Latest News

May 14, 2018

முள்ளிவாய்க்கால் வலிசுமந்த பயணத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்!
by admin - 0

முள்ளிவாய்க்கால் வலிசுமந்த பயணத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்!  




தாயகத்தில் இழைக்கப்பட்ட அநீதிக்கு பரிகார நீதி கோரியும் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட எம் சொந்தங்களை நினைவு கூர்ந்தும் தமிழீழ தேசிய துக்கநாள் மே 18 நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மே 12 முதல் 18 வரை இலண்டனில் பல பகுதிகளை மையப்படுத்தி குருதிக்கொடை மற்றும் மிதிவண்டி கவனயீர்ப்புப் போராட்டம் ஆகிய நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டு உணர்வெளிச்சியுடன் நடைபெறுகின்றன.

   

மேலும் மே 11 முதல் மே 13 வரை Great Plastic Pick Up எனப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் சிரமதானப் பணியொன்றிலும் நாடுகடந்த தமீழீழ அரசாங்கம் தன்னை இணைத்துக்கொண்டுள்ளது.




முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளான மே 12 அன்று 10, Downing street பிரித்தானிய பிரதமர் வாசஸ்தலத்தின் முன்பாக மிதிவண்டி கவனயீர்ப்பு போராட்டம் அக வணக்கத்துடன் ஆரம்பமானது. இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு இலங்கை அரசினால் படுகொலை செய்யப்பட்ட தம் உறவுகளை நினைந்து அஞ்சலி செலுத்தினர்.

இந் நிகழ்வில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு மிதிவண்டி கவனயீர்ப்பாளர்களுக்கு ஆதரவு வழங்கினர்.



மேலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள்இவ் மிதிவண்டி கவனயீர்ப்பாளராக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.





















காலை 11 மணியளவில் Downing Street இலிருந்து புறப்பட்ட மிதிவண்டி கவனயீர்ப்பாளர்கள் முதலில் West End Blood Donor Centre எனும் இடத்தைச் சென்றடைந்தனர். இங்கு குருதிக்கொடை வழங்கிய நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தன்னார்வத் தொண்டர்களுக்கு தமது ஆதரவைத் தெரிவித்தபின் மிதிவண்டிப் பயணம் Walthamstow, Newbury Park, Ilford போன்ற பகுதிகளூடாக கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது மிதிவண்டி கவனயீர்ப்பாளர்கள் ஆங்காங்கே தரித்து நின்று மக்கள் சந்திப்பை மேற்கொண்டனர். இறுதியில் மாலை ஆறுமணியளவில் East Ham பகுதியை வந்தடைந்த மிதிவண்டிப் பயணம் எழுச்சிப்பாடல் இசைக்கப்பட்டு உறுதிமொழி எடுத்தலுடன் நிறைவடைந்தது.

இம் முதல் நாள் கவனயீர்ப்பு போராட்டத்தை நிறைவு செய்து வைத்துப் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் மதிப்புக்குரிய திரு. கந்தப்பு ஆறுமுகம் அவர்கள் ஈழத்தமிழ் மக்களின் கோரிக்கைகளை பிரித்தானியா அரசும் சர்வதேச சமூகமும் கருத்தில் கொண்டு ஆவன செய்ய வேண்டுமென வலியுறுத்திப் பேசினார்.

முள்ளிவாய்க்கால் துக்கதின நினைவேந்தல் நிகழ்வுகள் மூலம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன் வைக்கும் கோரிக்கைகள் என்னவெனில் ஐநா மனிதவுரிமைப் பேரவையின் தீர்மானத்தின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாகச் செயலாக்கும் வரை பொதுநலவாய அமைப்பிலிருந்து சிறிலங்கா இடைநீக்கப்பட வேண்டும் இப் பரிந்துரைகளை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில், போர்க்குற்ற விசாரணைக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்படவேண்டும், அநீதி இழைக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களுக்கு பரிகார நீதி வழங்கப்பட வேண்டும், ஈழத்தமிழ் மக்களுக்கான அரசியற்தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு ஒன்று நடைபெற வேண்டும் எனவும் தெரிவித்தார்.


« PREV
NEXT »

No comments