அரசாங்கத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – சிவகரனுக்கு புலனாய்வுப் பிரிவு எச்சரிக்கை!
அரசாங்கத்துக்கெதிரான பிரச்சாரன நடவடிக்கைகளையோ அல்லதுஅசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையிலோ பிரச்சாரங்களை மேற்கொண்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ். சிவகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ். சிவகரனை விசாரணைக்கு வருகை தருமாறு கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் அழைப்பு விடுத்திருந்த நிலையில் அவர் நேற்று விசாரணைக்காக சென்றிருந்த பின்பு இன்று ஊடகவியலாளர்களைச் சந்திக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
கடந்த வருடம் மாவீரர் தினம் நடாத்தியதற்கும், மே 18 முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவு நிகழ்வு கொண்டாடியமை தொடர்பாகவும் கேள்விகள் கேட்கப்பட்டது.
அத்துடன் விடுதலைப்புலிகளின் கருத்தியல் போக்கை வலப்படுத்துகின்ற விதமாகவும் பயங்கரவாதத்தைத் தூண்டும் விதமாகவும் தொடர்ச்சியான செயற்பாடுகளும், கருத்துத் தெருவிப்புக்களும் என்னால் மேற்கொள்ளப்படுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தனர்.
காவல்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் வேண்டுகையின் பிரகாரமே தன்னிடம் விசாரணை நடத்தப்படுவதாக அவர்கள் தெரிவித்திருந்த நிலையில், நான் அவர்களிடம் ‘முள்ளிவாய்க்கால் மற்றும் மாவீரர் தினங்களை விடுதலைப்புலிகளின் அடையாளங்கள் தவிர்க்கப்பட்டு நினைவுகூரப்படலாம் என காவல்துறைமா அதிபர் உட்பட அரசாங்கமே அறிவித்திருந்தது எனக் கேட்டேன். அவர்கள் இதற்கு எந்தப் பதிலையும் தெரிவிக்கவில்லை.
வேண்டுமென்றே எனது செயற்பாட்டையும், சிவில் சமூகங்களினுடைய செயற்பாடுகளையும் முடக்கும் விதமாக எனக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் என்றே நான் கருதுகின்றேன் எனவும் தெரிவித்தார். அத்துடன் தொடர்ச்சியாக நான் செயற்பட்டால் என்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
No comments
Post a Comment