தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானப் படை முதன்முதலாக வான் கரும்புலித் தாக்குதல் மேற்கொண்ட பத்தாவது ஆண்டு நாள் இன்றாகும்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் புதிய பரிணாமமாக கருதப்பட்ட வான்புலிகள் அமைப்பு, 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் நாள் தனது முதலாவது தாக்குதலை கொழும்பிலுள்ள கட்டு நாயக்க விமானப் படைத்தளத்தில் மேற்கொண்டதன்மூலம் வெளியுலகுக்கு தமது இருப்பினைப் பறைசாற்றியது.
முதலாவது தாக்குதல்மூலம் வெற்றிகரமாக தளம் திரும்பியமையானது விடுதலைப் புலிகளின் வான்புலிகள் அணி குறித்த பல்வேறுபட்ட சந்தேகங்களை முடிவுக்குக் கொண்டுவந்தது.
விடுதலைப் புலிகளிடம் விமானங்கள் இருக்கின்றனவா? அதற்குரிய ஓடுதளம் எங்கு உள்ளது? இரணைமடுவிலா அல்லது முல்லைத்தீவு பெருங்காட்டுப் பகுதியிலா? விமானப் படைக் கட்டமைப்பின்படி அவர்களின் தாக்குதல் அமையுமா அல்லது தற்கொலைத் தாக்குதல் வடிவில் அமையுமா? போன்ற பல சந்தேகமிக்க கேள்விகள் பல்வேறு இராணுவ ஆய்வாளர்கள் மத்தியில் நிலவியது.
பெரும்பாலும் தற்கொலை வடிவிலேயே விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் நிகழும் என்று சில படைத்துறை ஆய்வாளர்கள் அவ்வப்போது தமது ஆய்வுக் கட்டுரைகளில் கூறிவந்தனர்.
ஆனாலும் யாருமே எதிர்பார்க்காதவாறு 2007ஆம் ஆண்டு அமைந்த முதலாவது விமானப் படைக்குரிய கட்டமைப்பு ரீதியிலான தாக்குதல் சர்வதேச நாடுகளையே இலங்கை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தது. ஒரு போராடும் அமைப்பிடம் விமானத் தாக்குதல் நிகழ்த்துமளவுக்கு இராணுவத் தொழிநுட்ப முன்னேற்றமா? என பல இராணுவ ஆய்வாளர்கள் வியந்தனர்.
இதன் பின்னரும் விடுதலைப் புலிகளின் பல தாக்குதல்கள் வெற்றிகரமாக அமைந்து, தாக்குதல் விமானங்கள் பாதிப்புக்கள் ஏதுமின்றி தளம் திரும்பின.
இந்தியா இலங்கைக்கு கொடுத்த அதியுயர் தரத்திலமைந்த இந்திரா ராடர்களின் கண்ணில் மண்ணைத் தூவுமளவுக்கு வான்புலிகளின் விமானங்கள் லாவகமாக தாழப் பறந்தன.
வன்னியில் இறுதி யுத்தம் மிக உக்கிரமாக நடந்துகொண்டிருந்தபோது 2009 ஆம் ஆண்டு இதே நாளில் சிறிலங்காவின் தலைநகரிலுள்ள வான்படைத் தலைமையகம் மீதும் கட்டுநாயக்கவிலுள்ள வான்படைத் தளம்மீதும் இரண்டு விமானங்களில் சென்று வெற்றிகரமான கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டதாக விடுதலைப் புலிகள் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.
மேலும் இந்த தாக்குதலில் வான் கரும்புலிகளான கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் ஆகியோர் வீரச்சாவடைந்ததாக அந்த அறிவித்தலில் கூறப்பட்டது.
ஆனாலும் இலங்கை அரசு தனது இழப்புக்கள் தொடர்பாக மறுத்திருந்தது. அரசாங்கம் சார்பாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளராக இருந்த கெகலிய ரம்புக்வெல இதனை மறுத்திருந்ததுடன் அந்த இரண்டு விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பி.பி.சியிடம் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும் விடுதலைப்புலிகள் முல்லைத்தீவில் ஒரு சிறு நிலப்பரப்புக்குள் இருந்தபோதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இராணுவம், கடற்படை ஆகிய அணிகள் சூழ்ந்திருந்தபோதும் எவர் கண்ணுக்குமே புலப்படாத வகையில் விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகளும் மாங்குளம் நோக்கி பறந்து அங்கிருந்து மன்னார் சிலாவத்துறை ஊடாக மேற்கு கடற்பிராந்தியத்தை அடைந்து கொழும்பை வந்தடைந்ததாக கூறப்பட்டது. இதனை இராணுவமும் உறுதி செய்தது.
இரண்டு விமானங்களும் கொழும்பு நகரை அண்மித்தபின்பே கண்டறியப்பட்டன. ஆனாலும் விமானங்களை நோக்கி அனைத்து இராணுவ முகாம்களிலிருந்தும் பல முனைத் தாக்குதல்கள் வானத்தை நோக்கி தொடுக்கப்பட்டது.
விமானங்களை இனங்காண்பதற்கான அதிசக்திவாய்ந்த வான விளக்குகள் வானத்தை நோக்கி பாய்ச்சப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது. அந்த நேரத்தில் கொழும்பு நகரமே பகல் போல வெளிச்சங்களால் பிரகாசித்ததுடன் குண்டுச் சத்தங்களால் அதிர்ந்துகொண்டிருந்ததாக நேரில் கண்டவர்கள் பரபரப்போடு கூறினர்.
எவ்வாறாயினும் எதற்குமே அகப்படாத ஒரு விமானம் கொழும்பு கோட்டைப் பகுதிக்குள் ஊடுருவி உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் கட்டடத்தொகுதி மீது மோதி வெடித்தது. இதனால் அந்த மாடிக் கட்டடத்தில் பாரிய தீ பற்றிக்கொண்டது.
மற்றுமோர் விமானம் கட்டுநாயக்க விமானப் படைத்தளத்தை நோக்கி வருவது கண்டறியப்பட்டு உடனடியாக அதனை நோக்கி இடைவிடாத பலத்த தாக்குதல் பல முனைகளிலிருந்தும் மேற்கொள்ளப்பட்டது. மிகவும் தாழப் பறந்ததாலும் இந்த தாக்குதல் மழைக்கு நடுவே அகப்பட்டதாலும் அந்த விமானம் தளத்தின் பின்புறமாக வீழ்ந்து வெடித்ததாக இராணுவ வட்டாரங்கள் கூறின.
உள் நாட்டு இறைவரித் திணைக்கள கட்டடத்துடன் மோதிய விமானம் உருத்தெரியாத அளவுக்கு வெடித்துச் சிதைந்தது. ஆனாலும் கட்டு நாயக்கவில் மற்ற விமானம் இனங்காணக்கூடிய அளவுக்கு மீட்கப்பட்டதுடன் அதில் வந்த வானோடியின் உடலமும் கைப்பற்றப்பட்டது.
No comments
Post a Comment