யாழ் மாநகரசபை மேயராக ஆனோல்ட் தெரிவாகுவதில் இருந்த முட்டுக்கட்டைகளை ஈ.பி.டி.பி நேற்றே விலக்கி விட்டிருந்தது. இதன்படி இன்று ஆனோல்ட் சிரமமின்றி மேயரானார்.
ஈ.பி.டி.பி செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவுடன் மாவை சேனாதிராசா, சித்தார்த்தன், சுமந்திரன் ஆகியோர் பேச்சு நடத்தியதன் பின்னர், நேற்றிரவு மீண்டும் டக்ளஸ் எம்.பி, தொலைபேசியில் சித்தார்த்தனை தொடர்பு கொண்டார்.
ஆனோல்ட்டை ஆதரிக்கும் முடிவை தனது உறுப்பினர்கள் ஏற்கவில்லையென்பதால், புதிய திட்டமொன்றை கையிலெடுக்கவுள்ளதாக கூறினார்.
றெமீடியஸ் களத்தில் இறங்குவார், அவர் களமிறங்குவதால் ஏற்கனவே திட்டமிடப்பட்ட விசயங்களில் மாற்றம் நிகழாதென கூறினார்.
இந்த தகவலை கூட்டமைப்பின் தலைமைக்கு அறிவித்து விடவா என சித்தார்த்தன் வினவ, அதை டக்ளஸ் மறுத்துள்ளார். “நாளை (இன்று) காலைவரை பொறுத்து பாருங்கள்“ என்றார்.
இன்று காலையில் சிறிதர் தியேட்டரில் கூடிய ஈ.பி.டிபியினர், தமிழ் தேசிய கூட்டமைப்பை நிபந்தனையின் அடிப்படையில் ஆதரிப்பது, அதற்கு முன்னர் புரிந்துணர்வு உடன்படிக்கை தயாரிக்க வேண்டும், அதற்கு காலஅவகாசம் தேவை என தீர்மானித்தனர்.
இதற்குள், ஈ.பி.டி.பி யின் திட்டம் இன்று காலையில் தமிழரசுக்கட்சியின் பேச்சாளர் சுமந்திரனிற்கு தெரியப்படுத்தப்பட்டது.
ஈ.பி.டி.பியின் ஆதரவு சைக்கிளிற்கு இல்லையா என்பதை உறுதி செய்தார்.
“சைக்கிளை ஆதரிக்காமல், ஈ.பி.டி.பி தனித்து போட்டியிடுவது நல்லதுதான், ஆனோல்ட் இலகுவாக முதல்வராகி விடுவார்“ என்ற தகவல், மாநகரசபை அமர்வுகள் ஆரம்பிக்க முன்னரே கூட்டமைப்பின் தலைமைகளிற்குள் பரிமாறப்பட்டது.
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் இரண்டு உறுப்பினர்களின் வாக்குகளும், ஈ.பி.டி.பிக்கு தான் என்பதை நேற்றே கட்சி தலைமை உறுதி செய்திருந்தது.
இரண்டு உறுப்பினர்களிற்கும் அந்த உத்தரவு மேலிடத்திலிருந்து வந்திருந்தது.
இதனால் பத்து உறுப்பினர்களை கொண்ட ஈ.பி.டி.பிக்கு பன்னிரண்டு உறுப்பினர்கள் உறுதியானார்கள்.
ஆனால் இன்று ஈ.பி.டி.பிக்கு பதின்மூன்று வாக்குகள் கிடைத்ததே, அது எப்படி?
ஐ.தே.கவின் மூன்று உறுப்பினர்கள் உள்ளனர். ஐ.தே.கவின் ஆதரவு த.தே.கூட்டமைப்பிற்குத்தான் என கட்சி தலைமை ஏற்கனவே வாக்களித்திருந்தது.
இதன்படி உறுப்பினர்களிற்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், கட்சியின் முடிவை மீறி ஐ.தே.கவின் ஒரு உறுப்பினர் ஈ.பி.டி.பியை ஆதரித்திருக்கிறார்.
இதனால்தான் 19 ஆசனங்களை எதிர்பார்த்த கூட்டமைப்பிற்கு 18 ஆசனங்களும், 12 ஆசனங்களை எதிர்பார்த்த ஈ.பி.டி.பிக்கு 13 ஆசனங்களும் கிடைத்துள்ளன.
சாவகச்சேரி
சாவகச்சேரி நகர தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிவமங்கை இராமநாதன் தெரிவானார். சாவகச்சேரி நகரசபை அமர்வு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சன் தலைமையில் இன்று மதியம் ஆரம்பமானது. அதன் போது , தவிசாளர் தெரிவுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் சிவமங்கை இராமநாதனின் பெயர் பிரேரிக்கப்பட்டது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் யோகேஸ்வரன் ஜெயக்குமாரின் பெயர் பிரேரிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் பிரேரிக்கப்பட்ட சிவமங்கை இராமநாதன் 12 வாக்குக்களை பெற்று சாவகச்சேரி நகர சபை தவிசாளராக பொறுப்பேற்றார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் பிரேரிக்கப்பட்ட யோகேஸ்வரன் ஜெயக்குமார் 6 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.அதனை தொடர்ந்து நடைபெற்ற பிரதி தவிசாளர் தெரிவின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் பிரேரிக்கப்பட்ட அருணாசலம் பாலமயூரன் தெரிவு செய்யப்பட்டார். சாவகச்சேரி நகர சபைக்கு தமிழரசு கட்சி 05 உறுப்பினர்களும் , ஈழமக்கள் ஜனநாயக கட்சி 03 உறுப்பினர்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 06 உறுப்பினர்களும் , ஐக்கிய தேசிய கட்சி 01 உறுப்பினரும் , ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 02 உறுப்பினர்களும் தமிழர் சமூக ஜனநாயக கட்சி 01 உறுப்பினரும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment