போராட்ட காலம் இரண்டு வருடம் நீடித்தாலும் நாங்கள் கவலை கொள்ளப் போவதில்லை!
நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தனாக இருந்தாலும் சரி சுமந்திரனாக இருந்தாலும் சரி உறுப்பினர்கள் எல்லோரையும் காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள் விவகாரத்தில் துரோகிகளாகவே பார்க்கிறோம்.
தேர்தல் விவகாரத்தில் எந்த அரசியல்வாதிகளுக்கும் நாங்கள் ஆதரவு இல்லை. மக்கள் பிரதிநிதிகள் இலங்கை அரசுக்கு வழங்கிய காலக்கெடு நிறைவடைய ஒருவருடமே உள்ளது. அதற்குள் எமக்கான தீர்வை உலக நாடுகள் பெற்றுத்தர வேண்டும்.
கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறிந்து தருமாறு வலியுறுத்தி தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ள உறவுகளுடைய போராட்டம் ஒரு வருடத்தை எட்டியுள்ளது. தொடர்பாக கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடிக் கண்டறியும் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக 335ஆவது நாளாகவும் சுழற்சி முறையிலான உணவு ஒறுப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறோம். எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது, பதில் கூறு என அரசுக்கு கோரிக்கை விடுத்து 14 தாய்மார்களுடன் கடந்த வருடம் தை மாதம் 23ஆம் திகதி அன்று சாகும் வரை உணவு ஒறுப்புப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தோம்.
அதன் ஒருவருட முழுமையை நினைவு கூருமுகமாகவே கடந்த செவ்வாய்கிழமை கவனவீர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டுடிருந்தோம். இருந்தபோதும் எமது பிள்ளைகள் குறித்து விரைவில் பதில் தருவதாக கூறி எமது உணவு ஒறுப்புப் போராட்டத்தை நிறுத்திய அரசு தீர்வு எதனையும் தரவில்லை.
தற்போது ஐந்து மாவட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்காகப் போராட்டம் மேற்கொண்டு வருகிறோம். தொடர்ந்து கொண்டிருக்கும் எமது போராட்டத்துக்கு உலக நாடுகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தீர்வுகளை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றோம்.
எங்கள் பிள்ளைகள் தொடர்பாக பன்னாடுகளும் தலையிட்டு பதில் கூறும் என்ற நம்பிக்கையில் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
இலங்கை அரசு எங்களுக்கு எந்தவிதமான பதிலையும் வழங்காத நிலையில் உலகநாடுகளின் பிரதிநிதிகள் எங்களுக்கு வழங்கியுள்ள வாக்குறுதியின் பயனாக நிச்சமாக எங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.
போராட்ட காலம் இரண்டு வருடம் நீடித்தாலும் நாங்கள் கவலை கொள்ளப் போவதில்லை. காரணம் எமது தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இலங்கை அரசுக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கியுள்ளனர்.
ஒரு வருடம் நிறைவு பெற்றுள்ளது. இப்போது எமது மக்கள் பிரதிநிதிகள் தேர்தலில் ஈடுபட்டுள்ளார்கள். அரசியல் சம்பந்தமாக நாங்கள் யாருக்கும் சார்பாக செயற்படமாட்டோம். காரணம் நாங்கள் அனைத்து அரசியல்வாதிகளையும் முழுமையாக எதிர்த்துத்தான் தனித்துவமாக இந்தப் போராட்டத்தை நடத்திவருகிறோம் -என்றார்.
No comments
Post a Comment