Latest News

February 12, 2019

இலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு!
by admin - 0

இலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு!



2009 ஆம் ஆண்டு இலங்கைத்தீவில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையை நிறுத்தக்கோரியும், சர்வதேசத்திடம் நீதி கேட்டும் தன்னுயிரை தீயிற்கு இரையாக்கிய தியாகி “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று இலண்டனில் நடைபெற்றது.



வடமேற்கு இலண்டனில் ஹெண்டன் பகுதியில் அமைந்துள்ள அவரதும், 21 தியாகிகள் நினைவாகவும் அமைந்துள்ள நினைவுத் தூபி முன்பாக இன் நிகழ்வு இடம்பெற்றது.



இன்று (12-02-2019) காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை நடைபெற்ற நிகழ்வில் பிரதான சுடரினை மாவீரர் லெப்ரினன் மலர் அவர்களின் சகோதரன் ஏற்றிவைத்தார். ஈகப்பேரொளி முருகதாசனுக்கான ஈகச்சுடரினை மாவீரர் லெப்ரினன் சந்திரன் அவர்களின் சகோதரன் அவர்கள் ஏற்றிவைத்தார். அடுத்து 21 தியாகிகளுக்குமான ஈகச்சுடரினை மாவீரர் மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்களின் உறவினர் ஏற்றிவைத்தார்.



பின்னர் அகவணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து மலர் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. மலர் அஞ்சலியை மாவீரர் லெப்ரினன் பரந்தாமன் அவர்களின் உறவினர் அங்கையற்கன்னியும், நீண்டகால தேசிய செயற்பாட்டாளரும், தமிழ் உணர்வாளருமான சுமதி அம்மா அவர்களும் இணைந்து ஆரம்பித்துவைக்க மக்கள் அனைவரும் வரிசைக்கிரமமாக சென்று சுடரேற்றி தமது மலர் அஞ்சலிகளை செலுத்தினர்.

தொடர்ந்து மாவீரர் பாடல்கள் ஒலிக்கப்பட்டு நினைவுரைகளும் இடம்பெற்றன. நினைவுரைகளை உலகத் தமிழர் வரலாற்று மையத்தை சேர்ந்த தருமன் அவர்களும், வீரத் தமிழர் முன்னணியைச் சேர்ந்த சிவா அவர்களும், நீண்டகால தேசிய செயற்பாட்டாளரும், முன்னாள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானியாவிற்கான மாவீரர் குடும்ப நலன் அமைச்சருமான நிமலன் அவர்களும், அரசியல் பத்தி எழுத்தாளர் திபா அவர்களும் வழங்கியிருந்தனர்.

நிறைவாக உறுதியேற்போடு நிகழ்வுகள் யாவும் நிறைவுக்கு வந்தது.


« PREV
NEXT »

No comments