தமிழீழ வைப்பகம் திறக்கும் என காத்திருக்கும் நாகம்மா!
இன்று துயிலும் இல்லத்திற்கு ஒரு வயதான அம்மா ஓடோடி வந்தார். முகம் நிறையப் புன்னகைhttps://youtu.be/CuUMnvZJqrg.சுருக்கமான தோல்கள் நிறைய முதுமையின் அழகு. நாகம்மா கிளிநொச்சியில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கிறாராம். அவரது சொந்த ஊர் வல்வெட்டித்துறை. “என்ரை பிள்ளைகள் இருக்கிற இடத்திலை இந்த உயிரை விடவேணும்..” என்று திமிராகச் சொன்னார்.
நாகம்மாவின் வீட்டில் இரண்டு பிள்ளைகள் மாவீரர். ஏழுபேரை போரில் பலி கொடுத்தவர். “இப்ப ஒரு பிள்ளையை வளர்க்கிறன்..” என்றார். “தம்பி, நான் ஆமியைப் பார்த்து சொன்னனான்.. நீங்களும் சண்டை பிடிச்சியள். நாங்களும் சண்டை பிடிச்சம். ஆர் வெண்டது, தோத்தது எண்டுறது இருக்கட்டும். ஆனால் இதுகள் எங்கடை பிள்ளையள் எண்டனான்..”
நாகம்மா இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும்போதும் துயிலும் இல்ல வீதியில் ஒரு இராணுவ வண்டி இராணுவத்தினரை நிறைத்துக் கொண்டு போனது. தன் பிள்ளைகளுக்காக விளக்கேற்றும் விநாடிகளுக்காக காத்திருக்கும் அவரின் பேரவா தெரிய பேசிக் கொண்டிருந்தார்.
அவர் முதுமையில் வறண்டுபோன கையில் இன்னமும் பளபளக்கும் தமிழீழ வைப்பக வங்கிக் கணக்கு புத்தகம் ஒன்றை வைத்திருந்தார். தன் சட்டைப் பையிலிருந்து எடுத்துக் காட்டினார். 2009இற்கு முன்னரான காலத்தில் அவருக்கு மாதம் ஆறாயிரம் ரூபாவை வழங்கியுள்ளது தமிழீழ வைப்பகம். அந் நாட்களில் அது பெரிய பணம். மாதம் ஒன்றுக்கு தனியொருவருக்கு போதுமான நிதி.
போராட்டத்திற்கு பங்களித்தவர்களை, மாவீரர்களின் பெற்றோர் உறவுகளை அன்றைக்கு புலிககள் இயக்கம் இப்படித்தான் பொறுப்பாக தம் அரசில் நிர்வகித்து வந்தது. ஒரு விடுதலை இயக்கம் இப்படியான விடயங்களை சாத்தியப்படுத்தியிருக்கிறது. இன்று அரசோ, தமது அரச திணைக்களங்களோ, பாதிக்கப்பட்டவர்களை இப்படி ஏதும் நிர்வாகிக்கிறதா?
இறுதியாக அந்தப் புத்தகத்தில் 16ஆயிரம் ரூபா வைப்பில் இருப்பதையும் வைப்பு விபரங்கள் காட்டின. “தம்பி, தமிழீழ வைப்பகம் திரும்பவும் திறக்கும்தானே..” என்று நம்பிக்கையோடு கேட்டார். அம்மா, தனக்குள் சேகரித்து வைத்திருப்பது தமிழீழ வைப்பக புத்தகத்தையும் 16ஆயிரம் ரூபாவையும் மாத்திரமல்ல.
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்
No comments
Post a Comment