தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தொடங்கிய கூட்டத்தில் 7 தமிழர்கள் விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநருக்கு 161வது விதியின் கீழ் பரிந்துரைப்பது என முடிவு செய்யப்பட்டது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட், ரவிச்சந்திரன், நளினி ஆகிய 7 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்து கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் கூறி வழக்கை முடித்து வைத்துவிட்டது.
இதையடுத்து 7 பேர் விடுதலை குறித்து , அமைச்சரவையை கூட்டி விவாதித்து, சட்டநிபுணர்களின் ஆலோசனையும் பெற்று 7 பேர் விடுதலை குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதற்கேற்ப எதிர்க்கட்சிகளும் உடனடியாக அமைச்சரவையை கூட்டி அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தொடங்கியது. இதில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். அப்போது 7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்வது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விதி எண் 161-இன்கீழ் அரசு, ஆளுநருக்கு பரிந்துரைப்பதாக அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
உச்சநீதிமன்றம் தெளிவாக தமிழக அரசுக்கு, இந்த விஷயத்தில் முடிவெடுக்க அதிகாரம் உள்ளது என்று தெரிவித்துள்ளது. எனவே தமிழக அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளது. அமைச்சரவை பரிந்துரையை ஆளுநர் கண்டிப்பாக ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.
No comments
Post a Comment