Latest News

October 05, 2017

இராமநாதபுரம் ம.வி வைரவிழாவுக்கு அலையெனத் திரண்ட பாடசாலைச் சமூகம்!g
by admin - 0

கிளிநொச்சி இராமநாதபுரம் மகாவித்தியாலயத்தின் வைரவிழா நிகழ்வுகளை நடாத்தக்கூடாது என வடமாகாணக் கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரனால் அறிவித்த போதும் ஏற்கனவே திட்டமிட்டபடி பாடசாலைச் சமூகத்தால் வைரவிழா நிகழ்வுகள் மிகவும் சிறந்த முறையில் நடைபெற்றுள்ளன. மேற்படி வைரவிழா நிகழ்வுக்கு இராமநாதபுரம் மகாவித்தியாலய சமூகத்தினர் அலையெனத் திரண்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது.

zஇராமநாதபுரம் மகாவித்தியாலயத்தின் வைரவிழா நிகழ்வுக்கு மேற்படி பாடசாலையின் முன்னாள் ஆசிரியரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரனை பிரதம விருந்தினராக அழைத்தமையை எதிர்த்து வடமாகாணக் கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் மூலமாக மேற்படி வைரவிழா நிகழ்வுகளை குறித்த திகதியில் நடாத்த வேண்டாம் எனக்கூறி பாடசாலை அதிபருக்கு வடமாகாணக் கல்வி அமைச்சினால் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. தாம் ஏற்கனவே திட்டமிட்ட மேற்படி வைரவிழா நிகழ்வை குறித்த தினத்தில் நடாத்த அனுமதிக்குமாறு கோரி வடமாகாணக் கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரனைச் சந்திக்கச் சென்ற பாடசாலைச் சமூகத்தினரை 3 மணி நேரம் வரை காத்திருக்க வைத்த மேற்படி அமைச்சர் அவர்களில் அதிபரை மட்டும் சந்தித்ததுடன் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனை மேற்படி நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக அழைப்பதை தவிர்க்குமாறும் அதனை பலர்விரும்பவில்லை எனவும் அதிபரிடம் கூறியதுடன் கிளிநொச்சியில் சிறீதரன் என்ன தனி இராட்சியமோ நடத்துகிறார் அதனைப் பார்த்துக்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அரசியலுக்காக பாடசாலை நிகழ்வைக் குழப்ப எண்ணியுள்ளமையை புரிந்துகொண்ட பாடசாலைச் சமூகம் ஏற்கனவே திட்டமிடப்பட்டபடி பாடசாலையின் வைரவிழா நிகழ்வை தாம் குறிப்பிட்ட தினத்தில் நடாத்த உறுதிபூண்டு இன்றைய தினம் இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தின் பெற்றோர்கள், பழையமாணவர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், நலன் விரும்பிகள் என அனைவரும் ஒன்றிணைந்து அலையெனத் திரண்டு வந்து வைரவிழா நிகழ்வை மிகவும் சிறப்புற நடாத்தியுள்ளார்கள்.

மேற்படி வைரவிழா நிகழ்வு பாடசாலையின் அதிபர் எம்.சி.எல்.மனுவல் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் வை.தவநாதனும் மற்றும் கௌரவ விருந்தினர்களாக வடக்குமாகாணசபை உறுப்பினர்களான த.குருகுலராசா, சு.பசுபதிப்பிள்ளை மற்றும் கல்வி அதிகாரிகள் அயற்பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.










« PREV
NEXT »

No comments