தினமும் சந்தித்தே எமது போராட்டத்தை உலகம் வாய்பிளந்து பார்க்குமளவுக்கு கொண்டு வந்து சேர்த்திருந்தனர்.
நான் ஊர் போகும் போதெல்லாம் ரஞ்சித்தண்ணையை சந்திக்கும் சந்தர்ப்பத்தை தவறவிடுவதில்லை. அப்படி ஒருநாள் நான் குமாருடன் புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தோம். சுதந்திரபுரம் பகுதியில் வைத்து மொட்டை ஜீப்பில் எங்களை தாண்டி செல்லும் போது என்னை கண்டு எப்ப வந்தனி? எங்கை போறாய்? நான் மாட்டியதை உணர்ந்து வீட்டுக்கு என்றேன்.
அங்கு போய் என்ன செய்யப்போறாய் ? வா வேட்டைக்கு போவம் என்றார். வேறு வழி இல்லாமல் அவருடன் விதியை நொந்தபடி சென்றேன். நாம் சென்றுகொண்டு இருக்கும் போது நிப்பாட்டு, நிப்பாட்டு என்று சத்தம் போட்டார்.
ஜீப் நின்றதும் துள்ளிக்குதித்து இறங்கினார். இறங்கியதும் தான் போட்டிருந்த ஜீன்சின் பின் பக்கத்தை பார்த்தார் எல்லாம் ஈரமாக இருந்தது. உடனே தனது சாரதியை பார்த்து என்னடா இது என்றார்.? அதாவது அவரது சாரதி அன்று ஜீப்பை கழுவி உள்ளார்.
ஜீப்பின் இருக்கைகளில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக, கழுவும் போது அந்த வெடிப்பின் ஊடாக நீர் புகுந்து, சீற்றில் இருந்த பொஞ் நீரை உறிஞ்சி விட்டிருந்தது. பின் இவர் அதன் மேல் இருக்கும் போது இவரது ஜீன்ஸில் அந்த நீர் ஊறியமையால் அது ஈரமாகி விட்டிருந்தது. அதனாலேயே துள்ளிக்குதித்து இறங்கினார்.
அப்படி இறங்கியதும் என்னைப்பார்த்து கூறினார் “இந்த விழுவான் பாத்த வேலையை பாத்தியே? விட்டிருந்தா மரமேமுளைச்சிருக்கும்”என்றார். அவர் கோபத்தில் இருந்ததால் எல்லோரும் பேசாமல் இருந்து விட்டனர்.
ரைமிங் நகைச்சுவை என்று கேள்விப்படிருப்பீர்கள்? அது ரஞ்சித்தண்ணைக்கு அத்துப்படி. நான் முகாம் சென்றதும் இதை குமாருக்கும் ஏனையவருக்கும் சொல்லி வயிறு வலிக்க சிரித்தோம். அடுத்த நாள் எமது பொறுப்பாளரை சந்திக்கும் போது ஒரு சந்தர்ப்பத்தில் நகைசுவைக்காக அவரிடம் சொல்லிவிட்டேன்.
அதை அவர் அண்ணையை சந்திக்கும் சந்தர்ப்பத்தின் போது அவரிடம்கூறியுள்ளார். அடுத்த நாள் அண்ணையிடமிருந்து, தொலைத்தொடர்பில் அவசர செய்தியொன்று ரஞ்சித்தண்ணைக்கு வந்தது. அந்த செய்தி என்னவென்றால் “மரமெல்லாம் காய்க்குதா”? என்பதே.!
அவர் குழப்பத்துடன் மீண்டும் விபரம் கேட்டபோது தான் அண்ணையின் நக்கல் அவருக்கு தெரிந்தது. அவரது கோபம் என் பக்கம் திரும்பியமையால் அவரது கண்ணில் தட்டுப்படுவதையே பெரும்பாலும் தவிர்த்து வந்தேன். இது தான் எங்கள் தலைவன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நக்கல்,நையாண்டிகளுக்கு அளவே இருக்காது. இது தான் புலிகளமைப்பின் மறுபக்கம்.
புலிகளமைப்பில் பல்லாயிரம் பேர் இருந்த போதும், ஒரு குடும்பம் போலவே எல்லோரும் இருந்தோம். அங்கு நக்கல் நையாண்டிகளுக்கு பஞ்சமே இருக்காது. இதில் தலைவரும் விதிவிலக்கல்ல.
அவர் தலைவர் என்பதையும் தாண்டி நல்ல நகைச்சுவை விரும்பி. அதற்கு மேலே நல்ல மனிதனாகவே இருந்தார். அதற்கு பின் தான் போராளி,தலைவன் எல்லாம்.
ரஞ்சித்தண்ணை என்றால் கொதியர் என்று தான் போராளிகள் அழைப்பர். அவரது கொதிக்கு பின்னாலும் நகைசுவை, நையாண்டி அதிகமுள்ள மனிதர்.
அது மட்டுமில்லாது இரக்க குணம் மிகுதியாகக்கொண்டவர். தமிழருக்கான தேசத்தை மிக ஆழமாக அவர் நேசித்தார்.
தலைவர், பாலாண்ணை போன்றவர்கள் எத்தனையோ தடவை திருமணம் செய்யும்படி கூறும்போதெல்லாம் நாடு கிடைச்சாப்பிறகு பாப்பம் என்று கடைசிவரை வாழ்ந்த உன்னதமான போராளி. இறுதிவரை எம் தேசத்தையும், மக்களையும் நேசித்தவர்.
No comments
Post a Comment