வடமராட்சி மாவீரர் நாள் ஏற்பாட்டு குழுவினர், வல்வெட்டித்துறை தீருவில் திடல் பகுதியில் மிகப்பெரும் எழுச்சியாக மாவீரர் தினத்தைக் கொண்டாடுவதற்காக அழைப்பினை விடுத்துள்ளனர்.
அதன் விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
தங்கள் தார்மீகக் கடமையாம் மாவீரச் செல்வங்களை நினைவுகூற அழைக்கின்றோம்.
வீரம் பிறந்த மண்ணின் மைந்தர்களே!
ஈழம் தலை நிமிரவும் தமிழனின் பெருமையை பறைசாற்றவும் தேச விடுதலை தீ ஈழமெங்கும் பற்றிக் கொள்ள ஒரு சிறு தீப்பொறியாய் எழுந்த தலைவனைத் தந்த வல்வெட்டித்துறையாம் உங்கள் மண்ணில்.
ஈழப் போராட்டத்தின் அடையாளங்களாக தாயக மண் மீட்புக்காய் களமாடி அம் மண்ணுக்கே உரமாகி ஈழப்போராட்டத்தின் விதையாகிய மாவீரர்களை நினைவு கொள்வது எமது ஒவ்வொருவரது தார்மீகக் கடமையாகும்.
எதிர்வரும் 27.11.2017 திங்கட்கிழமை அன்று எமது தாயக விடுதலைக்காய் களமாடி தங்கள் இன்னுயிரை ஈர்த்த மாவீரச் செல்வங்களின் நினைவேந்தலானது வடமராட்சி மாவீரர் துயிலுமில்லமான எள்ளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதால் இம்முறை மாவீரர் தினம் வல்வெட்டித்துறை தீருவில் குமரப்பா புலேந்திரன் சதுக்கத்தில் நடைபெறவுள்ளது. இந் நிகழ்விற்கு வடமராட்சி பொது அமைப்புக்கள் விளையாட்டுக் கழகங்கள், தமிழ் தேசியப் பற்றாளர்கள் அனைவரின் ஆதரவில் மிகச் சிறப்பாக உணர்வு பூர்வமாக நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு மாவீரச் செல்வங்களுக்கும் தனித்தனியாக ஈகைச் சுடர் ஏற்றுவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. எனவே மாவீரர்களது பெற்றோர்கள் உறவினர்கள் உரித்துடையோர் மாவீரர்களின் புகைப்படங்களை கொண்டு வந்து தமது கைகளால் மாவீரச் செல்வங்களுக்கு ஈகைச் சுடரினை ஏற்றி அவர்களை நினைவுகூற வருமாறு அழைக்கின்றோம்.
மாவீரச் செல்வங்களது உறவினர்கள் உரித்துடையவர்கள் இந் நிகழ்வில் கலந்து கொள்வதற்கான போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. பருத்தித்துறை பகுதியை சேர்ந்தவர்களுக்கு பருத்தித்துறை பஸ் நிலையத்திலும், நெல்லியடி கரவெட்டி பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கு நெல்லியடி பஸ் நிலையத்திலும், கெருடாவில் தொண்டைமனாறு பகுதியை சேர்ந்தவர்களுக்கு செல்வச் சந்நிதி கோயிலடியிலும் பேருந்துகள் மதியம் 3 மணிக்கு தரித்திருக்கும் அங்கிருந்து சரியாக 4 மணிக்கு பேருந்துகள் புறப்பட்டு தீருவில் சதுக்கத்தை வந்தடையும். அங்கு 5 மணியளவில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நடைபெற்று 5.30 மணிக்கு தீருவில் சதுக்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு 6.10 மணிக்கு ஈகைச் சுடர் ஏற்றும் நிகழ்வு நடைபெறும். அதைத் தொடர்ந்து மௌன அஞ்சலியும் தொடர்ந்து மாவீரர் துயிலுமில்லப் பாடல் இசைக்கப்படும். இந் நிகழ்வில் தமிழ் பேசும் உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு எமது தார்மீகக் கடமையை நிறைவேற்றுவோம் வாரீர்!
வடமராட்சி மாவீரர் நாள் ஏற்பாட்டு குழு
0094774209094
0094773724494
இவ்வாறு வடமராட்சி மாவீரர் நாள் ஏற்பாட்டு குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.
No comments
Post a Comment