Latest News

November 30, 2017

குமரி கடலில் உருவானது ஒகி புயல்: வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை
by admin - 0

தென்மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே 2 நாட்களுக்கு முன் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம் அடைந்து தெற்கு மற்றும் தென் கிழக்கு திசையில் குமரி கடல் பகுதி நோக்கி நகர்ந்தது.அது மேலும் தீவிரம் அடைந்து காற்றழுத்த மண்டலமாகி தற்போது புயலாக உருவெடுத்துள்ளது. குமரியில் இருந்து 60 கி.மீ தூரத்தில் நிலைகொண்டுள்ள இந்த புயலுக்கு ‘ஒகி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலினால் மணிக்கு 65 முதல் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



குமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 36 மணி நேரத்துக்கு மிக பலத்த மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். இடைவெளி விட்டு பலத்த மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்த புயலானது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து லட்சத்தீவு பகுதியை நோக்கி செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

« PREV
NEXT »

No comments