ஈழத் தமிழரது போராட்டத்திற்தான் இலங்கைக்கான ஜனநாயகமும் ஏனைய இனங்களுக்கான உரிமைகளும் மையங் கொண்டுள்ளன. ஒடுக்கப்படும, அநீதி இழைக்கப்படும் ஈழத் தமிழருக்கான ஜனாநயமின்றி இலங்கைக்கான ஜனநாயகம் பற்றியோ, மனிதஉரிமைகள் பற்றியோ பேச முடியாது.
நீண்ட காலமாய் தொடர்ச்சியாக ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநியாயங்களுக்கு எதிராக நீதி காணாமல் இலங்கைக்கான நீதியைப் பற்றிப் பேசமுடியாது.
தொன்மையான வரலாற்றையும் செழுமையான பண்பாட்டையும் கொண்ட ஆனால் அளவால் சிறிய ஈழத் தமிழினம் ஒடுக்குமுறைக்கு எதிரான தனது போராட்டத்தில் தன் அளவுக்கும் அதிகமான அளவு தியாகங்களைச் செய்துள்ளதுடன் தன் அளவையும் மீறிய அளவிற்கு அது அழிப்புக்களுக்கும், இழப்புக்களுக்கும், துயரங்களுக்கும் ஆளாகியுள்ளது.
ஆன்றோரும், சான்றோரும், தீர்க்கதரிசிகளும் தோன்றாத ஒரு சமூகம் இலகுவில் தலையெடுக்க முடியாது. இதற்கு நேரெதிர்மாறாக அரசியல் வியாபாரிகள் தலையெடுத்துள்ள ஒரு யுகத்தில் தமிழ் மக்களின் தலைவிதி பெரிதும் கேள்விக்குறிக்கு உள்ளாகியுள்ளது.
1977ஆம் ஆண்டு பிரிந்து செல்லும் விடுதலைப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தவர்கள், தேர்தல் மேடைகளில் மேடைக்கு மேடை பகவத்சிங்கையும், கரிபால்டியையும், மசனியையும், சுபாஸ் சந்திர போசையும் உதாரணங்காட்டி விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தில் இளைஞர்களை ஈடுபடுமாறு உணர்ச்சி ததும்ப பேசியவர்கள்தான் இன்று தமிழ் மக்களுக்கு தலைமை தாங்குகின்றனர் என்பதை வரலாற்றுப் பதிவாக அவதானிக்க வேண்டியதும் அவசியம்.
இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட இத்துணை தியாகங்களுக்கும் பேரழிவுகளுக்கும், இழப்புக்களுக்கும் பின்பு அதற்குப் பொருத்தமானதும், தகுதியானதுமான ஒரு அரசியல் தீர்;விற்கு மாறாக வரலாற்றுச் சக்கரத்தை பின்னோக்கி சுழற்ற முயல்வது எவ்வகையிலும் சரியானதாகாது.
இந்நிலையில் ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நிர்க்கதியிலிருந்து மீள்வதற்கான அடுத்த கட்டம் என்ன? ஏற்பட்ட பேரழிவுகளுக்கும், இழப்புக்களுக்கும் பொறுப்பேற்கத் தவறி வரலாற்றை பின்னோக்கிச் செலுத்த முற்படுவது ஒரு வரலாற்று முரண்நிலையாகும்.
சர்வதேச சமூகத்தின் பொறுப்பு என்ன?
ஈழத் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதைப் பற்றியும் அவர்களுக்குரிய உரிமைகளை இலங்கை அரசு மறுத்து ஒடுக்குமுறையில் ஈடுபடுட்டு வருவதைப் பற்றியும் அமெரிக்கா, பிரித்தானிய உட்பட்ட மேற்குல நாடுகளும் மற்றும் இந்தியா, யப்பான் போன்ற நாடுகளும் தொடாந்து கூறிவருகின்றன. இவ்வகையில் மேற்குலக நாடுகள் மற்றும் ஐநாவின் மனிதஉரிமைகள் ஆணையம் என்பனவற்றின் அறிக்கைகளும் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைப் பற்றி பேசுகின்றன.
ஆனால் இவ்வாறு ஏற்றுக் கொண்டதும், கூறிவருதுமான உண்மைகள் ஒருபுறம் இருக்க மறுபுறம் “பயங்கரவாதத்திற்கு எதிரான” யுத்தம் என்றதன் பேரில் தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை அரசின் அபகீர்த்திக்குரிய இரத்தம் தோய்ந்த இராணுவ நடவடிக்கைகளுக்கு சர்வதேச நாடுகள் அனைத்தும் ஆதரவு அளித்ததுடன் முக்கியமான நாடுகள் எல்லாம் ஆயுத உதவி, இராணுவ உதவி, நிதியுதவி மற்றும் அரசியல் இராஜதந்திர உதவிகளை வழங்கின. “சமாதானத்திற்கான யுத்தம்” என்ற இலங்கை அரசின் கோஷத்தை ஏற்று இலங்கை அரசிற்கு அனைத்து வகையிலும் உதவிபுரிந்த சர்வதேச நாடுகள் மேற்படி அதற்கான யுத்தம் பாரிய இன அழிப்புடன் முடிந்த எட்டரை ஆண்டுகளின் பின்பும் இதற்கான பரிகாரங்களையோ, சமாதானத்திற்கான நீதியான அரசியல் தீர்வை ஏற்படுத்துவதிலோ எவ்வித முன்னேற்றத்தையும் காட்டவில்லை.
சர்வதேச நாடுகள் தமக்குரிய கடப்பாடுகளை தவறிவிட்டனர் என்பதை தமிழ் மக்கள் கோபத்துடன் நோக்குகின்றனர் என்பதை சர்வதேச சமூகம் கவனத்திற்கு எடுப்பதாக இல்லை. ஐநா சபையின் உள்ளக விசாரணை அறிக்கையின் படி 70,000க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் முள்ளிவாய்காலில் படுகொலைக்கு உள்ளானதை பதிவு செய்துள்ளது. இந்நிலையில் தமிழ் மக்களுக்கான நீதியைப் பற்றியும், இதற்கான பரிகாரங்களைப் பற்றியும், இப்பரிகாரங்களுக்குப் பொருத்தமான வகையில் அரசியல் தீர்வுகளைக்காண வேண்டியதுமான பொறுப்பு சர்வதேச சமூகத்திற்கு உண்டு.
காலத்திற்குக் காலம் சர்வதேச நாடுகளும், அமைப்புக்களும் கண்துடைப்பான அறிக்கைகளை வெளியிட்டு தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ள கோபத்தை சாந்தப்படுத்த முயல்கின்றனவே தவிர அவர் நீதிக்கான தீர்வுகளைக் காண்பதில் எவ்வகையிலும் நடைமுறை ரீதியாக முன்னேறவில்லை.
தற்போது ஐநா மனிதஉரிமைகள் ஆணையத்தின் ஆணையாளர் அல்-ஹ{ஸைன் மேற்படி மனிதஉரிமைகள் ஆணையத்தின் 36வது கூட்டத் தொடரை செப்டெம்பர் 11ஆம் தேதி தொடக்கி வைத்து ஆற்றிய தொடக்கவுரையில் இலங்கை அரசுக்கு எதிரான எச்சரிக்கை கலந்த செய்தியுண்டு. அதாவது “சர்வதேச சட்டத்தின் உலகளாவிய நீதிச் செயலாட்;சி பிரிவின் கீழ் இலங்கையில் இழைக்கப்பட்ட போர்க்குற்றச் செயல்களை அந்நாட்டிற்கு வெளியே விசாரணை செய்யலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே இதற்கு இசைவான வகையில் பிரேசிலில் இருந்து ஐந்து தென் அமெரிக்கா நாடுகளுக்கான இலங்கைத் தூதராக செயற்பட்ட இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூர்யவிற்கு எதிராக போர்க்குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இப்பின்னணியில் ஐநா ஆணையாளரின் மேற்படி அறிக்கை வெளியான மறுநாளான 12ஆம் தேதி இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காணாமல் போனோர் தொடர்பான செயலகம் உடனடியாக அதன் செயற்பாடுகளை தொடங்குவதற்கான வர்த்தமானிய அறிக்கையில் கைசாத்திட்டார். காணாமல் போனோர் தொடர்பான இந்த செயலகத்திற்கு காணாமல் ஆக்கியவர்களை கண்டுபிடிக்கும் அதிகாரமோ அவர்கள் மீது வழக்குக்களை பதிவு செய்து விசாரணை செய்து தண்டனை வழங்குவதற்கான அதிகாரங்களோ கிடையாது.
வெறுமனே காணாமல் போனோர் பற்றிய ஒரு தகவலை பதிவு செய்யும் ஒரு தொழிலைதான் பிரதானமாக செய்ய முடியும். ஆனால் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மாயமானை பின்தொடர்வது போல இதற்குப் பின்னால் இரண்டு ஆண்டுகள் பின்தொடர்ந்து ஏமாருவதைத் தவிர வேறு ஏதுவும் இச்செயலகத்தில் இருக்கப் போவதில்லை.
ஜனாதிபதி மேற்படி வர்த்தமானியில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து சர்வதேச நாடுகளும், அமைப்புக்களும் பின்வருமாறு அறிக்கைகளை வெளியிடும். அதாவது ஜனாதிபதியின் நடவடிக்கையில் திருப்தி ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக இலங்கை அரசின் செயற்பாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் ஒருபுறம் கூறிக்கொண்டு மறுபுறம் இவை நத்தை வேகத்தில் நடைபெறுகின்றன என்று தமிழ் மக்களை சாந்தப்படுத்தக்கூடிய இன்னொரு செய்தியையும் கூடவே வெளியிடும்.
இப்போது தமிழ் மக்களுக்குத் தேவைபடுவது அறிக்கைகளும், சாந்தப்படுத்தவல்ல செய்திகளும் அல்ல. இலங்கை அரசின் இரத்தம் தோய்ந்த யுத்தத்திற்கு உதவிய சர்வதேச நாடுகள் அவர்களே ஒப்புக் கொண்டிருக்கும் அநீதிக்கு எதிரான நீதியைக் காணத் தேவையான நடைமுறைக்குரிய செயற்பாடாகும்.
தமிழருக்கு வேண்டியது நல்லிணக்கம் அல்ல, நீதியின்பாலான அரசியல் தீர்வு. அதாவது “கடித்த பாம்பிற்கு பல்லு வலிக்கின்றது” என்று பேசும் நல்லிணக்கத்திற்குப் பதிலாக பாம்பால் கடிக்கப்பட்டு துன்புறும் புறாவிற்கான பரிகாரம் காணவல்ல நடைமுறையிலான அரசியல் தீர்வவே அவசியமானது.
நிகழ்ந்த இனப்படுகொலையையும், இழைக்கப்பட்ட அநீதிகளையும் ஏற்று இவ்வாறு வெற்றிபெற்ற அநீதியுடன் இணைந்து அதற்குப் பணிந்து வாழுங்கள் என்று தமிழ் மக்களுக்க கூறுகின்ற நல்லிணக்கம் பற்றிய பேச்சுக்களும், செயல்களும் ஒடுக்குமுறைக்கு சேவை செய்வனவாக அமைகின்றனவே தவிர ஒடுக்கப்படும் மக்களுக்கான நீதியைப் பற்றி பேசுவனவாக அமையாது.
தமிழ் மக்களின் பிரச்சனை ஒரு சட்டப் பிரச்சனையல்ல.
தமிழ் மக்களின் பிரச்சனை ஒரு சட்டப் பிரச்சனையோ அல்லது வெறும் மனிதஉரிமைகள் பற்றிய பிரச்சனையோ அல்ல. அது மிகவும் ஆழமான முழுமைப்படுத்தப்பட்ட ஒரு தேசிய இனப்பிரச்சனையாகும்.
புவிசார் அரசியல் நலன்களும், இந்தியா-இலங்கைக்கு இடையிலான அரசியல் பிரச்சனைகள் சார்ந்த பிரச்சனைகளின் வெளிப்பாடாகவும் பூகோள ரீதியிலான நலன்களைக் கொண்டுள்ள பேரரசுகளின் புவிசார் அரசியல் நலன்களினதும் வெளிப்பாடாக எழுந்துள்ள ஓர் இரத்தம் தோய்ந்த பிரச்சனையின் வெளிப்பாடாகும். ஆதலினால் இதனை வெறுமனே சட்டவடிவிலான பிரச்சனையாகவோ, மனிதஉரிமைகள் சார்ந்த பிரச்சனையாகவோ பார்த்து அதற்கு தீர்வுகாண முடியாது.
இலங்கை அரசியல் யாப்பானது சுதந்திரத்திற்கு முன்னான காலத்திலிருந்து பெரும்பான்மையின ஆதிக்கத்திற்குப் பொருத்தமாக வடிவமைக்கப்பட்ட அரசியல் யாப்பு வரலாற்றைக் கொண்டுள்ளது. இங்கு தேசிய இன அடிப்படையிலான ஜனநாயகம், தமிழ் மக்களின் தேசிய இன உரிமை என்பன முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட வகையில் அரசியல் யாப்பானது பரிணாம வளர்ச்சி அடைவதற்குப் பதிலாக அது எதிர்வளமாக அரசியல் அரிப்பிற்கு உள்ளாகியுள்ளது.
இத்தகைய மரபைக் கொண்ட இலங்கையின் அரசியல் யாப்பு மற்றும் சட்ட வரையறைகளுக்குள் நின்று கொண்டு தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வுகாண முடியாது. இந்த யாப்பு மரபை தமிழ் மக்கள் முற்றிலும் நிராகரித்து தமக்கான நீதியான தீர்வை வேண்டி போராட முற்பட்டனர்.
1972ஆம் ஆண்டு உருவான முதலாவது குடியரசு அரசியல் யாப்பை தந்தை செல்வா யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் பெருந்திரளான மக்கள் முன்னிலையில் தீயிட்டுக் கொளுத்தி அதன் மீதான எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
அத்தகைய யாப்பின் தொடர்ச்சியான வளர்ச்சிப் போக்கின் மரபிற்கு உட்பட்ட அரசியல் யாப்பு சிந்தனைக்கு தமிழ் மக்கள் கட்டுப்பட முடியாது. அத்தகைய யாப்பு மரபிற்கு மாறாக தேசிய இன அடிப்படையிலான அரசியல் தீர்வு ஒன்றை எட்டிய நிலையில் அத்தகையத் தீர்வை செயற்படுத்தவல்ல ஒரு புதிய அரசியல் யாப்பு மரபை தோற்றுவிக்க வேண்டுமேதவிர வெறுமனே பழைய பாணியிலான அரசியல் யாப்பைப் பற்றி சிந்திக்க முடியாது.
புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டு அதில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு உருவாக்கப்படும் என்ற உத்தரவாதத்தின் பேரிற்தான் நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்க முக்கிய சர்வதேச நாடுகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நல்லாட்சி அரசாங்கத்தினரும் தமிழ் மக்களிடம் தேர்தல் காலத்தில் ஆதரவு கோரினர். அந்த தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்று பதவிக்கு வந்த அரசாங்கம் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு எதிரான நடைமுறைகளையே அடுத்து அடுத்து அரங்கேற்றத் தொடங்கியது.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியைப் பற்றி தேர்தல் பெரிதாக வாக்குறுதகளைக் கூறிய ஆட்சியார்கள் மத்தியில் இருந்து அதற்கு எதிரான அறிக்கைகளும், செயற்பாடுகளும் வெளிவரத் தொடங்கின.
2016ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த தைப் பொங்கல் திருநாள் விழாவில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க “காணாமல் போனோர் எவரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை” என்ற அதிர்ச்சியான தகவலை தெரிவித்தார்.
“இராணுத் தளபதிகள் முதல் அடிநிலை இராணுவ வீரன் வரை எவரையும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த எந்தொரு நாட்டையும் தனது அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை” என்று கூறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் கூறுகையில் “போர் வீரர்களைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் கொள்கை நிகழ்ச்சி நிரல் மிகவும் வலுவாக உள்ளது” என்றும் தெரிவித்தார்.
அத்துடன் “இராணுவத்தினர் பெரும் தியாகம் செய்துள்ளனர்” என்று கூறி அவர்களைப் பாராட்டியும் ஜனாதிபதி பேசியுள்ளார்.
1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பிறப்பித்து அதன் கீழ் அன்றைய இராணுவத் தளபதியான பிரிகேடியர் வீரதுங்காவை வடக்கிற்கு இராணுவத்துடன் அனுப்பி வைத்த போது இலங்கையின் மொத்த இராணுவத்தின் தொகை ஒரு பிரிகேடியரைத் தலைமைத் தளபதியாகக் கொண்ட நிலையில் 10,000க்கு உட்பட்ட படையினரைக் கொண்டதாகவே இருந்தது. ஆனால் இப்போது அது மூன்று இலட்சம் படையினரைக் கொண்டுள்ளது.
இந்த இராணுவமானது வெளிநாடுகளுடன் போரிடுவதற்காக அமைக்கப்பட்ட இராணுவம் அல்ல. அது தமிழ் மக்களுக்கு எதிராக தமிழின எதிர்ப்போடு வடிவமைக்கப்பட்ட ஓர் இராணுவமாகும். இதனால் தமிழ் மக்கள் தமக்கான ஒரு பாதுகாப்புப் படையாக ஒருபோதும் பார்க்கமாட்டார்கள் என்பதே யதார்த்தம். இத்தகைய இராணுவத்தின் பிரசன்னத்தை மேலும் வலுவாக்கும் வகையிலான ஆட்சியின் கீழான அரசியல் தீர்வை தமிழ் மக்கள் தீர்;வாக கருத இடமிருக்காது.
தமிழ் மக்களின் கண்களில் இலங்கை இராணுவம் ஓர் இனப்படுகொலை புரிந்த இராணுவமாக பார்க்கப்படும் அதேவேளையில் ஆட்சியாளர்களின் கண்களில் அவர்கள் தியாகிகளாக பார்க்கப்படும் நிலைக்கும் இடையேயுள்ள அதலபாதாள முரண்பாட்டுக்குரிய இடைவெளியின் மத்தியில் நல்லிணக்கம், அரசியல் தீhவு என்பனவெல்லாம் தமிழ் மக்களை ஒடுக்குவதற்கேற்ற அணிகலன்களாகவே காணப்படுகின்றன.
புதிய யாப்பு முன்வைக்கும் பழைய தீர்வு
இப்பின்னணியில் முன்வைக்கப்படும் புதிய யாப்பானது எத்தகைய புதிய தீர்வையும் முன்வைக்கவில்லை. அவர்கள் ஏற்கனவே உள்ளன 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் அதுவும் வடக்கு-கிழக்கு இணைப்பற்ற மேலும் அரிக்கப்பட்ட வகையிலான வடக்கு-கிழக்கை பிரிக்கு ஒரு தீர்வைப் பற்றியே பேசுகிறார்கள்.
புதிய மாகாணசபையில் மாகாணசபைக்கு பொலிஸ் அதிகாரம் உண்டு என்பதான ஒரு புதிய தீர்வு காணப்பட்டுள்ளதாக தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பினர் பேசுகின்றனர். இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின்படியான தற்காலிக வடக்கு-கிழக்கு இணைப்பைக் கொண்ட அந்த மாகாணசபையில் பொலிஸ் அதிகாரமும் ஏற்கனவே ஓர் அங்கமாக உள்ளது.
அதன் அடிப்படையில் வடக்கு-கிழக்கு இணைந்த ஓர் இடைக்கால அரசாங்கமும் உருவாக்கப்பட்டது. ஆனால் போதாது என்பது பற்றி அன்று விடுதலைப் புலிகள் மட்டுமல்ல தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஏனைய அமைப்புக்களும் கூறின. எது போதாது என்று அதற்கு எதிராக தமிழர்கள் தம் குறைகளை முன்வைத்து போராடினார்களோ அத்தகைய போராட்டங்களினதும் அதற்கான இழப்புக்களுக்குப் பின்பும் அத்தீர்வை விடவும் கீழ்நிலையான வடக்கு-கிழக்கு இணைப்பற்ற ஒரு தீர்வை முன்வைக்கும் அரசியல் யாப்பைப் பற்றி பேசுவது எவ்வகையிலும் புதிய யாப்பாக அமையாது.
மாறாக அது இருந்ததைவிடவும் மேலும் கறையான் அரித்தது போல ஓர் அரிப்பிற்கு உள்ளாகிய ஓர் அரசியல் யாப்பை புதிய அரசியல் யாப்பு என்ற பேரில் முன்வைக்கிறார்கள். இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு அளிப்பது விந்தையிலும், விந்தையான செயலாகும்.
“தமிழ் மக்களின் நீண்டகால இன நெருக்கடிக்கு அரைகுறைத் தீர்வை எக்காரணங் கொண்டும் ஏற்றுக் கொள்ளமுடியாது” என்று வடமாகாண முதலமைச்சர் திரு.சி.வி.விக்னேஸ்வரன் அண்மையில் கூறியுள்ளமை கவனத்திற்குரியது.
அவர் தமிழ் மக்கள் பேரவையின் தீர்மானத்தை அக்கூட்டத்தில் வாசிக்கையில் “வடக்கு ௲ கிழக்கு இணைந்த தாயகத்தில் (அரச குடியேற்றத்தால் குடியேற்றப்பட்டவர்கள் நீங்கலாக) இயற்கையாக வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் இந்த சமஸ்டி அமைப்பிற்கு உரித்தானவர்களாவர்” என்று குறிப்பிட்டார்.
இங்கு அவர் வடக்கு-கிழக்கை ஓர் அலகாகக் கொண்ட ஒரு சமஸ்டிமுறையைப் பற்றி அவர் பேசுவதுடன் அரச குடியேற்றத்தை அவர் புறநீங்கலாக்கி பேசியுள்ளமையும் கவனத்திற்குரியது.
சுதந்திரத்தின் பின்பு அன்றைய இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ்.செனநாயக்கவினால் 1949ஆம் ஆண்டு கிழக்கில் ஆரம்பிக்கப்பட்ட திட்டமிடப்பட்ட அரச குடியேற்றத்தின் வாயிலாக குடியேறிய சிங்கள மக்களின் தொகையினால் கிழக்கு மாகாணத்த்pல் தமிழ் மக்கள் சிறுபான்மையினராக ஆக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் கையில் இலங்கை சிக்காமல் இருப்பதற்கு ஏதுவாக கிழக்கை சிங்கள குடியேற்றத்தால் கபளீகரம் செய்வதே ஒரு தீர்வு என்று கருதி கிழக்கில் இன்பரம்பல் முறையில் பாரீய மாற்றத்தை சிங்கள ஆட்சியாளர்கள் ஏற்படுத்தினர்.
இவ்வாறு சிங்கள குடியேற்றம் செய்யப்பட்ட பின்னணியில் கூடவே தமிழ்-முஸ்லிம் மக்களுக்கு இடையே பிரித்தாளும் தந்திரத்தை திறமையாகக் கையாண்டு தமிழரின் தாயத்தை இரண்டாகத் துண்டாடி கிழக்கை முற்றிலும் கபளீகரம் செய்யும் வகையில் இலங்கை ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றனர்.
இந்தியாவில் அஸ்ஸாம் மாநிலத்தில் சுதந்திரத்திற்குப் பின்பு குடியேறிய வங்காள இனத்தவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்று கூறி அஸ்ஸாமிய மக்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இறுதியாக அஸ்ஸாம் கணபரிஷத்து அமைப்புடன் இந்திய மத்திய அரசாங்கம் மேற்கொண்ட உடன்பாட்டின்படி 1960ஆம் ஆண்டிற்குப் பின்பு குடியேறிய வங்காள இனத்தவர்கள் வெளியேற்றப்படுவதான சமரசம் எட்டப்பட்டமையுடன்தான் அங்கு தீர்;வு காணப்பட்டு சமாதானம் ஏற்பட்டது.
பெரும்பான்மையினத்தவரான சிங்கள-பௌத்தர்களை கிழக்கில் தமது ஆட்சிப் பலத்தை பிரியோகித்துவிட்டு கிழக்கை பிரிக்கும் தீர்வை முன்வைப்பதும், தமிழ், முஸ்லிம் மக்களை பிரித்தாளும் தந்திரத்தை பிரியோகிக்கும் வகையில் செயற்படுவதும் அரசியல் தீர்விற்கும், சமாதானத்திற்கும் உதவப் போவதில்லை.
இங்கு கவனத்திற்குரிய விடயம் என்னவெனில் இப்போது அரசாங்கம் முன்வைக்கப்படும் தீர்வு ஒன்றும் புதியதல்ல. கூடவே ஏற்கனவே இடைக்காலத்தின் கீழ் உருவாக்கப்பட்ட வடக்கு-கிழக்கு இணைப்பை பிரித்து முன்வைக்கப்படும் மேலும் தேய்ந்துள்ள ஒரு தீர்வாகும்.
வடக்கு-கிழக்கை பிரிப்பதில் அரசாங்கம் மூன்று வகையில் வெற்றியைப் பெற்றுள்ளது.
1. வடக்கில் இருந்து கிழக்கைப் பிரித்து அவர்களை பலவீனமான நிலையில் முற்றிலும் இனமயமாக்கலுக்கு உள்ளாக்குவது. இதில் அவர்கள் நீண்டகால மூலோபாய திட்டத்தை நிறைவேற்றியுள்ளார்கள்.
2. தமிழ் - முஸ்லிம் மக்களுக்கு இடையே பிளவையும், மோதலையும் உருவாக்குவது.
3. பௌத்த சிங்கள இனவாத்திற்கும் அதை முன்னெடுக்கும் அரசுக்கு எதிரான போராட்டத்திற்குப் பதிலாக தமிழர்கள் மத்தியில் குழப்ப்ததை உருவாக்கி அதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான போராட்டமாக வடிவமைக்கும் முயற்சியைக் கொண்டுள்ளார்கள்.
இங்கு சிங்கள-தமிழ் மோதலை தமிழ்-தமிழ் மோதலாக வடிவமைககும் உத்தி இதன் வாயிலாக வெற்றி பெற்றிருப்பதைக் காணலாம்.
போராடாமல் தமிழ் மக்கள் எதனையும் பெறமுடியாது. ஓத்தோடி எதனையும் பெறலாம் என்பதற்கு கெட்ட உதாரணமாக 1965-70ஆம் ஆண்டு ஆட்சிக்காலத்தில் ஐதேகாவின் “தேசிய அரசாங்கத்தில்” தமிழரசுக் கட்சி இணைந்திருந்து அடைந்த தோல்வி பெரிதும் கவனத்திற்குரியது. தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்தோடு இணைந்து ஒத்தோடும் அரசியல் நன்மைக்குப் பதிலாக பெரிதும் தீமையைத்தான் ஏற்படுத்தவல்லது.
போர்க்குற்றத்திற்கான சர்வதேச விசாரணை, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி விடயத்தில் ஓர் அங்குலந்தானும் முன்னேறாத நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தோடு ஒத்தோடுவதால் எந்த உரிமையையும் தமிழ் மக்களுக்கு இதுவரை நிலைநாட்ட முடியவில்லை. மாறாக மேற்கூறப்பட்ட இருவிடயங்களிலும் எதிர்மாறான நடைமுறையே ஏற்பட்டு இனப்படுகொலையளார்களும், ஆட்சியாளர்களும் பாதுகாப்ப்படும் நிலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உதவிபுரிந்துள்ளமைதான் கைமேல் கண்ட மிச்சமாக உள்ளது.
இனப்படுகொலையையும், புவிசார் அரசியல் வாய்ப்பையும் முதலீடாக்கி அதன் அடிப்படையில் போராடாமல் தமிழ் மக்களுக்கான எந்த உரிமையையும் ஒருபோதும் வெல்லமுடியாது.
நெருக்கடிகளின் மத்தியிற்தான் ஆட்சியாளர்கள் பணிவார்களே தவிர ஒத்தோடுவதன் மூலம் அவர்கள் பணியப்போவதில்லை. மாறாக ஒத்தோடுவதை ஆதாரமாகக் கொண்டு தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை மேலும் அர்த்தமுள்ள வகையில் செயற்படுத்த உதவுவதாகவே முடியும். குறைந்தபட்சம் அல்ஹுசைனின் எச்சரிக்கையைக் கண்டு ஏமாற்றுகரமாகவேணும் ஜனாதிபதி காணாமல போனோர் தொடர்பான செயலகத்தின் அலுவல்களை ஆரம்பிப்பதற்;கு கையெழுத்து இட்டதைக் காணும் போது நெருக்கடியின்றி ஆட்சியாளர்கள் எதனையும் செய்யமாட்டார்கள் என்பதைக் காணலாம்.
இத்தகைய நிலையில் ஒத்தோடும் அரசியலை இனியாவது கைவிட்ட வடக்கு-கிழக்கு பிரிக்கப்பட்ட தீர்வை ஏற்க முடியாது என்ற அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழு அளவிலான சாத்வீகப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியதற்கான கடப்பாட்டைக் கொண்டுள்ளது.
தமிழ்-முஸ்லிம் தரப்புக்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள கடந்தகால கசப்பான உறவுகளை சரிசெய்வதற்கான ஆக்கபூர்வமான செயல்களில் இருதரப்பும் ஈடுபடவேண்டிய வரலாற்றுக் கட்டாயம் இருதரப்பிற்கும் உண்டு. இதில் முதல் அடியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்து முஸ்லிம் காங்கிரடன் இணைந்து தமிழ்-முஸ்லிம் நல்லுறவை உருவாக்க வேண்டியது இருதரப்பிற்கும் நன்மை அளிக்கக்கூடியதாகும்.
இலங்கை அரசின் பிரதான எதிரியாகக் கருதுவது ஈழத்தமிழர்களை அல்ல இந்தியாவைத்தான். ஆனால் இந்தியாவின் ஆதிக்கம் இலங்கையில் வேரூன்றாமல் தடுக்க வேண்டுமென்றால் ஈழத் தமிழர்களை அழிப்பதன்மூலமே அதற்கான வாய்ப்பை இல்லாமல் பண்ணமுடியும் என்ற கண்ணோட்டத்தின் அடிப்படையில் ஈழத் தமிழர்கள் மீது இலங்கை அரசு இன அழிப்பு நடவடிக்கைகளை முக்கால் நூற்றாண்டாக தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
அதேவேளை இந்தியாவை சமாளித்தே ஈழத் தமிழர்களை ஒடுக்க வேண்டுமென்பதால் அவ்வப்போது
இந்நிலையில் இந்தியாவிடம் இலங்கை அரசு அவ்வப்போது நேசக்கரம் நீட்டுவது என்பது தமிழரின் விடயத்தில் இந்தியாவை சாந்தப் படுத்துவற்காவே தவிர வேறில்லை. எனவே இந்தியாவை அரவணைக்கும் இலங்கை அரசின் போலியான கொள்கையின் பின்னால் தமிழ் மக்களின் இருப்புநிலையே காரணமாகும் என்பதும் கவனத்திற்குரியது.
இவ்வகையில் தமிழரை ஒடுக்கும் தனது இலக்கு நிறைவேறும் வரை இந்தியாவையும், முஸ்லிம்களையும் பொய்யாக அரவணைக்கும் போக்கை இலங்கை அரசு பின்பற்றும். நடைமுறை இதற்கு நேர்ரெதிர்மாறானதாகவே அமையும்.
உதாரணமாக புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்கு ராஜபக்ச அரசாங்கம் படைக்கு ஆள்திரட்டும் பணியிலும் தனது அரசியலை பலப்படுத்தும் பணியிலும் ஜேவிபியின் ஆதரவைப் பெறுவதற்காக அதனை பெரிதும் அரவணைத்தது.
ஆனால் புலிகளின் தோற்றக்கடிக்கப்பட்ட மறுகணம் நீருக்குள் இருந்து வெளியே எடுத்துப் போடப்பட்ட மீன் போல ஜேவிபியினரை ராஜபக்ச அரசாங்கம் தூக்கி எறிந்தது. புலிகளின் தோல்வியோடு தனக்கான தோல்வியும் இணைத்துக் கட்டப்பட்டிருந்ததை ஜேவிபியினர் முதலில் உணர்ந்திருக்கவில்லை.
இலங்கை ஆட்சியாளர்களிடம் இப்படிப்பட்ட ஓர் அணுகுமுறைதான் தமிழ் மக்களை அழித்து ஒழிக்கும் வரை இந்திய அரசு பொறுத்தும் முஸ்லிம் மக்கள் பொறுத்தும் உண்டு.
இவ்வகையில் தென்னாசியா சார்ந்த சமாதானத்திற்குப் பொருததமான அரசியல் செயற்பாடுகளும் தமிழ்- முஸ்லிம் நல்லுறவு சம்பந்தமான செயற்பாடுகளும் ஒருங்கிணைக்கப்பட்ட வகையில் ஈழத்தமிழர்களின் பிரச்சனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிந்திக்க வேண்டியதே சரியானது.
தமிழருக்கு உரிமையில்லாத இலங்கைத் தீவில் ஏனைய இனங்களுக்கும் உரிமை இருக்காது. கூடவே இலங்கைக்கு ஜனநாயகமும் இருக்காது.
மேற்கூறப்பட்ட இத்தகைய விடயங்களைக் கருத்திற்கொண்டு வடக்கு-கிழக்கு இணைந்த தேசிய இன அடிப்படையிலான ஜனநாயக ரீதியான அரசியலை முன்னெடுக்காமல் ஒடுக்கும் ஆட்சியாளர்களுடன் ஒத்தோடுவதன் மூலம் அவர்களது இன அழிப்புக் கொள்கைக்கு சேவை செய்வதாக முடியுமே தவிர நீதிக்கும், சமாதானத்திற்கும், ஜனநாயகத்திற்கும், பிராந்திய சமாதானத்திற்குமான செயலாக அது அமையாது.
இத்தருணத்திலாவது முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னான இலங்கை அரசுடனான அனுபவத்திலிருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு இனியாவது ஒத்தோடும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து வடக்கு-கிழக்கு பிரிப்பிற்கு எதிரான போராட்டத்தையும், போர்க்குற்றத்திற்கான நீதியையும் முன்வைத்து போராடும் உத்தியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளத் தவறினால் அது வரலாற்றில் தன்னை ஒருபோதும் திருத்திக் கொள்ளமுடியாத நிலைக்குப் போய்விடும்.
No comments
Post a Comment