கைபேசிகளில் ’புளுவேல்’ எனப்படும் நீல திமிங்கல விளையாட்டு இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் பரவி வருகிறது. இந்த விளையாட்டின் நிபந்தனைகள் இறுதியில் தற்கொலையை தூண்டுவதாக உள்ளதாக கூறி இதற்கு மத்திய அரசு தடை விதித் துள்ளது. புளுவேல்’ விளையாட்டை பரப்பும் இணைய தளத்தை முடக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெலகாவியில் மாணவர்கள் ’புளுவேல்’ விளையாட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. பெலகாவி நகரில் மத்திய அரசுக்கு சொந்தமான கேந்திர வித்யாலயா பள்ளியில் படிக்கும் 8-ம் வகுப்பு 9-ம் வகுப்பு மாணவர்கள் சிலர் கையில் நீல திமிங்கலம் போல் ரத்தக் கீறல்கள் காணப்பட்டன.
உடனே அந்த மாணவர்களை ஆசிரியர்கள் மீட்டு விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் கைகளில் இருந்தது, கீழே விழுந்ததில் ஏற்பட்ட காயம் என தெரிவித்தனர். ஆனால் திமிங்கலம் போல் காணப்பட்டதால் மாணவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.
14 மாணவர்கள் மற்றும் மாணவிகள் என மொத்தம் 20 பேர் கைகளில் இது போன்ற கீறல்கள் காணப்பட்டது. அவர்களை மீட்ட ஆசிரியர்கள் கவுன்சிலிங் நடத்தி புளுவேல் விளையாட்டின் ஆபத்து பற்றி எடுத்துக்கூறினார்கள். அதை மாணவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.
இந்த பள்ளியில் மொத்தம் 3000 மாணவர்கள் படிக்கிறார்கள். மற்ற மாணவர்களையும் புளுவேல் விளையாட்டில் ஈடுபடக்கூடாது என்று விழிப்புணர்வூட்டுமாறு கூறி அனைத்து துறை ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இது போல் கல்வி அதிகாரிகளுக்கும் அனைத்து பள்ளிகளுக்கும் இது போன்ற சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.
No comments
Post a Comment