Latest News

November 28, 2018

செவியை நிறைத்த மாவீரம்
by admin - 0

புனிதமானது விற்பனைக்கானதல்ல என்கிற வாசகத்தை தாங்கி இன்று வெளிவந்திருக்கின்ற இந்த இறுவெட்டானது வெறும் இசைப்பேழை மட்டும் அல்ல, முள்ளிவாய்க்கால் தொட்டு இன்று வரை எம்முள்ளே எரிந்து வரும் நெருப்பிது.. இத்தனை காலமும் தேக்கிவைத்த தமிழரின் உணர்விது.



ஓர் புதினமோ, கட்டுரையோ அல்லது இன்னபிற எழுத்தோ அது என்ன சொல்ல வருகிறது என்பதை தாண்டி அதனுள்ளே என்ன இருக்கிறது என்கிற எதிர்பார்ப்பை கூட்டி வாசகனை தன் பக்கம் ஈர்ப்பதில் பெரும்பங்கு வகிப்பது அதன் தலைப்பு.. “விதையாய் விழுவோம் விடுதலையாய் எழுவோம்” என்கிற இந்த இவ்வெறுட்டின் தலைப்பே சொல்லிவிடுகிறது இதன் உள்ள இருப்பது வெறும் பாடல்கள் மட்டுமல்ல.. விடுதலை முழக்கமும் இதில் இடம்பெற்றிருக்கிறதென்று…




விலை கொடுத்தாலும் கிடைக்காததென்று இந்த உலகில் தனியாய் எதுவும் இல்லை உயிரைத்தவிர.. அந்த உயிரையும் விலையாய் கொடுத்து ஈழமென்ற தாய் நிலத்திற்காகவும், தமிழனின் தன்மான விடிவிற்காகவும் சமராடி உயிர் நீத்த எம் மாவீரைப் போற்றும் விதமாய் வெளிவந்திருக்கும் இந்த இறுவெட்டானது.. விதையாய் வீழ்ந்தாலும் விடுதலையாய் எழுவோம் என்கிற அறைகூவலொன்றை கொஞ்சம் சத்தமாகவே விடுத்திருக்கிறது இந்த உலகத்திற்கு..மாவீரர்களுக்கான புகழாஞ்சலி மற்றும் நம்மை தலைநிமிர்த்திய தலைவனுக்கான வாழ்த்து இதை தாண்டி நிமிராத தமிழனின் முதுகெலும்பை நிமிர்த்தும் நெம்புகோலொன்றும் பாடல்களினூடே இடம்பெற்றிருப்பாதகவே தோன்றுகிறது. இது மிகையான வார்த்தையல்ல, மிகச்சரியான வார்த்தையென்பதை இடம்பெற்றுள்ள பாடல்களை கேட்கும் இனி கேட்கபோகிற செவிகள் உணரும் என்கிற நம்பிகையானது அதிகமாகவே இருக்கிறது விடுதலையை நேசிக்கிற செவியுடைய எனக்கு.





ஒரு உயிர் கருவாகி, உருவாகி, உலகத்தை காண்பதைபோல தான் ஒரு பாடல் உருவாக்கம் பெற்று இசையாகி வெளியீடு செய்யப்படுவதென்பதும்.. மனைவியை மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதித்து விட்டு வாரந்தாவில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து திரியும் கணவனின் உணர்வை போன்றது அது… ஒவ்வொரு பாடலையும் கேட்கும் பொழுது சுகபிரசவம் அடைந்த ஓர் குழந்தையை காண்கிற மகிழ்வை தருகிறது எனக்கு.. பாடல் எழுதிய அத்தனை பேருக்கும் புரட்சிக்கர வாழ்த்துகளும், நெஞ்சார்ந்த வணக்கங்களும்..



நல்லதொரு வரிகளுக்கு உருக்கொடுத்து இசையமைத்த இசையமைப்பாளர் தாமசு இரத்னம் அவர்களுக்கும், குரல்கொடுத்த பாடகர்களுக்கும், இதில் இடம்பெற்ற இசைக்காய் உழைத்த கடைநிலை ஊழியர்கள் அத்தனை பேருக்கும் இசை ரசிகனான எனதின் நெஞ்சார்ந்த நன்றிகள்.. நல்லதொரு இசையை தந்திருக்கிறார்கள் அதற்கு…

பார்க்கும் போதே ஈர்க்கிற வகையில் அட்டைப்படத்தை வடிவமைத்திருக்கிறார் வரைகலைஞர் அண்ணன் இதயதூரிகா.. விடுதலைத்தனலை தூரிகையில் அள்ளியெடுத்து தெளித்திருக்கும் அவரின் நேர்த்திக்கு எனது வாழ்த்துகள்.

மண்ணுக்காய் போராடி உயிர்நீத்து வீரகாவியமாகி காற்றோடு கலந்து இன்று எம் மூச்சோடு நிறைந்தவிட்ட மாவீரர்களை போற்றும் விதமாக வெளியிடப்பட்டிருக்கும் இந்த இசைப்பேழைக்காய் உழைத்த உறவுகள் மற்றும் வெளியில் நின்று பணமாகவும் இனமாகவும் தோள்கொடுத்த அனைவருக்கும் தாயக விடுதலையை நேசிக்கின்ற அத்தனைபேருமே நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.. அந்தவகையில் நானும்..



நல்லதோர் இசைப் பேழையொன்றின் மூலமாக மாவீரரின் ஈகைத்தை போற்றும் முகமாய் இந்த இறுவெட்டை வெளீயிடு செய்ய உழைத்த அத்தனைபேருக்கும் நன்றிகள்.

மேற்சொன்னது போல இதில் இடம்பெற்றிருப்பது பாடல்கள் அல்ல.. முள்ளிவாய்க்காலில் முடிந்துபோனதாய் சொன்ன ஒர் இனத்தின் விடுதலை முழக்கம்.. போராட்டத்தின் தொடர்ச்சி.. புரட்சியின் நீட்சி.. கேட்கும் காதுகள் இதை உணரும் என்பது மட்டும் நிச்சயம்.

-சா.அருண் பிரபாகரன்

« PREV
NEXT »

No comments