Latest News

November 15, 2017

தேசியத் தலைவரால் கெளரவிக்கப்பட்ட மூத்த ஊடகவியலாளர் கோபு (கோபாலரத்தினம்) காலமானார்.
by admin - 0

தேசியத் தலைவரால் கெளரவிக்கப்பட்ட மூத்த ஊடகவியலாளர் கோபு (கோபாலரத்தினம்) காலமானார்.


மூத்த பத்திரிகையாளரும், தோழர் கபிலனின் ( ஜேர்மனி) தந்தையுமாகிய எஸ்.எம்.கோபாலரெட்ணம்
( SMG ) ஐயா அவர்கள் இன்று காலமானார். தமிழுக்காகவும், தமிழ்த் தேசியத்துக்காகவும் தன்னை அர்ப்பணித்த ஊடகப்போராளி எஸ்.எம். கோபாலரத்தினம் ஐயாவுக்கு வீரவணக்கம்!!

“எஸ்.எம். ஜீ” என்று செல்லமாக எல்லோராலும் அழைக்கப்படுபவரும் இலங்கைத் தமிழ் ஊடகத் துறையின் விருட்சமெனப் புகழப்படுபவருமான ஊடகவியலாளர் எஸ்.எம். கோபாலரத்தினம், மட்டக்களப்பில் இன்று (15/11/2017) புதன்கிழமை காலமானார்.



அரை நூற்றாண்டுக்கு மேல் பத்திரிகையையே வாழ்வாக்கிக் கொண்டிருந்த கோபு, பத்திரிகைத்துறையில் வீரகேரியில் தொடங்கி, ஈழநாடு, ஈழமுரசு, காலைக்கதிர், செய்திக்கதிர், ஈழநாதம், தினக்கதிர், சுடரொளி ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றினார்.

கோபுவின் அரை நூற்றாண்டு கால பத்திரிகைப்பணியைப் பாராட்டி தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர், 2004ஆம் ஆண்டு ஜுன் மாதம் 4ஆம் திகதி தேசியச் சின்னம் பொறிக்கப்பட்ட தங்கப்பதக்கம் வழங்கிக் கௌரவித்திருந்தார்.

2002ஆம், 2004ஆம் ஆண்டுகளில் ஜேர்மனி பிரான்ஸ், லண்டன் முதலிய ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று திரும்பிய கோபு, அங்கு எழுத்தாளர் சங்கங்களின் வரவேற்றுகளையும் பெற்றார்.



கோபு, பத்திரிகையாளர் என்பதற்கு அப்பால், ஸ்ரீ ரங்கன் என்ற பெயரில் பல சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.
எஸ்.எம்.ஜீ.பாலரெத்தினம், ஊர் சுற்றி எனப் பல பெயர்களிலும் திரை விமர்சனம், இசை விமர்சனம், நூல் விமர்சனம், என அவர் பல விடயங்களையும் எழுதியுள்ளார்.

அரசியல் கட்டுரைகள், பொதுக்கட்டுரைகள் என ஆயிரக்கணக்கில் எழுதியுள்ள எஸ்.எம்.ஜீ., “ஈழ மண்ணில் ஓர் இந்தியச்சிறை”, “அந்த ஓர் உயிர்தானா உயிர்”, “பத்திரிகைப் பணியில் அரை நூற்றாண்டு”, “ஈழம் முடிவில்லாப் பயணத்தில் முடியாத வரலாறு” ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

யாழ்ப்பாணம், கன்னாதிட்டியில் 1930.10.03இல் பிறந்து பெருமாள் கோயிலடியில் வாழ்ந்த கோபலரத்தினம், தனது ஆரம்பகல்வியை சேணிய தெரு சன்மார்க்க போதனா துவிபாசா பாடசாலையிலும் பின்னர் இராமகிருஷ்ண மிஷன் யாழ்.வைதீஸ்வரா கல்லூரியிலும் கற்றார். சில மாதங்கள் மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா வித்தியாலயத்திலும் கற்றுள்ளார்.


அன்னாரின் இறுதிக் கிரியைகள், மட்டக்களப்பு பூம்புகார் 4ஆம் குறுக்கிலுள்ள அவரது மகளின் வீட்டில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை நடைபெறவுள்ளதென, உறவினர்கள் தெரிவித்தனர்.

நன்றி: ஈழம்ரஞ்சன்


« PREV
NEXT »

No comments